Sunday, January 10, 2016

சிவன் கை திருவோடு (வெய்யோன் - 19)


    
ஒரு புராணக் கதை உண்டு. பிரம்மனுக்கு முதலில் ஐந்து தலைகள் இருந்தன.  சிவன் அதில் ஒரு தலையை கொய்து விட்டதால் கோபமடைந்த பிரம்மன் சாபமிட்டுவிடுவார். அத்தலையின் மண்டையோடு,  ஒரு திருவோடாக மாறி சிவனின் கையில் ஒட்டிக்கொண்டுவிடும். சிவன்  அந்தத் திருவோட்டில் தெருத்தெருவாக் சென்று பிச்சைஎடுத்து அந்த ஓடு நிரம்பினால் மட்டுமே இந்த சாபத்திலிருந்து விடுபட முடியும். சிவன் ஊர் ஊராக பிச்சை எடுத்துக்கொண்டு செல்வார். ஆனால் அந்த திருவோட்டில் எவ்வளவு பிச்சையை போட்டாலும் அது நிரம்பவே நிரம்பாது. சிவன் அதற்காக் வெகுகாலம் சுற்றி அலைந்து பின் திருமாலின் துணையால் ஏதோ சூழ்ச்சி செய்து அந்த ஓட்டிலிருந்து விடுபடுவார் என அக்கதை இருக்கும்.
     
மனிதர்களின் மனம் அந்தத் திருவோட்டால் செய்யப்பட்டதோ என்ற ஒரு சந்தேகம் உண்டு. செல்வம் சேர்ப்பதில், புகழை நாடுவதில், பதவியில் இருப்பதில், காம நுகர்வில் என எதிலும் அவன் மனம் நிறைவடைவதில்லை. ஒரு மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும் அவன் மனம் போதும்  என்று திருப்தி கொள்ளாமல் இன்னும் இன்னும் என்று ஏங்கிக்கொண்டே டிருக்கின்றது.    

         அன்பைப்பெறுவதிலும், பிறர் மரியாதையைப் பெறுவதிலும் கூட  மனிதனுக்கு நிறைவு ஏற்படுவதில்லை.     என்னை யாரும் நேசிப்பதில்லை என்னை யாரும் மதிப்பதில்லை என மணிக்கொருதாரம் தன் வாழ்வை சலித்துக்கொள்கிறான். கண்ணில் படும் நபர்களிடம் தம்மீதான வெறுப்பு, அவமதிப்பு இருக்கிறதா எனத் தேடுகிறான். ஒவ்வொருவரையும் சந்தேகக்கண்கொண்டு பார்க்கிறான். எதிர் வருபவர் தன்னை வெறுப்பவர், அவமதிக்கக காத்திருப்பவர் என உறுதியாக நினைக்கிறான். அவனுடைய நெருங்கிய  உறவினர்கள் ஒவ்வொரு கணமும் அவர்கள் நேசத்தைக் காட்டிக்கொண்டு இருக்க வேண்டும், அவர்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனத்துடன் பேசவேண்டும் என்ற அவசியத்திற்கு ஆளாகிறார்கள். இந்தச் சங்கடத்தால் அவர்களின் உறவுகள் அவனைவிட்டு விலகிச் செல்கிறார்கள். அப்படி விலகிச்செல்வதை தான் வெறுக்கப்படுவது அவமதிக்கப்படுவது என தான் நினைத்தது உறுதிப்படுத்தப்பட்டதாக புரிந்து தன்னிரக்கத்தில் மூழ்கி வாழ்கிறான்.    தான் இந்நாள்வரை நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட தருணங்களை என்றும் அவன்  நினைவில் கொள்ளுவதில்லை. தான் அடைந்த வெறுப்புகளையும் அவமதிப்புகளையும் அரிய மணிகளைப்போல் தம் நினைவில் பத்திரமாக பொதிந்து வைத்துக்கொள்கிறான். அவ்வப்போது அதை எடுத்துப் பார்த்து  தன்னிரக்கத்தைக் கூட்டிக்கொள்கிறான்.


  விருஷாலியிடம் அன்பை அக்கறையை வாரி வழங்குகிறான் கர்ணன். ஆனால் அவை எதுவும் விருஷாலியின் மனதை  நிறைக்காமல் போகின்றன.     தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் ஒருவரை யாராலும் உயர்த்தமுடியாது. தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்ளும் ஒருவரின் வலியை யாராலும் போக்கமுடியாது.  கசப்பை சுவைத்தபடியே இருக்கும் ஒருவரின் உள்ளத்தில் இனிப்பை சேர்க்க முடியாது.  அவள் உச்சமான தாழ்வுமனப்பாண்மையை அவள் மனதில் பெரிய ஓட்டையென  கொண்டிருக்கிறாள். அந்த ஓட்டையில் கர்ணன் வாரி வழங்கும் அன்பு அக்கறையெல்லாம் சிதறி வீணாகிப்போகிறது. அவளின் மன வெப்பத்தில் கர்ணன் பொழியும் கனிவு மழை அவள் உள்ளத்தை தொடும் முன்பே ஆவியாகி விடுகிறது.  கரு மேகங்கள் கனிந்துகொட்டும் எப்படிப்பட்ட பெருமழையும் கவிழ்ந்திருக்கும் பாத்திரத்தை நிறைக்க முடியாது அல்லவா?

தண்டபாணி துரைவேல்