அன்புள்ள ஜெயமோகன் சார்,
கார்கடலில் சாத்யகி- மைந்தர்கள் போல் நிறைய பேர் களத்தில் இருக்கிறார்கள். தந்தைகள் மகன்களுக்காய் பரிதவிக்கிறார்கள். ஜயத்ரதன்- பிருகதஹாயர் மகன் பாசத்திற்கு ஒரு உச்சம் என்றால் துருபதன்- திருஷ்டதுய்மன் தந்தை மீது கொண்ட பாசத்திற்கு ஒரு உச்சம். அவரின் வஞ்சத்தில் உருவானவன். வஞ்சத்தில் துயிலும் குழவி போல் துருபதனை திருஷ்டதுய்மன் பார்ப்பது மனதை கனக்க செய்தது. தந்தை தனது வஞ்சத்தை நிறைவேற்றிவிட்டே செல்லவேண்டும் எண்ணுகிறான்.இறந்துபோன கௌரவர்களின் வஞ்சமே அற்ற கண்களை நினைத்து பார்த்து அது தனக்கு என்ன பொருட்டாக இருந்தது என எண்ணிக்கொள்கிறான். நான் அபிமன்யு மட்டும்தான் மாபெரும் வீரர்களோடு போர்புரிய ஓடி ஓடி சென்றான் என எண்ணிகொண்டிருந்தேன். ஆனால் திருஷ்டதுய்மனும், துருபதனும் , பூரிசிரவஸும் எல்லாரும் இதையே செய்து கொண்டிருந்திருக்கிறார்கள். அவன் கடைசி ஜெனரேஷன். அவனுக்கு இந்த களத்தில் நிற்பவர்கள் எல்லாம் ஆசிரியர், மாணவன், நண்பர்கள், மாபெரும் வஞ்சம் கொண்டவர்கள் என அறியாமல் ஓடி முடிந்துவிட்டான். படைகளின் பெருக்கு கூட முடிந்துவிட்டது. இனி அனைவரும் பெரு வீரர்கள். அனைவரும் பதிமூன்று நாளில் தங்களின் ஆடி பிம்பங்களின் முன் ஒத்திகை பார்த்து மீண்டிருக்கிறார்கள். துரோணரை விட்டால் வாழ்வின் அடுத்த கட்டம் என்ன? என எண்ணி நொய்ந்து கிடந்த துருபதனும் பிரகாசமாகி இருக்கிறார்.
வெண்முகில் நகரம் 41ம் அத்தியாத்தில் இளைய யாதவரை சந்திக்கும் சாத்யகி,காம்பில்ய போரில் கௌரவர்களின் தோல்வி பற்றி அவரோடு அரசு சூழ்தலில் ஈடுபடுகிறான். அவனது திறமையை கண்ட இளைய யாதவர் அவனை பார்த்தனிடம் மாணாக்கனாக சேர்த்துவிடுவதாக கூறுகிறார். அர்ஜுனனின் மாணவன் சாத்யகி என்பதே மனதுக்குள் இப்போதுதான் நுழைகிறது. ஆதலால் தான் தனது ஆசிரியரின் ஆசிரியனாகிய துரோணரை அச்சம் என்பதை அறிய வைக்க முடிகிறது. ஆசிரியர்களுக்கு தான் எத்தனை முனைகள்.
ஸ்டீபன்ராஜ் குலசேகரன்