Friday, February 15, 2019

ஜகத்குரு



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

கார்கடல் அத்தியாயங்கள் 43, 44, 45.  ஜயத்ரனின் நிலை அவனும் கிருதவர்மனும் பேசிக்கொள்வது.  பிருஹத்காயரின் வருகை.  கைகளே  நாகங்களென அவரின் கட்டுண்ட நிலை.  இளைய யாதவரை அவர் சந்தித்து பேசுவதாக கூறப்படுவது.  குருஷேத்திரம் - குருவின் ஆலயம்.  குரு எங்கிருந்தாலும் அது மெய்மையின் கோயிலாகிறது.  குரு இளைய யாதவர்.  குருஷேத்திர களத்தை தன் பணிக்கு பயன்படுத்துகிறார்.  வெவ்வேறு வகைகளில் தளையுண்டவர்களை அவர் விடுவிக்கிறார்.  தன்னை அன்புடனோ வெறுப்புடனோ நோக்கிய எவரையும் அவர் கைவிடவில்லை.   எல்லோரையும் அறிந்துள்ளளார்  அவர்.  தவம் முயன்றவர்களையும் தத்துவவாதிகளையும் எல்லாத் தரப்புற்றோரையும் அவர்  குருஷேத்திரம்  வரவழைக்கிறார்.  பெண்களுடன் ராசலீலை என்று மோகன நாடகம் நடத்தி அருளும் அவர் ஆண்களுக்கு  களத்தில்  போர்நாடகம் அமைத்து அருள்கிறார்.  கீதை ஏன் குருநிலையில் அணுக்க சீடர்களுக்கு என்றல்லாமல் போர்க்களத்தில் என தரப்பட்டது? இதன் விடையை வெண்முரசு விரிவாக தருகிறது.  குருஷேத்திரத்தில் உண்மையில் வெண்முரசு கீதைக்கும் வெளியே கீதையை நிகழ்த்திக்காட்டுகிறது.  வெண்முரசில் இளையயாதவர் உருக்கொள்ளும் விதம் எப்போதும் எனக்கு வியப்பளிப்பது.  'ஜகத்குரு' என்று விளிக்க இளையயாதவரை விட எவர்தான் அதிகம் பொருந்திவிட முடியும்? 

அன்புடன்
விக்ரம்
கோவை