Monday, February 25, 2019

சொற்களின் பெருக்கு



அன்புள்ள ஜெயமோகன் சார்,

சொற்களின் பெருக்கு  வழியாய் எழும் வரலாற்றுக்கு அரக்கர்கள் அறைகூவுவது ஆச்சரியமாய் இருந்தது. ஏன் என்றால் உலகம் முழுக்க இப்போது இதுதானே நடந்து கொண்டிருக்கிறது. எதிர்காலம் என்றால் இனி பழைய வரலாறுதானா? என் ஒரு கணம் மனம் திகைத்தது.இதைத்தான் நான் உண்மையிலே வாழ்க்கை என்று நினைத்துகொண்டிருந்தேன். ஆனால் இப்போது புரிகிறது எதிர்காலம் இல்லை என பழைய வரலாற்றை மீண்டும் மீண்டும் மக்களிடம் கூறி அவர்களை வெறி ஏற்றும் செயலை தவிர அதன் மெய் ஞானத்தை அறியாமலே அழிவது. அரக்கர்களுக்கு சொல் ஆவநாழி அழிவதே இல்லை போலும். என்ன கத்து கத்துகிறார்கள்.சொல்லே இல்லாதவர்கள் வெறும் ஞானிகள் மட்டும்தானா?  இல்லை சொற்களை அறியாதவர்களா? தண்டகாரண்யம் என்றால் தண்டனை பெற்றவர்கள் வசிக்கும்  இடம் என விக்கிபீடியா கூறுகிறது. இன்றைய சத்தீஷ்கர், ஒரிசா,ஆந்திரா ,மகாராஷ்டிரத்தின் ஒரு பகுதிகள். அங்கு இருந்து  இலங்கைக்கு சென்றவர்கள் தான் இன்றைய சிங்களவர்கள்., ராவணன் அவர்களின் அரசனாய் இருந்திருக்கலாம் என எங்கோ படித்தது ஞாபகம் வந்தது.அவர்கள் தான் ராவணனை எடுத்து சென்றவர்களாக இருக்கும். ஆனால் அவன் வில்லன் போல் சித்தரிக்கபட்டிருப்பதினால் பவுத்தத்தை தழுவி இருக்கலாம். எல்லாமே சொற்கள். சொற்களில் இருந்து முளைத்தெளும் வரலாறுகள். பிறகு பிரிவினைகள் , சண்டைகள் அழிவுகள் . அமெரிக்காவும் ஐரோப்பாவும்  ஏன் உலகை ஆள்கிறது என்று இப்பொது புரிகிறது. அமெரிக்காவிற்கு பெரிய வரலாறு இல்லை. ஆகையால் குழப்பம் இல்லை. ஐரோப்பா நீண்ட வரலாறு உடையது. அனைத்தையும் சொற்களாக தோண்டி எடுத்து போட்டுவிட்டு  அரக்கத்தனமாக உலகை அழித்து உருவாக்கி தனது ஆவநாழியை அனேகமாக காலி செய்துவிட்டது. இனி  அதனிடம் இருந்து என்ன எதிர்பார்க்க?. நாம் உலகத்திற்கு என்னத்தை கொடுக்க? அதற்கான விடை நமது வரலாற்றின் மெய்ஞானம் உரக்க நமது மனதுக்குள் ஒலிக்கவேண்டும்., பிறகு அல்லவா உலகத்திற்கு கொடுப்பது.ஜெயமோகன் சார் அதற்கு உங்களைப்போன்ற ஓராயிரம்  பொன் கவசமிட்ட நெஞ்சுகள் வேண்டும். 

கார்கடலின் 61ம் அத்தியாத்தில் "ஒழியா அம்புகளுடன் ராமனுக்கு எதிர்நின்று போரிட்டபோது ஒரு கணத்தில் தன் உள்ளத்தில் சொல்லும் ஆவநாழியில் அம்பும் இல்லாததை உணர்ந்தார்" என்பதை வாசிக்கும்போது  ராவணனும் மெய்ஞானத்தின் தொடுகையை போர்க்களத்தில் தான் அறிந்திருக்கிறான். இந்த இரு குழுவுக்குமான முரண்கள் தான் போர்களம்.  உலகம் இருக்கும் வரை நீடிக்கும். சக்ரர் "நிஷாதருக்கும் கிராதருக்கும் அசுரருக்கும் அரக்கருக்கும் அவ்வண்ணம் பழைய பழியின் கதைகள் பலநூறு உள்ளன. நமக்கும் அவர்களுக்குமான போர் என்பது இந்த யுகத்தில் தொடங்கியது அல்ல. ஆனால் வரும் யுகத்தில் அது மறைவதற்கு வாய்ப்புள்ளது. அதன்பொருட்டு களமிறங்குவோம். அதை வென்று நம் கொடிவழியினருக்கு அளிப்போம்.” என கூறும்போது இது இன்னும் துலங்கியது. அலாயுதன் கூறும் சொற்களான "“நாம் தோற்கடிக்கப்படுவது அவர்களால் அல்ல, நம்மை எதிர்க்க அங்கே சூழ்ந்திருக்கும் அரக்கர்களால்தான். நான் இரவில் பலமுறை விண்ணிலெழுந்து பாண்டவப் படைகளுக்குள் செல்ல முயன்றேன். இருளிலேயே பாண்டவரை கொன்று மீளமுடியுமா என்று பார்த்தேன். அங்கே காவலுக்கிருப்பவர்கள் இடும்பர்கள். காட்டுநாய்களை மோப்பம் பிடிக்கும் நாட்டுநாய்கள் அவர்கள்" என்பதை வாசிக்கும்போது நெஞ்சு திடுக்கிடது. ஏன் என்றால் இது எனது நெஞ்சை நீங்கள் படித்தது போலவே இருந்தது. தலைவனுக்கு கீழ் வேலை பார்த்துகொண்டு, கூட இருப்பவர்களை குறை சொல்லி அவர்களுக்கு குழி தோண்டுவது கூடவே தலைவனுக்கும் , என்ன ஒரு அரக்கத்தனம்? .எப்படி கதி மோட்சம் கிட்டும்? வெறும் வரலாற்றை மட்டும் படித்து ஞானத்தை அடையாமலே போருக்கு எழுவது. ஆனால் அதற்கும் விடை "“இவர்களிடமிருக்கும் அத்தனை மெய்மைகளும் வெவ்வேறு போர்க்களங்களிலிருந்து இவர்கள் பெற்றுக்கொண்டவை போலும். அந்நெறிகளால்தான் இவர்கள் மேலும் மேலும் ஆற்றல்கொண்டவர்களாக ஆகிறார்கள்".  என அலம்புஷர் கூறுகிறார். ஆனால் உடனே அதை அலாயுதன் "வீண் பேச்சு " என கூற சிரிப்பு வந்தது. அரக்க பெரியவர்களுக்கு சொற்கள் இருக்கின்றன,ஆனால் அதை அதிகாரமாய் கடத்த தெரியவில்லை. தெரிந்தவர்களை கொண்ட சமுகம் அரக்கதனத்தில் இருந்து விடுபடுகிறது. அலம்புஷருக்கும் அலாயுதனுக்கும் நடக்கும் விவாதம் எனக்கு ஒரு விடுதலயையே அளித்தது. ஆனால் அவர்களின் முடிவினால் துரியோதனனின் நிலை ? 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்