Saturday, February 9, 2019

திருவிடம்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

பாஞ்சாலியின் மணத்தன்னேற்பு நிகழ்ச்சிக்காக  வரும் அரசர்களுக்கான இருக்கைகளை அமைந்திருப்பதை குறித்து வெண்முரசு " இருக்கைகளை அமைப்பதில் ஓர் திண்மையான ஒழுங்குமுறை இருந்தது. அது அப்போதுள்ள அரசர்களின் படைவல்லமை அல்லது நாட்டின் விரிவை அடிப்படையாகக் கொண்டு அமையவில்லை. தொன்மையான வேதகாலத்து நிலப்பிரிவினையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. முதல் மூன்றுவரிசைகளிலும் தைத்ரியம், சௌனகம், கண்வம், கௌசிகம் ஆகிய நிலங்களைச் சேர்ந்த அரசர்கள் அமர்ந்திருந்தனர். பின் வரிசையில் ஜைமின்யம், பைப்பாதம், சாண்டில்யம், கபித்தலம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மன்னர்கள் அமர்ந்திருந்தனர். காம்போஜம், வேசரம், ஆசுரம், வாருணம், காமரூபம், திருவிடம் போன்ற நிலங்களைச் சேர்ந்தவர்கள் அடுத்த வரிசையில் அமர்ந்திருந்தனர்" என கூறுகிறது. இதில் திருவிடம் என்பது கேரளா வா? இல்லை தமிழ்நாடா? ஆனால்  வெண்முரசு தமிழ்நாட்டை தமிழ் நிலம் என்றே கூறுகிறது. 


கிராதத்தில் " பாரதம் அறத்தின் குளிர்சுனைகள் என்பர் கவிஞர் "அதன் வெள்ளியலைகளே இமயம். குளிர்ந்திருண்ட ஆழமே திருவிடம் " என்று வருகிறது. ஆதலால்  இது கடலில் மூழ்கிய குமரியா?   விக்கிபீடியாவில் படிக்கும்போது "ஜெருசலேம் "மும் திருவிடம் என்று அழைக்கபடுகிறது. கிராதத்தில் அர்ஜுனன் அங்கு பயணம் செய்கிறான். வெண்முரசு எதை குறிக்கிறது சார்? முதலிலே பதில் கூறியிருந்தீர்கள் என்றால் மன்னித்துகொள்ளுங்கள். 


ஸ்டீபன்ராஜ்

அன்புள்ள ஸ்டீபன்

தொன்மையான நூல்கள் நதிகளின் அடிப்படையில், மலைகளின் அடிப்படையில் , சடங்குகளின் அடிப்படையில் பாரதத்தை பலவகாக பிரிக்கின்றன. பல பிரிவினைகள் வெண்முரசில் வரும். அந்தப் பிரிவினைகள் கூட ஒவ்வொரு நூலிலும் சிறிய மாற்றங்களுடன் தான் இருக்கும்

திருவிடம் - திராவிடம்- என்ற சொல் கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் நடுவே உள்ள நிலத்தைக் குறிப்பதாகவே பழைய தாந்த்ரிக நூல்களில் உள்ளது. சில நூல்கள் காஞ்சிபுரம் வரை திருவிடம் என்று சொல்லும். அதற்குக்கீழே தமிழ்நிலம்

ஜெ