Friday, February 22, 2019

இறப்புகள்அன்புள்ள ஜெயமோகன் சார்,


கார்கடல் 57ம் அத்தியாயத்தில் "ஏகாக்ஷர் சொன்னார்: குருக்ஷேத்ரம் இறப்புகளால் கலங்கிவிட்டிருந்தது" என்று வாசிக்கும்போதுதான் மனம் கலங்க ஆரம்பித்தது. முதலில் பார்பாரிகன் கூறுகிறான் " குருஷேத்ரத்தில் நடை பெறுவது வெற்று கொந்தளிப்பு " என்று. அதுபோலவே சோமதத்தர் வெற்று உணர்ச்சிகளால் பூரிசிரவசின் மரணத்தை ஏற்க மறுத்து நகைக்கிறார். நடிக்கிறார். தான் செய்த தவறுகளை பூரிசிரவஸ் மேல் ஏற்றி வைத்து கொதிக்கிறார்.மது மது என கதறுகிறார். இது கிராமங்களில் ஒரு இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் நடப்பதை கண்டிருக்கிறேன். என்  கூட படித்த ஒரு பெண் சைக்கிளில் செல்லும்போது விபத்தில் உயிரிழந்துவிட ரோட்டோரத்தில் அவளின் உடல் சாக்குப்பை கொண்டு மூடபட்டிருந்தது.  ஊரில் அவளது அப்பாவிற்கு தகவல் சொல்ல செல்லும்போது அவரின் நிலையும் நடவடிக்கையும் சோமதத்தர் செய்வது போலவே இருந்தது. ஒரு ஐந்து நிமிடம் கழித்து அவளின் அம்மா "தேவி" என அலற அப்போது அந்த ஆண் ஓடிய ஓட்டம் மனதில் இருந்து கண்ணுக்குள் வந்தது. அந்த வெற்று கொந்தளிப்புகள்.ஆனால் அவர் நேராக சென்றது சீமை முள் மரங்களுக்குள் விற்கப்படும் கள்ள சாராயம்  குடிக்கத்தான். குடித்துவிட்டு அந்த பெண்ணின் உடலை பார்த்து அழுதது இன்னும் ஞாபகம் இருக்கிறது. போலிஸ் வருகிறவரை அந்த உடலை யாரையும் தொடவிடாமல் அழுதுகொண்டிருந்தார்.வேறு என்னதான் செய்ய? .இன்று இத்தனை உணர்ச்சி இருக்குமா ? என தெரியவில்லை. சென்னையில் இதேபோல் நடந்த ஒன்றில் அவளது பந்தங்களின் செயல்களை நேரடியாகவே கண்டதினால் கூறுகிறேன். 

துரியோதனன் கலங்கி பித்து பிடித்து அலைகிறான். " மது ,மது " என அலைந்து கலங்கி தெளிந்த குண்டாசிதான் அவனை சமாதான படுத்தவேண்டிருக்கிறது. பூரிசிரவஸ் அவனுக்கு மாப்பிளையாய் வரவேண்டியவன். அதை அவன்கூட நினைத்து படைகூட்டுக்காய் தவிர்த்திருக்கிறான். துச்சளை மீதுகொண்ட காதலை  கனவாய் உணரும் தருணம் பிடித்த ஓன்று . வெண்முகில் நகரம் 64ம் அத்தியாயத்தில் சல்லியருடன் சொற்போர் புரிந்து தோற்று படுத்துகிடக்கும் பூரிசிரவசின் கனவில் இளையவளாய் இருக்கும் தேவிகை மூத்தவள்  துசசளை  வந்து "வாள்புண் மிக ஆழமானது. ஆறுவதற்கு நெடுநாளாகும்.” பூரிசிரவஸ் “வாள்புண்ணா? எங்கே?” என்று கேட்டதும்தான் தன் வலதுகை வெட்டுண்டிருப்பதை கண்டான். “எங்கே?” என்று அவன் கேட்டன். “இங்கு போரில் கையை வெட்டும் வழக்கம் உண்டு. ஆனால் விரைவிலேயே கைகள் முளைத்துவிடும்….” துச்சளை சிரித்தபடி வந்து கட்டிலில் காலடியில் அமர்ந்தாள். “அறிந்திருப்பீர்கள், கார்த்தவீரியரின் ஆயிரம் கைகளையும் பரசுராமர் வெட்டிக்குவித்தார்.”பூரிசிரவஸ் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். “அதன்பின் யாதவர்கள் அனைத்துப்போர்களிலும் கைகளை வெட்டுவதை ஒரு பழிதீர்த்தலாகவே கொண்டிருக்கிறார்கள்.” “ஏன்?” என்றான். “அவர்கள் பழிதீர்ப்பது தெய்வத்தை“ என்று அவள் கரியமுகத்தில் வெண்பற்கள் தெரிய சிரித்தாள். “நான் விரைவில் நலமடைய விழைகிறேன்” என்றான் பூரிசிரவஸ். “நலமடைந்தாகவேண்டும் இளவரசே. நமது மணநிகழ்வுக்கு ஓலை எழுதப்பட்டுவிட்டது. மூத்தவர் அதை விதுரரிடம் அளித்துவிட்டார். ஆனால் அங்கநாட்டரசர் அதை ஏற்கவில்லை. பால்ஹிகக்கூட்டமைப்பினர் ஒருங்குகூடி வந்து கேட்டாலொழிய மகற்கொடை அளிக்கலாகாது என்கிறார்.” என்றபடி கனவு கண்டுகொண்டிருந்தவன். 

வெண்முகில் நகரம் 67ல்  தமகோஷ இளவரசிகளை சிறைபிடிக்க திட்டத்தில் இருக்கும்போது வரும் துச்சளையின் ஓலையை படிக்கும் போது "‘என் மணநிகழ்வு அரசியலாக்கப்பட்டுவிட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்" ஆனால் அதை அவனால் வாசிக்கமுடியவில்லை. அத்தனை நொய்மையானவனாக இருப்பதைப்பற்றிய நாணம் ஏற்பட்டதும் தன்னை இறுக்கி நிமிர்ந்து அதை நீட்டி வாசிக்கத் தொடங்கினான் என வாசிக்கும்போது மிகவும் அணுக்கமானவனாக உணர்ந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. பானுமதியை கவர காசிக்கு செல்லும்போது துரியோதனன் கேட்டும் துச்சளையின் மீது உள்ள காதலை துரியோதனனிடம் தெரிவிக்காமல் இருக்கிறான். அவன் கொஞ்சம் எல்லையை கடந்திருந்தால் துரியோதனன் சம்மதித்து இருப்பான். எதோ தாழ்வுணர்ச்சி. பிறகு அச்தினபுரிக்கு வருகைதரும் பாண்டவர்களை வரவேற்க செல்லும்போது தேவிகை, விஜயை இருவரும் அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் பேச அதை அறியும் துச்சளை திருமணம் ஆன பெண்கள் அப்படிதான் " நீ என்றும் அவர்களின் மனதில் இளமையாகவே நீடிப்பாய் " என்கிறாள். அப்படியெல்லாம் இருந்த பூரிசிரவஸ் கவுரவர்களின் பக்கம் இருக்கும் ஒரு கிருஷ்ணன் என்றே நினைக்கிறேன். கிருஷ்ணன் கொஞ்சம் புத்திசாலி .வீரன். மற்ற எல்லா குணங்களும் பூரிசிரவஸ் தான். இவன் ஒருவனை கொண்டு துரியோதனன் தான் தனது சகோதரர்கள் மீது உணமையிலே அன்பு வைத்துருந்தேனா என சந்தேகம் கொள்வது வரை செல்கிறார். குண்டாசியும் பீமனால் தலை உடைக்கப்பட்டு கொல்லபட்டான் என்பதை அறிந்து துரியோதனன் மட்டும்  சுடுக்காட்டை பார்க்க ஆசைப்படவில்லை  நானும்தான். இதுவும் வெற்று கொந்தளிப்புதானா? அப்படி என்றால் வாழ்வில் எதுதான் நிஜம் ? எல்லாம் மாயாதானா? 

ஸ்டீபன் ராஜ்