Wednesday, February 6, 2019

ஆணவம்




அன்புள்ள ஜெயமோகன் சார்,

அபிமன்யுவின் மரணத்தை குறித்த    வாசித்தபின் மனது கனத்தது என்று எழுத ஆசைதான். ஆனால் உண்மையில் அப்படி இல்லை,...அவன் மூளை சிதறி செத்தபின் மனதில் ஒரு திருப்தி வந்ததை நினைத்து எனக்கே  திகைப்பாய் இருநதது. அபிமன்யு எனக்கு மிகவும் பிடித்தவன். வரலாற்றில் எப்போதோ வாழ்ந்தவன். சிறுவயதில் கேட்டு அறிந்தது கொஞ்சம் தான்.அவனை குறித்து எனக்கு வெண்முரசு வழியாகத்தான் முழுதாய் தெரியும். ஏன் அவன் மீது இந்த மாதிரி ஒவ்வாமை கலந்த வெறுப்பு என இரண்டு நாளாய் யோசித்துகொண்டிருக்கிறேன்.


வீரமான அப்பா,அம்மா, ஒரு அரச தாய்மாமன் , இரண்டு பெரியப்பா , இரண்டு சித்தப்பா, பெரிய குடும்பம். தங்க கரண்டியில் பிறந்தவன். சிறுவயதிலே தனது ஆற்றலை நிருபித்தவன். இளங்கன்று போல ஆற்றல் வழிந்தோட அதில் எதையாவது செய்தவன்.அபிமன்யு பத்மவியூகத்தில் நிற்கும் போது "கர்ணனை மறு எல்லை வரை கொண்டு சென்று வீழ்த்தும்பொருட்டு பேரம்பொன்றை எடுத்தபோதுதான் தன்னைச் சூழ்ந்து கௌரவர்களின் அனைத்து முதன்மை வில்லவர்களும் நாணேற்றிய வில்லுடன், சினமெழுந்த கண்களுடன் நின்றிருப்பதை பார்த்தான். சிக்கிக்கொண்டுவிட்டோம் என்று உணர்ந்ததும் அவனுள் முதலிலெழுந்தது ஒரு களிப்புதான். பிற எவருக்கும் நிகழாத ஒன்று தனக்கு நிகழ்ந்துள்ளது. ஆயிரம் பல்லாயிரம் வருடங்கள் சூதரும் புலவரும் சொல்லி விரிக்கும் தகைமை கொண்ட ஒன்று. அக்களத்தில் பொருதி வீழ்ந்த பல்லாயிரவரில் ஒருவனாக அன்றி எப்போதும் தனித்தவனாக அவனை ஆக்கும் ஒன்று. உரக்க நகைத்தபடி அவன் கூவினான் வருக! கௌரவ வில்லவர் அனைவரும் வருக! வில்லென்றால் என்னவென்று நோக்கி அறிக!  என்று வாசிக்கும்போது தோன்றிய கசப்பு எதற்கு என்று தெரியவில்லை. 


கர்ணனின் நிலையோ பரிதாபம்... "கர்ணன் அபிமன்யுவை சூழ்கைக்கு உள்ளிழுக்கையில் ஊமைச்சீற்றம் கொண்டிருந்தான். அது அபிமன்யு மீதான சினமல்ல, தன் மீதான சினமும் அல்ல, இலக்கின்றி ஒவ்வொரு கணமும் உருமாறும் கசப்பு. எங்கு விழி படுகிறதோ அதன்மீது முழு நஞ்சையும் உமிழும் பொருமல். அபிமன்யு அவனை அறைந்து அறைந்து பின்னடையச் செய்துகொண்டிருக்கையில் ஒருகணம் அவன் அம்பினால் தன் நெஞ்சக்கவசம் உடைந்து உயிர் அகலக்கூடுமெனில் நன்றே எனும் எண்ணம் அவனில் வந்துசென்றது. பின் எங்கெங்கோ இருந்து முகங்கள் எழுந்து அவனை சூழ்ந்தன. இளிவரல்கள், அறைகூவல்கள், பின்னர் துளித்த ஒரு துளி விழிநீர். தன் சீற்றத்தை திரட்டிக்கொள்ள அவன் முயன்றான். ஆனால் நெஞ்சிலெழுந்த விசை விஜயத்தை சென்றடையவில்லை."  இதுவும் எதற்கு என்று தெரியவில்லை. ஏனென்றால் கர்ணன்  குந்தியின் மகன்கள் தவிர அனைவரையும் கொல்வெண் என்று துரியோதனனுக்கு வாக்குகுடுத்திருக்கிறான். மனித மனதின் பசப்புகளுக்கு அளவே இல்லை. ஆனால் கர்ணன் திடீர் என அவனது வஞ்சத்தை கண்டுகொள்கிறான். தனது தேரை திருப்பும் கர்ணனை பார்த்து  உரக்க நகைத்தபடி ஒருகணம் அவனை நோக்கிய அபிமன்யுவில் இளைய அர்ஜுனன் தோன்றி மறைந்தான்.  இதுபோல் பல ஒரு கணங்களை கண்டு எரிந்தவன் கர்ணன். நெருப்பில் பெட்ரோல் ஊற்றும் நகைப்பு. பாஞ்சாலி  துரியோதனன் இந்திரபிரஸ்த அரண்மனையில் வீழும்போது நகைத்த தருணம். மதுராவில் கர்ணன் தோற்று வரும்போது நகைத்த தருணம். அர்ஜுனன் இதேபோல் கர்ணனை பார்த்து பலதடவைகள் நகைத்திருக்கிறான். ஏளனத்தில் நகைத்து நகைத்து வெறியேற்றிய வாழ்க்கையில் கர்ணன் தவித்து வெளியேற நினைக்கும் போது குத்தும்  நகைப்பு அவனை தனது அனைத்து கட்டுகளையும் அவிழ்க்கிறது. அதுதான் அவனின் குணம் போல. ஒரு மாதிரி இது தமிழ் மக்களின் குணம் என நினைக்கிறேன். " என்ன அவன் மதிக்கல ? , என்னைய அவமானபடுத்திவிட்டான் என அம்பதுவயது ஆள் ஐந்தாம் வகுப்பு பையனை பார்த்து கூறுவது எல்லாம் சர்வசாதரணமாய் இருப்பது. இது அந்த பையனுக்கு தெரியுமா ,இவன் ஏன் இவர அவமானபடுத்தபோறான் என நினைத்திருக்கிறேன். குழந்தை மாதிரி தூங்கிகொண்டு இருந்தவனை பார்த்து எதுவும் ஓடவில்லை. பலியாடு ஞாபகம் தான் வந்தது.ஆனால் அபிமன்யு இந்த ஆணவத்தையும் தூக்கத்தையும் அஸ்தினபுரியில் துரியோதனனோடு இருக்கும்போதுதான் மெருகேற்றி கொண்டிருப்பான் என நினைக்கிறேன். பார்பாரிகன் கூறுகிறான் "ஆணவம் கூர்த்து முனை கொண்டு சூடிய ஒளி. எவ்வுணர்வும் உச்சமடைகையில் அது தெய்வங்களுக்குரியதாக ஆகிறது." என்று.

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்