நான் ஆண் என்ற முறையில் ஆண்களுக்கான உளவியலை என் உளம் செல்லும் வழியை வைத்து புரிந்துகொள்ள முயல்கிறேன். ஆனால் பெண்களுக்கென தனிப்பட்ட உளவியலை எப்படி நான் புரிந்துகொள்வது? எவரும் தன் அடிப்படை உணர்வுகளை, மனதின் ஆழத்தில் தோன்றும் இச்சைகளை வெளியில் சொல்லுவதில்லை. நாம் பெரும்பாலான உணர்வுகளை நம்மிடமிருந்து நாமே மறைத்துக்கொள்கிறோம் எனும்போது மற்றவருக்கு விரித்துரைப்பது என்பது நடக்காத காரியம். ஆனால் தன்னுள் ஆழ்ந்து செல்வதன் மூலம் மனிதஉயிர்தொகையின் குணத்தை கண்டறிந்து அதிலிருந்து பெண்களின் உளவியலைப்பற்றி ஒரு ஆண் புரிதலுக்கு வரலாம். இது ஞானிகளின் வழி. இன்னொரு முறை பல நூறு பெண்களிடமிருந்து தகவல்களைப்பெற்று அதை பகுத்தாய்ந்து புரிந்துகொள்வது. இது அறிவியல் நிபுணர்களின் வழி.
இவ்விரண்டும் இல்லாத மற்றொரு வழி ஒன்று உண்டு. அது விலங்குகளின் நடவடிக்கையை ஆய்தல். ஏனென்றால் நாம் அடிப்படையில் விலங்குகள். நாம் சிந்தனை என்ற ஆடையை அணிந்து விலங்குகளிடமிருந்து நம்மை வேறுபடுத்திக்கொள்கிறோம். நம்முடைய அடிப்படை இச்சைகளுக்கும் விலங்குகளின் இச்சைகளுக்கும் வேறுபாடு எதுவுமில்லை. விலங்குகள் தம் இச்சைப்படி நடந்துகொள்கின்றன. ஆனால் நாம் அந்த இச்சைகள் மூலம் செயல்படுவது சமூக விதிகளுக்கு கட்டுப்பட்டதாக இருக்கிறதா, அதன் விளைவுகளால் வேறு பாதிப்புகள் வருகிறதா, என பலவாறு சிந்தித்தே அதை செயலாக்குவதைப்பற்றி ஒரு முடிவுக்கு வருகிறோம். அப்படி சிந்திப்பது ஒருவருக்கொருவர் அவர் அனுபவம், மனக் கட்டுப்பாடு, அவர் அற வழியில் கொண்டிருக்கும் ஈடுபாடு முதலியவற்றால் மாறுபடுகிறது. அதனால் நாம் விலங்குகளின் நடத்தையைப் புரிந்துகொள்ளுதல் போல மனிதர்களின் நடத்தையை புரிந்துகொள்ள இயலாதவராக இருக்கிறோம்.
பசித்திருக்கும் ஒருவனின் கண்கள் தெருவில் விற்கும் உணவுபொருட்களின் மேல் படும்போபோது அவன் முதல் எண்ணம் அதை உண்ணவேண்டும் என்பதாக இருக்கும். இது விலங்குகளுக்கு இயற்கையாக எழும் உணர்வு. மனிதனுக்கும் அப்படித்தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அடுத்து அவன் என்ன செய்வான் என நமக்கு தெரியாது. அப்படி தெருவில் விற்கும் அவ்வுணவை அவன், தான் உண்ணும் தகுதி கொண்டது என்று எண்ணி வாங்குவானா, அப்படி தகுதி உள்ளது எனக் கருதினாலும், அவனுக்கு பணமிருந்தால் அந்த பொருளின் விலையை சரியென நினைத்து வாங்குவானா பணம் கையில் இல்லையென்றால் தனக்கு கொஞ்சம் உணவு தரச்சொல்லி கெஞ்சுவானா அல்லது அப்பொருளைத் திருடிக்கொண்டு ஓடிவிடுவானா என்ற பலவற்றில் எது ஒருவன் நடவடிக்கையாக இருக்கும் எனபதை நாம் அறிந்துகொள்ள முடியாது. அதைப்போல ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும்போது அவன் மனதில் எழும் முதல் எண்ணம் எது வென்று அறிவோம். அடுத்து அவன் என்ன செய்வான் என்பதை பல்வேறு கூறுகள் தீர்மாணிக்கின்றன. அதே நேரத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் நீண்ட நாட்கள் ஒரு தீவு போன்ற இடத்தில் தனித்திருக்க நேர்ந்தால் அவன் மனம் எத்தகைய வழியில் செல்லும் என்பதையும் அது அவனை இறுதியில் எத்தகைய செயலுக்கு இட்டு செல்லும் என்பதையும் நம்மால் பெருமளவு யூகிக்க முடியும். சமூகமென ஏதுமற்ற நிலையில் அவன் வெறும் விலங்கென ஆகுதல் நடைபெற்றுவிடலாம்.
ஆகவே நாம் ஒரு விஷயத்தில் மனிதனின் அடிப்படை உணர்வை அவன் முதல் எண்ணத்தை, அத்தகைய சமயங்களில் விலங்குகள் எப்படி நடந்துகொள்ளும் என்பதை வைத்து நாம் அறிந்துகொள்ள முயலலாம். நாம் பெண் விலங்குகள் இணை சேர்வதில் அதன் நடத்தையைப் பற்றி சிந்திப்போம். ஆண் விலங்குகள் இணை சேர்வதில் அவசரத்தையும் முரட்டுத்தனத்தையும் காட்டுகின்றன. ஆனால் பெண் விலங்குகள் தன் இணையை தேர்ந்தெடுப்பதில் முக்கியத்துவத்தை காட்டுகின்றன. ஆண் விலங்குகளை தங்களுக்குள் மோத விட்டு அதில் வென்று வரும் ஆண் விலங்குக்காக காத்திருக்கின்றன. மலை ஆடுகளில் பெண் விலங்கு அப்படி வென்று வரும் ஆண் விலங்கைக் கூட உடனே ஏற்றுக்கொள்வதில்லை. அது மிக ஆபத்தான செங்குத்து மலை சரிவுகளில் தாவி ஓடி தன்னை பின் தொடர்ந்து ஓடி வரும்படி ஆண் விலங்கினை செய்கிறது. அத்தனை தேர்வுகளையும் வெற்றி பெற்ற ஒரு ஆண் விலங்கையே தன்னுடன் அது கூட அனுமதிக்கிறது. பரிணாமவியல் தத்துவத்தின் படி வலுவுள்ள சந்ததிகளை உருவாக்கும் உயிரினம்தான் நீடித்து இருக்க முடியும். ஒரு பருவத்தில் ஆண் விலங்கின் விந்தணுக்கள் எண்ணிக்கை பலகோடி என இருக்கும்போது பெண் விலங்குக்கு ஒரு சில கரு முட்டைகளே உள்ளன. ஆகவே அந்த ஒரு சில கரு முட்டைகளை அசட்டையாக பலவீனமான ஆண்விலங்கின் விந்தணுவிடம் இணை சேரும் வண்ணம் தன்னுடைய புணர்ச்சி இருந்துவிடக்கூடாது என்பதாக ஒரு பெண்விலங்கின் செயல்பாடு இருக்கிறது. ஆகவே இயற்கையின் வழியில் ஒரு பெண் விலங்கு மற்ற ஆண்விலங்குகளை தோற்கடிக்கும் பலம் வாய்ந்த உடலாற்றல் மிக்க ஒரு ஆண்விலங்கையே தன் துணையாக தேர்ந்தெடுக்கிறது.
இதையே சற்று நீட்டித்து சிந்தித்துப்பார்த்தால், ஒரு கற்காலப் பெண் தன் துணையை தேர்ந்தெடுப்பதில் இதைப்போல்தானே நடந்துகொண்டிருப்பாள் என அறியும். அவள் காமவயப்பட்டு கூட நினைப்பது திறனும் பலமும் மிக்க ஆணாகத்தானே இருந்திருக்கும்? மேற்கொண்டு அவன் தன்னையும் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையும் நன்கு காப்பாற்றுவானா என்ற நோக்கையும், அவள் தேர்வு செய்வதில் கவனம் கொண்டிருப்பாள். இன்றைய காலத்தில் ஒரு ஆணின் திறன் என்பது உடல் திறன் என்பதுமட்டுமல்லாமல், அறிவுத்திறன், செல்வமீட்டும் திறன், சமூகத்தில் சிறந்து விளங்கும் ஆளுமைத்திறன் என பலவகையில் வளர்ந்திருக்கிறது. ஆகவே இன்றைய பெண் தன் இணையை தேர்ந்தெடுப்பதில் இவற்றையெல்லாம் கணக்கில்கொள்கிறாள். எப்படி இருப்பினும் ஒரு பெண்ணுக்கு பலம் வாய்ந்த ஒரு ஆண்மகனை பார்த்ததும் இவன் ஆண் என்ற ஈர்ப்பு தோன்றலாம். ஆனால் அந்த எண்ணம் அவள் சிந்தையை எட்டும் முன்பாக அவள் கற்றிருக்கும் பண்பாடு, சமூக ஒழுக்கம் அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிந்துவிடலாம்.
இந்த உளவியலை வைத்து வாலியின் நாட்டுப் பெண்கள் தீர்க்கதமஸின் மேல் கொண்ட அச்சம், அருவருப்புடன் கூடிய காமத்தை நாம் புரிந்துகொள்ளலாம். அந்தப் பென்களின் உள்ளுறையும் ஆதி பெண்விலங்கு பலம் வாய்ந்த தீர்க்கதமசை தாம் இணை சேர தகுதிவாய்ந்த பலமும் திறனும் வாய்ந்த ஆண் இணையென கண்டு கொள்வதால் அவர்களுக்கு அவன் மேல் காமம் எழுகிறது. அவர்களின் நிலையை வெண்முரசு இவ்வாறு விளக்குகிறது.
பெண்களுக்குள் உறைந்த காட்டு விலங்குகள் தீர்க்கதமஸை ஒரு கணமும் மறவாதிருந்தன. அவரது சிறிய அசைவைக்கூட அவர்களின் தோல்பரப்பே அறிந்தது. தனியறைக்குள்ளும் அவரது விழியின்மையின் நோக்கை தங்கள் உடலில் அவர்கள் உணர்ந்தனர். கனவுகளில் எரியும் கண்களுடன் வந்து இரையுண்ணும் சிம்மம் போல உறுமியபடி அவர்களை அவர் புணர்ந்தார். விழித்தெழுந்து நெஞ்சழுத்தி அவர்கள் தங்களை எண்ணியே வருந்தி தலையில் அறைந்து விழிநீர் சோர்ந்தனர்.
ஆனால் அவர்களுக்கு அவன் பார்வையின்மை என்ற குறைபாடு மனவிலக்கத்தையும், அவனின் பண்பாடற்ற விலங்குத்தன்மை அவன் மேல் அருவருப்பையும் எழுப்புகின்றன. சுதேஷ்ணை சொல்கிறாள்:
அவரை எண்ணினாலே என் உடல் நடுங்குகிறது. அவரை மானுடன் என்று எண்ணக் கூடவில்லை. விழியின்மை அவரை மண்ணுக்கு அடியிலிருந்து எழுந்து வரும் இருட்தெய்வம் என ஆக்கியிருக்கிறது. அவருடன் என்னால் அணைய இயலாது” என்றாள்.
பிறகு அவள் சமூகத்தின் அனுமதி அவளுக்கு கிடைக்கும்போது, அவள் கணவனே அவளை அனுமதிக்கும்போது பண்பாடு சமூகவிதிகள் போன்ற தளைகள் அறுபட்ட அவள் உள்ளிருக்கும் அந்தப் பெண்விலங்கு தீர்க்கதமஸ் என்ற ஆண் விலங்கை ஏற்றுக்கொள்கிறது. மிகவும் சிக்கலான அதிகம் பேசாத உளவியல் இன்று வெண்முரசில் கூறப்பட்டுள்ளதாக நான் நினக்கிறேன்