Friday, March 27, 2015

கதைகளின் வைரம்
அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

வெண்முகில் நகரத்தின் இன்றைய பதிவு வெல்லமுடியாத அற்புதம் கொண்டது. இது கதைகளின் வைரம். 

வாழ்வின் இருட்டையும் ஒளியையும் கண்மூடிக்கண்டு, இருளையே ஒளியென்றும், ஒளியை இருட்டென்றும் சொல்லி நகையாடுவது, நகையாடுவதையே வாழ்வென்று இருமாந்து இருப்பது. வாழ்நாள் எல்லாம் பொன் சேர்த்து வாழ்க்கையை பொன்னாக்கிவிடவேண்டும் என்று ஒரு பொருளாளனும், பொன்னை மண்ணை போகத்தை இழந்து வாழ்வை அருளாக்கிவிடவேண்டும் என்று ஒரு அருளாளனும் அல்லவா அகத்தில் அமர்ந்துக்கொண்டு ஒருவனை ஆட்டிப்படைக்கிறது. 

உனைதினம் தொழுதிலன் உன்இயல்பினை
உரைத்திலன் பலமலர்கொடு உன்னடியிணை
உறப்பணிந்திலன் ஒருதவமிலன் உனது அருள்மாறா
உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொடு உன்சிகரமும் வலம்வருகிலன்
உவப்பொடு உன்புகழ் துதிசெயவிழைகிலன்-என்கின்றார் அருள்திரு அருணகிரிநாதர் சுவாமிகள். ஒரே சொல்லில் சொல்வது என்றால் எனக்கு பத்தி இல்ல என்கின்றார். பக்தி இல்லாமல் போவதற்கு காரணம் பணிவு இல்லாமல்போது. பணிவு இல்லாமல்போவதற்கு நான் கர்த்தா என்ற ஆணவம் காரணம். ஆணவமே ஒரு நாற்றமாகி எந்த ஒரு உயர்வையும் அழுக வைத்துவிடும் என்று காட்டிப்போகும் விஸ்வகர்மாவின் பாத்திரம் அற்புதம். விஸ்வகர்மா அதை தவத்தில் அமர்ந்து அறிந்தான் என்று காட்டும் இடத்தில் மானிட அகம்போடும் வேஷமும் அது அறிந்துக்கொள்ள கடக்கவேண்டிய தூரத்தையும் கண்டு அதிசயத்தேன். மானிட அகமே விஸ்வகர்மாவாகி நிற்கும் அந்த தருணம் ஒரு கொடை.

//மண்ணை முழுமையாகவே அகற்றினான் விஸ்வகர்மன். பொன்னன்றி பிறிதேதும் அங்கில்லாதபடி செய்தான். மண்விலகி சிற்பக்கலை முழுமையடைந்தபோது நகரம் இறந்துவிட்டதை உணர்ந்தான். அதிலிருந்து மெல்லிய நாற்றமெழத்தொடங்கியது. அது எதன் நாற்றமென தேடினான். சிலசமயம் குருதி. பிறிதொருசமயம் அது சீழ். அவ்வப்போது உப்பு. அந்த இழிமணமென்ன என்று கண்டறிய முடியவில்லை. ஆயிரமாண்டுகாலம் ஊழ்கத்திலாழ்ந்து அறிந்தான் அது தேங்குவதன் நாற்றம் என. தேங்கும் நீரும் தேங்கும் தழலும் இழிமணமாகும். தேங்கும் பொன்னும் அவ்வண்ணமே//

அன்புள்ள ஜெ இந்த இடம் மிகமிக பெரும் உயரம். ஒவ்வொரு கலையும் உயிர்பெறவேண்டும் என்பதற்காகத்தான் மனிதன் உயிரைவிடுகின்றான். கலை உயிர்பெறும்போது அவனின் ஆணவம் எழுந்து வந்து கலையை நிற்கவைத்து அவனை சாய்த்துப்போடுவதை மீண்டும் மீண்டும் கண்டுக்கொண்டே இருக்கின்றோம். 

ஒவ்வொரு வளர்ச்சியும் ஒரு உயிரோட்டம்தான் ஆனால் ஒவ்வொரு வளர்ச்சியும் அக இயல்பை, இயற்கையை, அறத்தை இறந்துவிடசெய்யும் என்றால் அது கைவிடப்படும் நகரம் மட்டும்தான். 

ஒவ்வொரு பொன்னுக்காகவும் மனிதன் குருதி சிந்துகின்றான், காயம் படுகின்றான், பட்டக்காயத்தில் சீழ்கொள்கின்றான், வியர்வை சிந்துகின்றான், வியர்வையில் உடல் உப்பு பூக்கின்றான் ஆனால் அந்த பொன்னை பூவென்கின்றான். அது நாற்றமென்று அறியாமல் மீண்டும் மீண்டும் சேர்த்து நாற்றமெடுத்து வாழ்கின்றான். நாற்றமெடுத்து வாழ்வதே பெரும்வாழ்வு புகழ்வாழ்வு என்றும் சொல்கின்றான். இதை எழுதிவிட்டேனே தவிர அந்த நாற்றத்தில் நெளியும் புழு அன்றி நான் வேறு அல்ல, வேறு ஆகவும் முடியவில்லை. கரையேற பயமாக இருக்கிறது. தலைக்குமேல் பாரிஜாதமலர் வாசம் வீசும்போதும் அது என்ன நாற்றம் ஏன் என் தலைக்குமேல் வந்தது என்று அந்த கொடையாளியை எதிரி என்கின்றேன். 

வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்வதற்கும், வாழ்க்கையை வளர்ச்சிப்படுத்திக்கொள்வதற்கும் நிறை வித்தியாசம் இருக்கிறது. வாழ்க்கையை வளப்படுத்தி கொள்வதுமட்டுமே வாழ்க்கை என்று நம்பி நானும் திரிகின்றேன். அது அல்ல வாழ்க்கை வளச்சிப்படுத்திக்கொள் என்று வெண்முரசு சொல்கிறது. 

பூமியில் வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்வதே வாழ்க்கையை சிற்பமாக்குவது என்று எண்ணுகின்றேன். அகம் அப்படித்தான் நம்ப வைக்கிறது.  பூமியோ வாழ்க்கையை வளச்சிப்படுத்திக்கொள் என்று மீண்டும் மீண்டும் வாழ்க்கை ஒரு புல்முளைக்கும் மண் என்றுதான் சொல்லிச்சொல்லிச் செல்கிறது. ஒரு புல்லைக்கூட உன்னால் முளைக்க வைத்துவிடமுடியாதபோது நீ புல்லைவிடவும் எப்படி பெரிதென்கிறாய் என்று கேட்கிறது. ஆனால் புல்லின் முன்னும் பின்னும் அறியா எளியவனாகி அவற்றை அழித்து பொன்வேய்ந்துவிடவே நினைக்கின்றேன். போன்வேய்ந்துவிடுவதாலேயே வளம்கொண்டுவிட்டதாகவும் நினைக்கிறேன். கால்குறுகி, உடல்பெருத்து வாழும் வாழ்வு பெருவாழ்வென்று இளிக்கின்றேன். பொன்னில் பெருகிவரும் மணத்தை இழிமணம் என்று சொன்னவன் யார் என்று கேட்கின்றேன்? பாரிஜாதத்தின் மனத்தை இழிமணம் என்கின்றேன். எனக்குள் இருக்கும் கந்தர்வனின் இசையும், யட்சனின் மாயமும் தாண்டி அரக்கனின் ஆணவம் அல்லவா காலக்களத்தில் கதாயுதம் தூக்கி திரியவைக்கிறது. 

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!- என்றுபாடிய பட்டினத்தடிகள். குபேரனின் மானிட வடிவம் என்பார்கள். அவரைவிட பொன்னாற்றத்தை அறிந்த பிரிதொருவர் இல்லை என்பதால்தான் ஈசன் அவரை மனிதனாகப்படைத்து பிழைசெய்யும் மனிதருக்கு பாடிவை என்றாரா? எல்லாவற்றையும் எடைபோடும் மனிதன் இறைவனைக்கூட எடைப்போடுபவனாக்கி அவனுக்கு எடைக்கு எடை காணிக்கை செலுத்துவது அதிசயம். பொன்னையே பூவாக்கி அவன் பொற்பாத்தில் அர்சிப்பது அதிசயம். திசைகளை ஆடைகளாய் அணிந்தவனுக்கு தங்கத்தில் அங்கி செய்து அவனை சிறைவைப்பது அதிசயம். 

வானத்தில் பிறந்து மண்ணில் வாழ்க்கைப்பட்ட மங்கைகூட பொன்னில் எழும்நாற்றத்தை கணவனின் மணம் என்று  விரும்பும் இந்த மானிட வாழ்வு மீண்டும் மீண்டும் ஆழ்த்துவது ஆணவத்தில் ஆசையில் மட்டும்தானே? பாரிஜாதகாட்டில் இருந்து வந்து மண்ணில் விழுந்ததாலேயே பாரிஜாத வாசம் எங்கோ வீசும்போது ஒவ்வாமையில் குமட்டும் இந்த மனைவியரும் மக்களும் மீண்டும் மீண்டும் ஆழ்த்துவது பெரும் காரிருளில் அன்றி வேறு எங்கே?

அருணகிரி நாதர் சுவாமிகள் “இனி உந்தன் மலர்ந்து இலகும்பதம் அடைவேனோ” என்கின்றார். அந்த பாரிஜாதம் பூத்துதான் உள்ளது எங்கும் ஆனால் இந்த பொன்நாற்றம் விடுமா? ஜெயவிஜயர்களை வென்றும் வைகுண்டம் சென்றும் அந்த மலர்காட்டுக்கு சொந்தகாரனிடம் மல்லுக்கு நின்று கழுத்தறுபடாமல் ஓயுமா?

ஆணவமே நீதான் என்னை தலைகீழாய் நிருத்தி வானத்தை என் காலுக்குகீழ் என்கிறாய். ஆணவமே “நான் வாழ நீ ஒழிக” அப்பகூட ”நான்” வந்து நிற்கும் என்பதால் ”இறைவா வாழ்க!” 

இன்றைய சூதர்களின் கதை வேறு வேறு தளத்தில் சென்று நின்று மானிட அகத்தைப்பற்றி பேசினாலும் அது இன்றைய கதைசூழலுக்கு முற்காலத்தையும் பிற்காலத்தையும் காட்டும் ஒரு காலக்கண்ணாடியாக நிற்கிறது. உங்களின் கதைசொல்லும் ஞானத்தில் இது மீண்டும் ஒரு பெரும் வைரம். நன்றி ஜெ. 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்