வெண்முகில் நகரத்தின் முப்பத்து இரண்டாம் அத்தியாயத்தில் சகுனி அறிமுகமாகிறார். அதிகம் பதறாது சில சொற்களைப் பேசுகிறார். பகடையாட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அச்சொற்களில் வாழ்க்கையும், போரும் வந்து அமர்கின்றன. ”பகடைகளில் ஏறியமர்கின்றன நம்மை ஆளும் பேராற்றல்கள்” எனும் வாக்கியத்தில் திகைத்து நிற்கும் என்னை, “பேராற்றல் என்பது ஊழ்தான்; தெய்வங்கள்தான். ஆனால் அவை குடிகொண்டிருப்பது நம் அகத்தில். வெளிப்படுகையில் மட்டுமே அறியப்படுபவை அவை” என இயல்புக்குக் கொண்டு வருகிறார் சகுனி.
வாழ்வு தொடர்பாய் நம் ஒவ்வொருவரிடமும் முக்கியமான கேள்வி – வாழ்க்கை முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதா அல்லது தற்செயல்களின் தொகுப்பா? பலர் “முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது” என விடாப்பிடியாய்ப் பேசுகின்றனர். சிலரோ “தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பு” என்று அழுத்தமாய் வாதிடுகின்றனர். இரு தரப்புகளும் வாதங்களை அடுக்கித் தங்கள் தரப்பை நிலைநாட்டிக்கொள்ள முட்டி மோதிக்கொள்கின்றன. துவக்கத்தில் நானும் இரண்டு தரப்புகளாலும் அலைக்கழிக்கப்பட்டேன். ஓஷோ அறிமுகமானபோது அவ்விரண்டு தரப்புகளில் இருந்தும் முழுமையாய் விடுபட்டுவிட்டேன். ”வாழ்க்கை ஒரு புதிர். அதை ஆராயக்கூடாது. கோண்டாட வேண்டும்” எனும் ஓஷோவின் வார்த்தைகள் துவக்கத்தில் குழப்பத்தையே தந்தது. வாழ்வின் அனுபவங்களின் வழியாக அவரின் பார்வையே சரியானது எனும் தெளிவு கிடைத்தது. ஓஷோ வரையறுக்கப்பட்ட தெளிவை முன்வைக்கவில்லை என்பதும் அப்போது புரிந்தது. ”நீர்வழிப் படூஉம் புணைபோல்” எனும் புறநானூற்றுக் காட்சியை ஊழைக் கடந்து பார்க்க அவரே கற்றுத்தந்தார்.
சகுனியின் வார்த்தைகளின் வழியே வாழ்க்கையைப் பகடையாட்டமாகப் பார்க்கும் வாய்ப்பு இப்போது அமைந்திருக்கிறது. பகடையாட்டம் ஒரு விளையாட்டு; அது இரண்டு தரப்புகளுக்கு இடையான மோதலன்று. நாமோ பகடையாட்டத்தையே போராக மாற்றும் ’அறிவுத்திறன்’ கொண்டவர்கள். உண்மையில் அது விளையாட்டு மட்டுமே. வாழ்க்கையும் அப்படித்தான். ஒவ்வொரு பகடை உருட்டப்படுவதற்கு முன் நம்மால் உத்தேசிக்க மட்டுமே முடியும். என்றாலும், ஆட்டத்தின் விதிகள் முன்னரே நமக்குச் சொல்லப்பட்டிருக்கும். ஆக, பகடையாட்டம் முன்கூட்டித் தீர்மானிக்கப்பட்ட விதிகள் மற்றும் பகடைகளின் உருட்டலகளால் அமையும் தற்செயல் நிகழ்வுகளாலேயே முழுமை பெறுகிறது. முன்கூட்டித் தீர்மானிக்கப்பட்ட விதிகளிலோ, பகடை உருட்டலுக்குப் பின்னான விளைவுகளிலோ நாம் அதிகம் அலட்டிக்கொள்ளக்கூடாது. அதுவே பகடையாட்டத்தின் அடிப்படை. பகடையாட்டத்தின் விதிமுறைகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், பகடை உருட்டல் ஆடுபவர்களுக்கு புதிதான அனுபவத்தைத் தந்தபடியே இருக்கிறது. எதிர்பாராமையைக் குறித்த எதிர்பார்ப்பே அதை இன்னும் சுவையுள்ளதாக்குகிறது. அதனாலேயே தொடர்ந்து பகடையாடவும் செய்கிறோம்.
”மிகச்சிறியவை எல்லாம் வல்லவை. அவை மிகச்சிறியவை என்பதாலேயே பெரியவற்றால் தீண்டப்பட முடியாதவை.” எனக் கணிகர் குறிப்பிடுகிறார். பகடையாட்டத்தின் ஒவ்வொரு உருட்டலும் மிகச்சிறியவை. அதனால்தான், அவை என்னதான் ஆட்ட விதிமுறைகளில் தேர்ந்தவனாக இருப்பினும் ஊத்தேசிக்க முடியாத வெளிப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. உருட்டலுக்குப் பின்னேயே உருட்டலின் விளைவை நம்மால் தெரிந்து கொள்ள இயலும். வாழ்க்கையும் அப்படித்தான். சின்ன சின்ன அனுபவங்களால் ஆனது. அவ்வனுபவங்களை ’அறிவால்’ நாம் வடிவம்கொடுத்து வரையறுத்துவிட முடியாது. அப்படியே அனுபவங்களில் மிதக்கத் துவங்குவதன்றி வேறு வழியில்லை. ”நமது முதுகுதான் என்றாலும் அதை நம்மால் பார்த்து விட முடியாது” என்பதை ஒப்புக்கொள்வதில்தான் உயர்ஞானம் இருக்கிறது. ஞானம் என்பது அறிவால் அடையப்பெறுவதல்ல; அறிவிலிருந்து விலகி இருக்கும்போது உணரப்படுவது.
முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.