Saturday, February 16, 2019

நீலக்கடம்பு



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடல் 52ம் அத்தியாயத்தில் தொடர்ந்து பதிமூன்று நாட்கள் போரிட்டபின்  படையினர் மனநிலையை குறித்து பார்பாரிகன் கூறுகிறான் "அவர்களின் உள்ளம் எல்லைகளை அழித்துக்கொண்டு கலந்தது. கலமே தான் என எண்ணும் மாயையை உதறிய நீர் வானமெங்கும் பரவியது. கொல்லப்படுபவன் கொல்பவனும் தானே என ஆனான். வீழ்ந்தவனில் இருந்து எழுந்து கொன்றவனில் குடியேறி இறங்கினான். நேற்று இன்றுகள், இங்கு அங்குகள், இது அதுக்கள் இயல்பழிந்தன. எங்கும் நிகழும் ஒன்றே அனைத்தும் என நின்றது என்றும் நிகழும் அது"  இதை எப்படி புரிந்து கொள்வது என தெரியவில்லை. நான் எல்லாம் தெருவில் சண்டை போட்டதோடு சரி.  எவ்வளவு பெரிய ஒரு உச்சகட்டம். இரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டை வீசிய ஒருவர் தான் செய்தது சரி என்பதுபோலவும் எந்த குற்ற உணர்ச்சி இன்றியும் கொடுத்த ஒரு பேட்டி நினைவுக்கு வருகிறது. போரில் என்ன மனநிலையில் இருந்திருப்பார் என இதை படித்தபின் ஊகிக்கமுடிகிறது. ஆனால் அந்த பேட்டியை படித்துவிட்டு அவரை மனதுக்குள் திட்டி வெறுத்தேன். இன்று புரிந்து கொள்ளமுடியும் போல தோன்றுகிறது. ஆனால் "எங்கும் நிகழும் " அதை எப்படி உணர்வது தான் என தெரியவில்லை. சிறு சிறு அளவில் நடப்பதை எல்லாம் மனதில் ஏற்றுவதை கடந்துவிட்டேன் என நினைக்கிறேன். இனி உக்கிரமாக நடக்காவிட்டால் ஒன்றும் இல்லை. 

பார்பாரிகன் " தனித்தவர்கள் நோயுற்றவர்கள். நோயுற்றவர்கள் நோயுற்றவர்களுடன் மோதும் ஒரு பெரும் நோய்க்களம் இப்புவி. பசியற்றவர்கள் உண்ண முடியாதவர்களைக் கொன்று அங்கே வெறியாடுகிறார்கள்"  என்கிறார்.என்ன மாதிரியான அவதானிப்பு என்று விளங்கவே இல்லை. தனிமையினால் , எப்படி நோயுற்றார்கள்? பசியற்றவர்கள் என்றால் யார்? உண்ணமுடியாதவர்கள் என்றால் யார்? ஏன் ? என்று பல கேள்விகள். பீஷ்மர், கர்ணன், ஜயத்ரதன், தர்மன் , என சொல்லிபார்த்து எல்லாரும்தான என மனம் திகைக்கிறது. இல்லை என்றும் கூறுகிறது. 

சாத்யகி தனது மைந்தருக்கு கூறும் இந்த வார்த்தைகள் உள்ளத்தை கலங்கடித்தது. இன்னும் ஒரு ஓரத்தில் ஆங்காரமும் தலை தூக்கியது. இந்த உலகின் நூல்களில் இதே தருணங்களை கொண்டுள்ளவற்றில்....,மைந்தரை பார்த்து ஒரு தந்தை செய்த உபதேசத்தில் அல்லது அனுபவ பகிர்வில் இதுதான் உச்சம்,“இப்புவியில் பிறப்பவரில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை முழுக்க தேடுவது ஆற்றுவதற்குரிய பணியை, கொள்ளவேண்டிய படைக்கலத்தை, செல்லவேண்டிய திசையை. அவை முன்னரே வகுக்கப்பட்டு இங்கு வருபவர் நல்லூழ் கொண்டவர் என்று உணர்க! தேடுபவர் தேடலை மட்டுமே அடைகிறார். நாமே நம் இலக்கை தெரிவுசெய்ய முடியாது. ஏனென்றால் அது இங்கு நிகழும் அனைத்தையும் நுண்ணறிவால் உணர்ந்துதெளிந்து அடையவேண்டிய விடை. அவ்வறிதலுக்கே திசையும் படைக்கலமும் பணிக்களமும் தேவையாகிறது. வழிகாட்டப்படுவோர் பேறுபெற்றோர். வழிநடத்தப்படுவோர் பெரும்பேறுபெற்றோர். அவர்கள் அடையாளம் காணப்பட்டவர்கள். தெய்வத்தால் கொடையேற்றுக்கொள்ளப்பட்டோர்.”ஆம், இளமையில் நம் வழி நம்மதே என்று தோன்றும். நாமே தேடியறிந்தாலென்ன என்று கனவுகாண்போம். எண்ணுக, இப்புவிவாழ்க்கையில் அவ்வண்ணம் நீங்கள் தெரிவுசெய்து அடைந்தவை எவை? தெரிவுசெய்தா அன்னை வயிற்றில் பிறந்தீர்கள்? அவள் தெரிவுசெய்யப்படவில்லை என்பதனால் பிறிதொருத்தியை அவ்வன்னைக்கு நிகரென வைப்பீர்களா என்ன? குலமும் குடியும் நிலமும் நாடும் தெரிவுசெய்யப்பட்டவை அல்ல. இளையோரே, உங்கள் மொழியும் தெய்வங்களும்கூட நீங்கள் பிறக்கையிலேயே அளிக்கப்பட்டுவிட்டவை. எண்ணிநோக்குக, தந்தையை ஒவ்வொருவரும் தேடிக் கண்டடைந்து வகுத்துக்கொள்ளலாம் எனில் இங்கே எவருக்கு நல்வாழ்க்கை அமையும்?”  என கூறும் சாத்யகியை பார்த்து ஒருகணம் திகைத்தேன். ஆசிரியனும் எஜமானும் ஆன கிருஷ்ணனின் நிழலில் இருந்தவன். இப்படி பேசவில்லை என்றால் தான் அவன் அவரிடம் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை.  நீலகடம்பு என்றால் என்ன என தெரியாமல் விக்கிபீடியாவை சுற்ற அது வெண்முரசு விவாத தளத்துக்குள்தான் கூட்டி வந்தது. இது எதற்கான குறியீடு என என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. முதலில் இதுதான் நீலகடம்பு என்று இப்போதுதான் தெரிகிறது. 



ஏன் தனது குலக்கதையை சாத்யகி தனது மைந்தர்களிடம் கூறுகிறான் என நினைத்தால்  மனசோர்வே எஞ்சுகிறது. தனிமையை பற்றி எல்லாம் பேசிவிட்டு  பூரிசிரவஸ் தனிமையில் நிற்பதை பார்ப்பது எல்லாம் பார்க்கும் தொலைவில் தான் வாழ்வும் மரணமும் உள்ளது. கண்ணுக்கு தெரியும் போது வாழ்வா? சாவா ?  அது அவரவர் செயல்களுக்கு தக்கபடி என எண்ணிக்கொண்டேன். 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்