Thursday, March 19, 2015

கிருஷ்ண கூட்டம்



சாத்யகி பற்றி யோசித்து கொண்டு இருந்தேன். கிருஷ்ணன் தன் குல ஆட்களை நம்பிக்கைகுரிய வேலைகளுக்கு வைத்து இருந்தது இயல்பாக இருந்தது. தன் சுற்றமும் குலமும் வாழ மேம்பட யோசித்து சேர்ந்த பூர்சிவரஸ் மற்றும் இவனுக்கும் எவ்வளவு வேறுபாடு. முழுமையான ஒப்படைத்தல் அல்லது பணிதல்....அடி என்றால் துரத்தி அடித்து அனுப்பிவிடும் ஒரு வேட்டைகாரனின் காவல் நாய் அல்லது மிக சிறந்த ஒரு படை தளபதி ஆவதின் ஆரம்ப படிகளில் செல்லும் பாத்திரம்?

 மலை இளவரசனுக்கு போர் முன் ஓடி தன் ஊர் மடி சேர விழைவது போல இவனுக்கும் அரசு மன்றில். புதியவர்களுக்கு வரும் ஒவ்வாமை பற்றிய வார்த்தைகளும் உணர்வகளும். உள்ளே நுழைந்து தன்னை மறப்பது அல்லது தொலைப்பது வரை வரும் பழைய வாழ்வு நோக்கிய ஏக்கம் பற்றி மின்னி மின்னி செல்வதாக நன்று. 

மறுபடியும் மாயன். 

சாத்யகி நோக்கி திரும்பி சிரித்து துவக்கிய பேச்சு. அந்த வரிகளில் மனம் தானாக கூர்மையாகி கேரளத்தில் கருவறை திறக்கும் முன் கேட்கும் சிறு மணி ஓசைக்கு என விழித்திருந்து அவன் சிரித்து திரும்புகையில் மலர்ந்து சரிந்தது. வாசகர் சுவாமி தனக்கு பிடித்தமானதாக அவனின் உதடு கொண்டு உருகி செல்வது போல, நான் இவனின் மலர்தல் மேல், கனிந்த புரிதல் மேல், அணைத்து சென்றபடி அனைவரையும் ஆளும் மொழி மேல், தண்ணுர்வின் உச்சத்தில் வரும் மலர்தல் மற்றும் மகிழ்ந்து பொங்குதலுமான கணம் தோறும் வாழும் முறை மேல், தெளிவாக பாண்டவர் நாடு தேவையை உணர்த்தி தன் அரசுக்கு சாதகமானாதாக ஆக்கி நகர்த்தி செல்லும் diplomacy மேல், நதி வெல்ல ஒரு வருடம் தவம் செய்து வென்ற வேகம் மேல்..என பித்தின் எல்லை மெதுவாக பரவுகிறது 


மிக அழகாக நீலத்தை முன்னர் எழுதி விட்டீர்கள். அது கனவு. இது கத்தி தொட சீத்தும் குருதியின் விரைவு. அது மேக உலா. இது நகர் உருவாக்கி அதிர ஆடும் நடனம். 

சிறுவன் ஒருவன் சிறு குச்சியால் செடிகளை விசிறியபடி காட்டுக்குள் மகிழ்ந்தபடி செல்லும் முகம் எப்போதும் இவனிடம் இருக்கும் போல. வசீகரன்.. வான் தொடும் நெடுமால் கை எப்போதும் தன் தோள் மேல் இருக்க பெற்ற ஆசிர்வாதன். பிடிக்கா விட்டாலும் பிடித்து கொள்வான் போல இந்த உள்ளம் கவர் கள்வன். கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண

அன்புடன், லிங்கராஜ்