Wednesday, February 13, 2019

வஞ்சங்கள்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலின் 43ம் அத்தியாயத்தை வாசிக்கும்போது பெரும் மனச்சோர்வு உருவாகியது . ஒரு சத்ரியன்  விரும்பாத ஒன்றை செய்யும்படி தந்தையினால் ஏவப்பட்ட ஜயத்ரதன் பெரும் குழப்பத்தில் இருப்பதும் கூடவே கிருதவர்மன் இருப்பதும்.  எத்தனை தருணங்களை ஞாபகபடுத்தும் வரி இது "பெருந்துயரிலிருக்கும் ஒருவரை விட்டுச்செல்வது எளிதல்ல. உடனிருப்பது அதைவிட கடினம். அங்கே உரிய சொற்கள் என ஏதுமில்லை. அப்போது எச்சொல்லும் பொருத்தமற்றவையே"  ....நான் வாசித்ததிலே மிகவும் இக்கட்டு நிறைந்த தருணம் என்பது " இரவு" நாவலில் கமலத்தின் சடலத்தை எரித்துவிட்டு வரும் மேனனை சரவணன் சந்திக்கும் தருணம். நானாக இருந்தால் அப்படியே ஓடி இருப்பேன் அல்லது பீதியில் காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரியில் படுத்துகிடந்திருப்பேன். அந்த நாவலை வாசித்து இந்த ஒரு தருணத்திற்க்காய் எத்தனை இரவுகள் தூங்காமல் இருந்திருக்கிறேன். இந்த அத்தியாயத்தை வாசித்துமுடிக்கும்போது கை நடுங்கிக்கொண்டே இருந்தது. மனம் பிசைந்தது.  இன்னொன்றும் புரிந்தது இருவரும் ஒருவகையில் கோழைகள் என நினைக்கிறேன், என்னைப்போல. ஒருவருக்கு சியமந்தக ஆசை . இன்னொருவருக்கு பாஞ்சாலி. வாசித்துகொண்டிருக்கும் எங்களுக்கும் எதோ ஓன்று. சாகவேண்டும் என முடிவெடுத்த  எத்தனை தருணங்கள் வாழ்க்கையில் கடந்து சென்றிருக்கிறது என நினைத்தால் மலைப்பாய் இருக்கிறது. ஆனால் அனைத்திற்கும் ஒரே சரடுதான் ஆசை ஏக்கம். அதை இழந்தாலும் வாழ்வதற்கு ஒன்றும் இல்லை. கிருதவர்மன் ஜெயத்ரதனை பார்த்து கூறும் இந்த வரியை  " நீங்கள் இப்போதிருக்கும் இந்த நிலையில் நான் இருந்திருக்கிறேன்”  "அவனை  மாதிரி நானும் இருந்திருக்கிறேன்" என கடந்த இரண்டு வருடங்களாக பலதடவை நான் கூறியிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் நினைப்பது உண்டு " ஏன் இந்த மாதிரி ஆட்களையே நான் மீண்டும் மீண்டும் சந்தித்து கொண்டிருக்கிறேன்? என்று. இப்போதுதான் தெரிகிறது,....அவர்களை மாதிரியே நான் செயல்களை ஆற்றிகொண்டிருந்திருக்கிறேன் என. செயல், விளைவு பலன் அதற்கான தொடர்புகள் என் நினைக்கிறேன். இல்லை செயலின்மை தோல்வி அப்படியே இருத்தல்  அதற்கான தொடர்புகள். இந்த குருஷேத்ரம் கொந்தளிப்பை அளிக்கிறது சார். இதற்கு முன் இப்படி கொந்தளித்த வரிகள் இந்திர நீலத்தில் த்யுதிமான் குறித்து சாத்யகி கூறும்  " ”பாஞ்சாலரே, தன்னை இழித்து உணர்பவனின் அனைத்து இலக்குகளும் பிழைக்கும். த்யுதிமானின் வாள் அவர் கையில் நிற்கவில்லை. அம்புகள் குறி தேரவில்லை. அவரது சொற்களெல்லாம் நனைந்த சிறகுகள் கொண்டிருந்தன” என்று வாசித்தபோது கொண்ட சோர்வு கொஞ்சம் நஞ்சம் அல்ல. இன்று ஜயத்ரதன். 

கிருதவர்மனை திருஷ்டதுய்மன் தெருக்களில் கட்டி இழுத்துவருவதை அப்போது வாசிக்கும்போதே கிருஷ்ணர் மேலும் திருஷ்டதுய்மன் மேலும் பெரிய எரிச்சல் கிளம்பியது. ஆனால் கிருதவர்மன் இவ்வளவு வஞ்சம் கொண்டிருப்பான் என நினைக்கவில்லை. அவன் முதல்முதலாக தனது வாழ்க்கையை திரும்பிப்பார்க்க ஆரம்பித்து இருக்கிறான். எங்கு போய் முடியுமோ? ஜயத்ரதன் கர்ணனுக்கு பிறகு  இரண்டாவது முறையாய் கிருதவர்மனிடம் மனம் திறக்கிறான். ஜயத்ரதனுக்கு அபிமன்யுவை காப்பாற்றும் தருணம் அமைத்தும் அவன் அதை செயல் படுத்தாது இருந்தது எல்லாம் போர்களத்தில் செல்லுபடியாகுமா ? அதற்கு எல்லாம் விலை உண்டா ? என்று நூறு தடவை என்னை நோக்கியே கேட்டுகொண்டிருக்கிறேன். ஒருவேளை இதன் உள்ளில் ஒளிந்துகொண்டிருப்பது தான் அறமா?  

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்