Monday, March 30, 2015

வெண்முகில் நகரம்-56-காது குத்தல்



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

கண்ணற்றவன் மருமகள்மீதுக்கொள்ளும் அச்சம் மிக அற்புதமான உள்ளத்தவிப்பின் வெளிப்பாடு. திரௌபதியைப்பற்றிய ஒரு அழகிய கோணம். அழகின் மென்மையை பற்றி பேசவந்த இடத்தில் அந்த அழகு மென்மையின் மின்னல் மின்சாரத்தை தொட்டுவிட்ட துடிப்பு. உண்மைதான் எத்தனை ஆழமகா சுடுகின்றது. 

“யாதவரே, மந்தார மலை பாற்கடலை என பெண்ணுள்ளத்தை அறிபவர் நீர் என்பது சூதர் சொல். சொல்லும், அவள் எத்தகையவள்? அகந்தை கொண்டவளா? ஆட்டிவைப்பவளா? கடந்துசென்று அமைபவளா? இல்லை அன்னைவடிவம்தானா?” கிருஷ்ணன் “ஏன், அவையனைத்தும் கொண்ட அன்னைவடிவாக அமையக்கூடாதா?” என்றான். திருதராஷ்டிரர் சற்று திகைத்து “ஆம், அதுவும் இயல்வதே. அதுவும்கூடத்தான்” என்றார்.

முழுக்க முழுக்க வடிவமே இல்லாமல் ஒரு வடிவத்தில் வந்து நின்று சுழற்றி அடிக்கும் திரௌபதி வடிவம். கண்ணில்லாதவன் கண்ட முழுவடிவம். கண்ணில்லாதவன் அகம் எத்தனை திகைத்திருக்கும். திருதராஸ்டிரன், ஒரு நிமிடம் தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்து தாவி தாய் என்னும் ஸ்தானத்தில் நின்று கருப்பையை தொட்டுப்பார்க்கும் தவிப்பு ஏற்பட்டது. ஒரு தந்தையாக திருதராஸ்டிரன் தொட்ட உச்சமான இடம். அவையில் கர்ணனிடம் திரௌபதி மூடிசூடி அரியணை அமர்வதில் உனக்கு வருத்தம் உண்டா அங்கநாட்டரசனே என்று திருதராஸ்டிரர் கேட்டபோதே அந்த இடத்தை அடைந்துவிட்டார். அந்த அக உருவத்தைதான் இன்று கண்ணனிடம் வேறு வேறு வழியல் வைக்கின்றார். அவர் வைக்கும் அத்தனையும் சரிதான். இத்தனை கூர் நோக்கத்தைதான் ஞானம் என்று சொல்கின்றார்களா?

எதிரதாக் காக்கும் அறினார் கில்லை
அதிர வருவதோர் நோய்- என்று வள்ளுவர் சொல்கின்றார். அங்கநாட்டு அரசன் திருமணம், துரியோதனன் திருமணம், பாண்டவர்களுக்கு திருமணம் என்று திருதராஸ்டிரன் செல்லும் எதிர்காலம் அற்புதம். விதியை மதியால் வெல்லாம் என்று சொல்கின்றார்ளே உண்மையா?

தன்நெஞ்சறிவது பொய்யற்க என்றும், நெஞ்சறியாது ஒரு வஞ்சம் இல்லை என்றும் சொல்கின்றார்கள். பெரிய பெரிய பாறைகள் வைத்து எல்லாம் கோட்டைகள் கட்டுகின்றார்கள். சின்ன அரசமரவிதையல்லவா விழுந்து முளைத்து கோட்டையை இரண்டாக்கிவிடுகின்றது.

திருதராஸ்டிரன் வெகுதூரம் சென்று பெரும்பெரும் கட்டுமானங்கள் வைத்து பங்காளி சண்டை வராமல் பார்த்துக்கொள்ள திட்டம்போடுகின்றான் ஆனால் வாரணாவதம் என்னும் அரசமரவிதை அந்த பங்காளிக்கோட்டைக்குள் விழுந்ததை ஊர் வம்பு, யாரே செய்த சதி என்கின்றான் திருதராஸ்டிரன். 

நம்பிக்கை என்பது வேறு, பாசம் என்பது வேறு. நம்பிக்கை என்பது உண்மையால் ஆனது அதற்கு வேண்டியவன் வேண்டாதவன் என்ற பாகுபாடு இல்லை. பாசம் என்பதற்கு வேண்டியவன் வேண்டாதவன் என்ற பாகுபாடு உண்டு. திருதராஸ்டிரன் துரியோதனாதிகளை நம்புவதும், சகுனியை நம்புவதும் அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையால் என்று அவன் சொன்னாலும் அவன் நம்புவது அவர்கள் மேல் உள்ள பாசத்தால். அவன் எத்தனை கதைக்கட்டினாலும் பெத்தபாசம் அவனை வாரணாவதத்தை செய்தது தனது மகன் இல்லை என்று சொல்லச்சொல்கிறது. அவன் நம்பி அதை சொல்லவில்லை, கண்ணன் நம்பவேண்டும் என்று சொல்கின்றான். சகுனி முன்னமே அறத்தின் கோட்டை தாண்டி இருக்கிறான் என்று சொல்லும்போது திருதராஸ்டிரன் கைவிரல்கள் நடுங்குவதே அதற்கு சாட்சி. 

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். 


இந்த கதையின் தொடக்கத்தில் சத்யகி உணர்வது திருதராஸ்டிரன் இருட்டில் அமர்ந்து இருக்கிறான் என்பதை. அந்த குறிப்புதான் எத்தனை அற்புதம் நிறைந்தது. கதை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து உச்சம்பெரும்போது திருதராஸ்டிரன் உடல்தளர்வதை இருட்டின் அசைவாக சாத்யகி காண்கின்றான். அன்புள்ள ஜெ இந்த குறிப்பின் வழியாக திருதராஸ்டிரன் எத்தனை பெரிய ஆழத்திற்கு இன்று ஒருநாளுக்குள் சென்றுவிட்டான் என்பது தெரிகின்றது. ஆதே வேளையில் எனது மகன், பாண்டவர்கள் என்ற பாகுபாட்டையும் வாய்வழியாக வெளியிட்டு கண்ணன் கண்டுகொள்ள நிற்கின்றான். நீங்கள் சும்மா படைபூக்கம் இல்லாமல் வெறுமனே எழுதி செல்லகின்றீர்கள் என்று சொல்லும் மக்கள் இதை எல்லாம் கண்டு இருட்டில் பகுங்கி கத்துகின்றார்களோ? போகின்ற போக்கில் இந்த மாதரி எப்படி எழுதுகின்றீர்கள் இந்த உண்மையை அவர்களுக்கு சொல்லிவிடுங்கள், அவர்களின் பிரச்சனையே இதுதான். கற்பனை பண்ணமுடியாத தூரத்திற்கு  இந்த ஜெபோகின்றார் அதனால அவர் எழுதுவது எழுத்தே அல்ல? சரிதானே. ராமனாக இருக்க முடியாது அதனால ராமன் மனுசனே இல்ல? ராமா..ராமா..ராமா...

திருதராஸ்டிரன் முழுவடிவம் கிடைக்கும் இன்றைய தினத்தில் அவன் அகம் கொள்ளும் பயமும் தெரியவருவதில் அவன் பாத்திரம் முழுமை பெருகின்றது. மற்றவர்களில் இருந்து தனித்துவம் நிறைந்த மனிதர்கள் உருவாக நினைக்கின்றார்கள் அது ஏதோ ஒரு காரணத்தால் இயலாமல்போகின்றது அல்லது முயலாமையால் இயலாமையாகின்றது. தனித்துவம் என்ற அந்த ஆசை இயலாமையாக ஆகும்போது வெளிப்படும் கண்ணீர்தான் உண்மையில் அவனுக்காக அவன் விடும் கண்ணீர். அந்த கண்ணீர் மற்றவர்களுக்கு பரிகாசமாக, அர்த்தம் அற்றதாக இருக்கும் ஆனால் அந்த கண்ணீரைவிடுபவன் மட்டுமே அறியமுடியும் அதன் ஆழமும் நீளமும். இந்த கண்ணீரை விதியின் கவிதை என்று சொல்லலாம், அதை விடுபவன்கூட அதை விளக்கிபொருள் சொல்லமுடியாது.

திருதராஸ்டிரன் விடும் கண்ணீர் விதியின் கவிதை. கண்ணன்போன்றவர்களின் நட்பு கிடைத்து அவன் எத்தனை அடித்து துரத்தினாலும் கூச்சமே இல்லாமல் அவன் பாதமே பதம் என்று விழுந்தால் தப்பிக்கலாம். அந்த கண்ணீர் நிற்க வாய்ப்பு உண்டு. அதற்கு பந்த பாசம் விடுவதில்லை. துறக்க மனம் வருவதில்லை. எமன் எடுத்துக்கொள்ளும்வரை தனக்கு கொடுக்கதெரிவதில்லை. கண்ணும் இல்லாமல், சொல்கேட்கும் செவியும் இல்லாமல், நடுங்கும் உள்ளத்தோடு இருட்டில் இருந்துக்கொண்டு கண்ணன்போகும் வேளையில் கண்ணனை செவியால் உற்றுநோக்கும் ஜென்மகங்கள் அறியுமா? இதைத்தான் வள்ளுவர் கேள்வியால் தோட்கப்படாத செவி என்கின்றாரா?

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. 

ஜெ இந்த கண்ணன் தூது வந்தவன்தான் என்றுதான் நினைத்தேன் இந்த திருக்குறளுக்கு பின்புதான் தெரிகின்றது அவன் வந்தது காது குத்தவென்று. அவன் காது குத்தியபோது அதை சரியாக பயன்படுத்தி இருந்தால் இந்த திருதராஸ்டிரன் இன்றும் இனியும் கண்ணனை செவியால் உற்றுநோக்கிக்கொண்டு இருக்கவேண்டி இருந்து இருக்காது. திருதராஸ்டிரன் அகத்தைவிட அவன் காதுக்கு கண்ணனை நன்றாக தெரிந்து இருக்கிறது அதனால்தான் அவனை அது உற்று நோக்குகின்றது, காதே ஒரு கண்ணாகி. அவன் சொல்லில் பயன் உண்டென்று காதே நீ அறிவாய். 

  
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.