Sunday, February 10, 2019

தொடை



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கிராதத்தில் அர்ஜுனன் இந்திரலோகத்தில் இருந்து கிளம்பும்போது நடைபெறும் ஊர்வசி அர்ஜுனன் உரையாடலின் போது,ஊர்வசி சிறுவயது அர்ஜுனனின் காமத்தை  பெண்கள் நீராடும் போது பார்க்கும் அவன் கண்களின் வழியாய் நான் ஒரு கற்சிலையின் கண்ணாய் இருந்து கண்டேன் என்கிறாள்.அப்போது அர்ஜுனன்  “நீ ஏன் அன்று என்னை வந்து நோக்கினாய்?” என்றான். அதை ஏன் கேட்கிறேன்? இப்பொருளற்ற வினா வழியாக அத்தருணத்தை நீட்டிக்கொள்கிறேன். வெம்மைமிக்க அடுமனைக்கலத்தில் நீர்விட்டு குளிர்விப்பதுபோல. அவள் “ஒவ்வொருவருக்கும் ஒருத்தி. உங்களுக்கு நான்” என்றாள். “ஏன்?” என்றான். “நான் தொடையிலிருந்து பிறந்தவள்” என்றாள். “மானுட உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் பொருளுண்டு. தலை அறிதல். முகம் மகிழ்தல். கைகள் ஆற்றுதல். நெஞ்சு எதிர்கொள்ளல். தோள்கள் சுமத்தல். வயிறு எரிதல். தொடைகள் தாங்குதல். விழைவு தலையென்றாகிறது. ஆற்றல் தோளென்றாகிறது. இளவரசே, ஆணவமே தொடையென்றாகிறது.” அவன் “எவருடைய ஆணவம்?” என்றான். “எவருடையதென்றிலாது எங்கும் நிறைந்திருப்பவை உணர்வுகள். மானுடர்கள் அவற்றை எதிரொளிக்கமட்டுமே செய்கிறார்கள்.” 

தொடை என்றால் ஆணவம் என்று வெண்முரசு கூறுகிறது. நாமும் நமது ஆணவத்தை திருப்தி படுத்தும் செயல்கள் நடைபெறும்பொழுது , இல்லை நடைபெற்ற செயல்கள் நமது ஆணவத்தை திருப்திபடுத்தும் போது தொடை தட்டி "சபாஷ்" என கூறி கொள்கிறோம். நமது ஆணவத்திற்கு எதிர்கூவல் வரும்பொழுது பயத்தில், கோபத்தில் தொடை நடுங்க ஆரம்பிக்கிறது. முக்கியமாய் காமத்தில்  புதிய அழகான நம்மளைவிட எதோ ஒன்றில் கொஞ்சம் உயர்ந்த பெண் என்றால்  தொடை நடுங்குவது காதுக்கே கேட்கிறது. காமமும் ஆணவமா?  ஏனென்றால்  ஊர்வசியை கண்டு அர்ஜுனனின் தொடை நடுங்குகிறது. துரியோதனன் தொடை மட்டும் துணியால் மறைக்க படாதவன். ஆனால் மண்ணாசைதான்அவன் ஆணவம் . இப்போது மீண்டும் குருஷேத்ரத்தில் அனைவரும் தொடை தட்டி கொண்டு நிற்பதை பார்க்கும்பொழுது ,சிலர் ஆணவத்தை இழந்தவர்கள் சிலர் போர்க்களத்தில் ஆணவதிற்க்கான வாசலை பெற்றுகொள்கிறவர்கள். சிலர் சாவையே ஆணவமாய் வரவேற்பவர்கள். 

ஆனால் உடலின் ஒவ்வொரு உறுப்பும் குருஷேத்திரத்தில்  அனைத்து கடமைகளையும் ஒவ்வொருவரிடத்தில் செய்வதை பார்க்கும்பொழுது குருஷேத்திரத்தில் ஒரு நாளாவது இருக்க வேண்டும் என மனம் ஏங்குகிறது. வெண்முரசு கூறுவது போல் இதற்குதான் மனிதர்கள் " போர்..போர்" என்று ஏங்குகிறார்களா? 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்