Thursday, February 14, 2019

மகாபாரதக் கேள்விகள்



அன்புள்ள ஜெயன் அவர்களுக்கு,
        தற்போது NEETPG தேர்வுக்காக படித்துக்கொண்டு இருக்கும் ஒரு மருத்துவச்சி நான். எனது அம்மாவும் மாமாவும் தங்களது தீவிர வாசகர்கள். வெண்முரசு நாவலை தொடர்ந்து படிக்கும் என் தாயார் தொடர்ந்து என்னிடம் அதனை குறித்து பேசுவார். அபிமன்யு போரில் வீழ்ந்த அத்தியாயம் படிதப்பிறகு கலங்கி போனோம். அப்போது என் மனதில் வந்த ஐய்யதை தங்களிடம் கேட்க விரும்புகிறேன். பாரதம் முழுவதும் எல்லா அறத்தையும் தழுவி நடந்து எல்லோரையும் விட உயர்ந்து நிற்பது பீமன். ஆனால் முடிவில் மேருமலை ஏறி சொர்க்கம் செல்கையில் தருமனுக்கு முன்னால் வீழ்ந்து விடுகிறான். ஆனால் அறம் என்ற பெயரில்அறமின்றி திரௌபதியை இழிவு செய்து,சிறுபிள்ளையான அபிமன்யுவை தனியே போரிட செய்த தருமனால் மட்டுமே யாத்திரையை முடிக்க முடிந்தது. இதனை பற்றி ஆராய்ந்த ஒரு ஆங்கில வலைத்தளம் மகாபாரத்தை “subtle dharama” என்று குறிப்பித்தது. தருமம் ஒரு கரியபகுதியா ? ( IS DHARMA A GRAY AREA?)
இப்படிக்கு,
ஜனனி

அன்புள்ள ஜனனி

மகாபாரதநிகழ்வுகளும் கிருஷ்ணனின் ஆளுமையும் முரண்பாடுகள் எனத்தோன்றும் பல அடுக்குகள் கொண்டவை. ஆகவே ஒருவகையான முடிவிலாத ரகசியத்தன்மை அவற்றுக்கு உண்டு. இந்தக்காரணத்தால்தான் அவை தலைமுறைதலைமுறையாகப் பேசப்படுகின்றன. குழந்தையாக இருக்கும்போது நாம் கேட்கும் மகாபாரதக்கதை எளிமையானது. மகாபாரதத்தை அணுகி அறியுந்தோறும் அந்த எளிமை இல்லாமலாகும். எல்லா கணுவிலும் கேள்விகள் எழும். அந்தக்கேள்விகளுக்கு மகாபாரதத்திலும் நம் வாழ்க்கையிலுமாகப் பொருள்தேடுவதே நாம் செய்யவேண்டியது. அதுவே அதை வாசிக்கும் முறை. நமக்கு தெரிந்த விடைகளைப்போட்டு அதை மதிப்பிடக்கூடாது. நமக்குப்புரிந்தவரை அதை சுருக்கிக்கொள்ளக்கூடாது. அதை நோக்கி நாம் செல்லவேண்டும்

ஜெ