Tuesday, February 19, 2019

ஊழ்



ஜெ

சாத்யகி தன் மைந்தர்களிடம் இவ்வாறு சொல்லும்போது இதென்ன அபத்தமானதாக இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. அதிலும் அவன் மைந்தர்கள் எல்லாருமே கொல்லப்பட்டார்கள் என நமக்குத்தெரிந்தபின்னர் இது ஒருவகையான கண்மூடித்தனம் மட்டும்தான் என்றுதான் நினைக்கத்தோன்றியது

இப்புவியில் பிறப்பவரில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை முழுக்க தேடுவது ஆற்றுவதற்குரிய பணியை, கொள்ளவேண்டிய படைக்கலத்தை, செல்லவேண்டிய திசையை. அவை முன்னரே வகுக்கப்பட்டு இங்கு வருபவர் நல்லூழ் கொண்டவர் என்று உணர்க! தேடுபவர் தேடலை மட்டுமே அடைகிறார். நாமே நம் இலக்கை தெரிவுசெய்ய முடியாது. ஏனென்றால் அது இங்கு நிகழும் அனைத்தையும் நுண்ணறிவால் உணர்ந்துதெளிந்து அடையவேண்டிய விடை. அவ்வறிதலுக்கே திசையும் படைக்கலமும் பணிக்களமும் தேவையாகிறது. வழிகாட்டப்படுவோர் பேறுபெற்றோர். வழிநடத்தப்படுவோர் பெரும்பேறுபெற்றோர். அவர்கள் அடையாளம் காணப்பட்டவர்கள். தெய்வத்தால் கொடையேற்றுக்கொள்ளப்பட்டோர்

ஆனால் தொடர்ச்சியாக அவன் சொல்வதைக் கேட்கும்போது உண்மைதானே என்ற எண்னம் ஏற்படுகிறது.


தெரிவுசெய்தா அன்னை வயிற்றில் பிறந்தீர்கள்? அவள் தெரிவுசெய்யப்படவில்லை என்பதனால் பிறிதொருத்தியை அவ்வன்னைக்கு நிகரென வைப்பீர்களா என்ன? குலமும் குடியும் நிலமும் நாடும் தெரிவுசெய்யப்பட்டவை அல்ல. இளையோரே, உங்கள் மொழியும் தெய்வங்களும்கூட நீங்கள் பிறக்கையிலேயே அளிக்கப்பட்டுவிட்டவை.


நாம் நம் வாழ்க்கையில் எதையெல்லாம் வாழ்க்கைக்கும் மேலானவை, அதற்காக உயிரையே கொடுக்கலாம் என நினைக்கிறோமோ அவை எவையும் நம்மால் தேர்வுசெய்யப்பட்டு அடையப்பட்டவை அல்ல. அவையெல்லாமே நமக்கு கொடுக்கப்பட்டவைதான். ஆகவே வாழ்க்கையை முன்னரே தீர்மானிக்கப்பட்டவற்றுக்கு முழுமையாக அளிப்பதே சிறப்பானது என நினைத்தேன்

அதன்பின் ஓர் எண்ணம் உருவானது. உண்மையில் நாம் நமக்கான தெரிவுகளைச் செய்யலாம் என நினைத்தாலும் நமக்கு வேறுவடியே இல்லை. நாம் எப்படி என்னதான் செய்தாலும் நாம் என்ன செய்யவேண்டும் என்பது நம் பிறப்புக்கு முன்னரே முடிவுசெய்யப்படுவிட்டது

உங்கள்

பிரகாஷ்