Tuesday, March 31, 2015

பாலால் எழுதிய கவிதை









அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

குருடனாக இருந்தாலும் திருதராஸ்டிரன் மிக கூர்மையாக ஒரு உண்மைக்கண்டுக்கொண்டான்.அழகென்னும் ஆழ்கடலும், காமமென்னும் பெருங்கலமும்.

கண்ணன் என்னும் பெயருக்கு அர்த்தம் தருவதுபோலவே காரிருள் உடம்பே பெரும் கண்ணானவனும், கண்ணே இல்லாததால் கண்ணும் உடல்போல சதையானவனும் சந்தித்துக்கொள்ளும்போதுதான் இந்த உண்மைவெளிப்படுகின்றது. அந்த இடத்தில் உண்மை வெளிப்படுவதாலேயே வெட்டவெளியல் கண்ட ஒளிபோல மனதையும் கண்போல ஒளியாக்கி போகின்றது.

திரௌபதி பேரழகி என்பது கண்ணுள்ள ஒவ்வொருவரும் கண்டுக்கொண்டது. அந்த பேரழகு என்பது ஒரு பெருங்கடல், அந்த கடலுக்குள் நீந்தி திளைக்க, எல்லை காண, எல்லைத்தாண்ட ஒவ்வொரு ஆணும் கலமாவார்கள் என்பதை திருதராஸ்டிரன் கண்ட இடத்தில் திகைத்தேன். எந்த ஆடவரேனும் சும்மா இருந்தால் அவர்களை சும்மா இருக்க திரௌபதியின் அழகுவிடுவதில்லை. கடலால் அல்லவா கலங்கள் உருவாகின்றது.
ஆழகென்னும் ஆட்கொல்லி ஆட்களை மட்டுமில்லை தன்னழிவுக்கும் காரணமாகும் என்பதை இன்று முழுதும் புதிய கோணத்தில் வெண்முரசு திருதராஸ்டிரன் வாய்வழியாக மொழிந்தபோது, இந்த உண்மையின் சுழலில் சிக்கி கனவில் விழுந்து தவிப்பது போல் உள்ளது ஆனால் அது கனவல்ல கொருதிக்கொட்டும் உண்மை. 

பாஞ்சாலியின் வாழ்வில் அழகுப்படுத்தும்பாடு என்பதே அதன் பெரும் உச்சம் அதனை கொண்டுவந்து நிறுத்தும் தருணத்தில் திரௌபதி இன்னும் ஒருமுழம் வளர்ந்து தெரிகின்றாள். சீதையை அள்ளி எடுத்து சென்று சிறைவைத்து கொன்று உண்டுவிடுவேன் என்றன்கூட எண்ணமுடியாத கோணம் கர்ணன் திரௌபதியைப்பார்த்தது. ஒரு பெண்ணைப்பற்றி நெஞ்சில் விழும் காமவிதை எத்தனை பெரிய கொடுமை உடையது. 

ஆழ்கடலில் இயங்குவது வாழ்வென்று திளைப்பதற்கு என்று படைக்கப்படும்  கலங்கள் மோதி உடையும் அல்லது அமிழ்ந்துது அழியும், அதுவரை அவைகள் கடலை வெல்லவே முயற்சி செய்கிறது. எந்த அலையும், எந்த புயலும் அதற்கு ஒரு பொருட்டே அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரியில் அண்ணியை தனது இச்சைக்கு உட்படுத்த கொலை செய்தவன், பின்பு சிறையில் கழுத்தறுத்துக்கொண்டு செத்தவன் கதை சொல்வது காமத்தின் இருமுனை அழிவை.  

திருதராஸ்டிரன் திரௌபதியை நினைத்து கலங்கும் அந்த இடத்தில் திரௌபதியை மணந்ததால் பாண்டவர்கள் ஐவரும் அண்ணன் என்ற வடிவத்திலும், கர்ணனையும்சேர்த்து கௌரவர்கள் நூறுவரும் தம்பி என்ற வடிவத்திலும் நிற்கும் ஒரு தோற்றம் கண்டேன். அண்ணியோ, தம்பிமனைவியோ யாராக இருந்தாலும் பார்க்கும் விழிகளில் பெண்களில் உள்ள அன்னையின் வடிவம் மறைந்துபோகும் என்றால் என்ன நடக்கும் என்பதை திருதராஸ்டிரன் அறிவது அர்த்தம் உள்ளது. பதினோறு மனைவிகளிடம் நூற்றி இரண்டு பிள்னைப்பெற்ற அவனன்றி வேறு யார் காமத்தை அறிந்துவிடமுடியும்.

கடத்திற் குறத்தி பிரான் அருளால் கலங்காத சித்தத்
திடத்திற் புணையென யான்கடந்தேன் சித்ர மாதர் அல்குல்
படத்திற் கழுத்திற் பழுத்த செவ்வாயிற் பனையில் உந்தித்
தடத்திற் தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே- என்று அருணகிரி நாதசுவாமிகள் கந்தர் அலங்காரத்தில் சொல்கிறார்.

பெண் அழகாக இருப்பதும், அழகே காமத்தின் ஆட்சிப்பீடமாவதும் பெண்செய்த குற்றமா? தியாகேஸ்வரி மட்டும் இல்லை காமேஸ்வரியும் அவள்தான். அவள் அன்னை என்பதை அறியும் நாள்வரும் நாளில் அவள் அன்னை இன்றி வேறு ஒன்றும் இல்லை. அன்னை என்று அறியும் நாள்வரும்வரை பெண் உடல் அன்றி மற்றொன்று இல்லை.

சீதையை முன்னம் இராவணன் பார்த்தது இல்லை, சூற்பநகையின் மூலம் கேட்டே அறிகின்றான். சீதையை முன்னம் அனுமான் பார்த்தது இல்லை. ஸ்ரீராமன் மூலம் கேட்டே  அறிகின்றான். ராவணனுக்கள் சீதை பெண் உடல் என்னும் ஆலகாலமாய் நிறைந்தாள். ஸ்ரீஆஞ்சநேயருக்குள் சீதை அன்னை என்னும் அமுதமுமாய் நிறைந்தாள். இங்கு சீதை செய்தது எதுவும் இல்லை. எல்லாம் மனம் செய்த மாயம். அவனுக்கு எமன்வீடும், இவனுக்கு அழியா புகழ்வீடும் அவள் தந்தாள். தந்ததால் அவளே இருவருக்கும் அன்னையும் ஆகினாள்.  

கண்ணன் சொல்வதுபோல் திரௌபதி “அனைத்தும் கொண்ட அன்னை வடிவம்” 
திருதராஸ்டிரன் இடத்தில் நிற்கும்போதுதான் திரௌபதி அமுதம்பாதி, ஆலகாலம்பதி சேர்ந்து செய்த சிற்பம் எனத்தெரிகின்றது.

புலன்வழி செல்லும் ஆடவன் ஒருவனுக்கு, அவனுக்கு அவனே எமனாகின்றான். புலன்வழி செல்லாத பெண்ணுக்குகூட அவளே அவளுக்கு எமனாக இருப்பதை நினைக்கையில் நெஞ்சம் கனக்கிறது.

இறைவா!
பாலால் எழுதிய கவிதைக்கு
சிலநேரம்
குருதியால் முற்றுப்புள்ளிவைக்கும்
கொடியவானா நீ?
..... .....   ....
ஏன் இந்த மௌன புன்னகை?
... .... .....
பாலே அன்னையின் குருதியடா என்கிறாயா?
 ... ... ... ....

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்