Friday, February 15, 2019

செம்மணிக்கவசன்கார்கடலில் கர்ணனின் கவசமும் குண்டலங்களும் இரு இடங்களில் இதுவரையிலும் வந்துள்ளன. முதல் தருணம், அவனும் குந்தியும் சந்திக்கும் போது, தன் நண்பனுக்காக அவற்றை குருதி வார பிடுங்கி எறியவே துணிவேன் என்னும் இடம். இரண்டாவது பீமனைக் கொல்ல நாகபாசத்தை எடுத்து பிறகு அதை வைத்துவிட்டு அவனுக்கு உயிர்க்கொடை அளிக்கும் தருணம். இவ்விரு இடங்களையும் பற்றி நேற்று மதிய உணவிடைவேளையில் காளியும் நானும் விவாதித்துக் கொண்டிருந்தோம். குறிப்பாக பீமனுக்கு அது தெரிவதன் பொருள் என்ன என்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். பின்வரும் தெளிவை கண்டடைந்தோம்.

வெண்முரசில் கர்ணனின் கவசமும் குண்டலங்களும் நேரடியான பொருளில் வரவில்லை. மாறாக அவை ஒரு தொன்மமாக மறுஆக்கம் செய்யப்பட்டே வந்திருக்கின்றன. அவை அவனுடன் பிறப்பில் இருந்தே இருப்பதில்லை. முதன்முதலாக வண்ணக்கடலில் கருக்கிருட்டு வேளையில் கங்கையில் நீராடி எழும் கர்ணனிடம் அவன் தெய்வத் தந்தையான சூரியன் ஹிரண்யபாகுவாக தோன்றி அவனுக்கு அருள்கிறான். அப்போது தன் பொற்கதிர்களால் அருகில் இருந்த ஒரு கல்லை பொன்னாக்கி அவனுக்கு கொடுக்கிறான். கர்ணனோ அப்பொற்கல்லை கங்கையில் வைத்து தன்னலம் அற்ற, பிறர் பசி போக்க விழையும் ஒரு பேரறத்தான் ஒருவன் கையில் சென்று சேரட்டும் என வழங்குகிறான்.அத்தருணத்தில் தான் அவனில் முதன் முதலாக கவசமும், குண்டலமும் தோன்றுகின்றன. இதன் பிறகு அவை விழியிழந்தோருக்கும் (இளம் தீர்க்கசியாமர், திருதா மற்றும் கலிங்கச் சிற்பியான காளிகர்) சாமானியருக்கும் சில தருணங்களில் தெரிந்திருக்கின்றன. பிற கதாபாத்திரங்களுக்குத் தோன்றுவது மூன்று தருணங்களில்.

1. அங்க அரசன் சத்யகர்மா - வண்ணக்கடலில் கர்ணனின் அறிமுக பகுதியிலேயே கர்ணன் அரசனை சிம்மங்களிடம் இருந்து காப்பாற்றும் ஒரு இடம் உண்டு. சூதன் கையால் ஷத்ரிய அரசன் காப்பாற்றப்பட்டால் அச்சூதனைக் கொல்ல வேண்டும் என்பதே நெறி என பிறர் அவனைக் குறி வைக்க அவன் அரசனைத் தவிர பிறரைக் கொல்கிறான். அவன் வீரத்தைக் கண்டு தடுமாறி நிற்கும் அவ்வரசனுக்கு உயிர்க்கொடை நல்கும் கர்ணன், அங்கிருக்கும் சுனையில் தெரியும் தன் பிம்பத்தைக் காணும் படிச் சொல்கிறான். சத்யகர்மா கவச குண்டலங்களுடன் தோன்றும் கர்ணனைக் கண்டு திகைக்கிறான்.

2. ஜராசந்தன் - வெய்யோனில் ஜராசந்தனின் படகில் கர்ணன் ஜராசந்தனுக்கு தன் தோழமையை வழங்கி நூறாண்டு காலம் அஸ்தினபுரிக்கும், மகதத்துக்கும் இருக்கும் பகையைத் தீர்க்கும் தருணம். அதிகாலைச் சூரியனின் ஒளியில் கர்ணனின் கவசமும் குண்டலங்களை ஜராசந்தனுக்கும், அவனது பரிவாரங்களுக்கும் தெரிகிறது. இவ்விடத்தில் கர்ணன் தானே அக்கவச குண்டலங்களை பார்த்திருப்பதாகச் சொல்கிறான்.

3. பீமன் - கார்கடலில் போர்க்களத்தில் பீமனுக்கு உயிர்க்கொடை அளிக்கையில்

இது தவிர கர்ணன் அங்க நாட்டரசனாக முடி சூட்டப்படுகையில் வர்ணனையாக கவசமும், குண்டலங்களும் வருகின்றன.

வெண்முரசு கவச குண்டலங்களை கர்ணனின் கொடையைக் காட்டும் ஒரு படிமமாகவே கொள்கிறது. எப்போதெல்லாம் தனக்குப் பாதகமாகும் என்று தெரிந்திருந்தும், தன்னிடம் இருக்கும் நல்லியல்பால் மட்டுமே மானுடன் ஒருவனுக்குச் சாத்தியமாகாத கொடையை அவன் நிகழ்த்துகிறானோ அப்போதெல்லாம் அதைப் பெற்றவர்களுக்கு அவனது கவசமும், குண்டலங்களும் தெரிகின்றன. ஏனென்றால் தன்னை வெல்ல விளைந்து சமருக்கு எழும் தசமுக ராவணனுக்கே அவன் விழைந்த தோல்வியை அள்ளிக் கொடுத்த வெய்யோனின் பெருங்குணம் அன்றோ அவை. அவை அவனிடம் இருக்கும் வரை அவனை வாழ்த்தும் ஒரு நா இருந்து கொண்டே இருக்கும். அத்தகைய நா ஒன்று இருக்கும் வரை அவன் அழிவின்றி வாழ்வான்!!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன், காளிபிரசாத்