Wednesday, March 25, 2015

கருமை




அன்புள்ள ஜெ,


           வெண்முரசில் ஒரு சின்ன சந்தேகம்.வெண்முரசில்  பாஞ்சாலி முதல் முக்கிய கதாபாத்திரங்கள் கருப்பு நிறமென்றே வருகிறதே.இதைப்பற்றி நீங்கள் ஏற்கனவே கூறியிருப்பதாக ஞாபகம்.இருந்தாலும் எனக்கு அது குழப்பமாகவே இருக்கிறது.வட இந்தியாவில் பெரும்பாலும் நல்ல நிறமாகவே எல்லாரும் இருக்கிறார்கள்.சமீபத்தில் மக்களவையில் எம்.பி ஒருவர் கூட தென்னிந்தியப் பெண்கள் கருப்பானவர்கள்.ஆனால் அழகிகள் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

       திரௌபதி உண்மையில் கருப்பானவள் தானா.இது போன்ற கேள்விகளை உங்களிடம் மட்டுமே கேட்க முடியும் என்பதாலே கேட்கிறேன்.

       காரணம் உங்கள் எழுத்துகளை அறிவதற்கு முன்பு வரை என் மனதில் ஒரு பெரும் குறையாகவே என் நிறம் பற்றி இருந்தது.நான் மாநிறமானவள்.நான் அதிகம் கேட்ட டயலாக் நீ கருப்பா இருந்தாலும் அழகா இருக்க என்பது தான்.அந்த இருந்தாலும் என்ற வார்த்தை எனக்கு தரும் வெறுப்பை விவரிக்கவே முடியாது.

          என் வட இந்திய நண்பர்கள் அனைவரும் நல்ல நிறமானவர்களே.அதனால் தான் கேட்கிறேன்.
      நான் வாசித்த எழுத்துகளிலுமே சிவப்பே பெரும்பாலும் அழகென்று வர்ணிக்கப் படுகிறது.ஜெயகாந்தன் ,சுஜாதா எழுத்துகளில் கருமையின் அழகைப் பற்றி வந்தாலும்,உங்கள் எழுத்துகள் மூலமே கறுமையின் முழுமையை நான் உணர்ந்ததுண்டு.

          இருந்தாலும் நம் இந்திய ஆண்களுக்கு சிவந்த நிறத்தின் மீது தனி ஈர்ப்புதான்.அது உண்மையில்லையா?

            என் கல்லூரியில் நிறைய ஆண்கள்  என் நிறத்தை நேசித்ததாகச் சொன்னதுண்டு.ஆனால் சிவப்பான பெண்களிடம் ஆண்களுக்கு இருக்கும் attractionஐ நான் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.ஒரு வயதில் இன்னும் கொஞ்சம் நிறமாக இருந்திருக்கக் கூடாதா என்று எண்ணியிருக்கிறேன்.என் மனதை மாற்றியது உங்கள் எழுத்துகளே.

      இப்பொழுது அந்த வயதெல்லாம் மாறி விட்டாலும் நிறம் பற்றிய என் கணிப்புகள் பணியிடத்திலும் பெரும்பாலும் தவறவில்லை.சிவப்பு தான் அழகு என்றே நம் மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது.பெரும்பாலான தனியார் பள்ளிகளில் சிவப்பான குழந்தைகளே மேடையேற்றப் படுகிறார்கள். 
             
       வெண்முரசு போன்ற பெரும் காவியத்தில் கருப்பு நிறம் பற்றி நீங்கள் எழுதுவது எனக்கு நிறைவாக இருக்கிறது.

    முதலில் இதை எழுதத் தயங்கினேன் இருந்தாலும் share செய்து விட்டால் மனதிற்கு நன்றாக இருக்கும்.

அன்புடன்
  எம்.

அன்புள்ள எம்,

நான் மகாபாரதம் எழுதத் தொடங்கியபோது இந்த வினாக்கள் வந்தன. மகாபாரதத்தை ஆதாரமாகக் கொண்டே நான் நிறங்களை அமைத்தேன். ஆனால் நம் மக்கள் புராணச்சொற்பொழிவுகள், சீரியல்கள் வழியாக ஒரு சித்திரத்தை அடைந்திருந்தனர். ஆகவே அனைத்து மகாபாரதக்கதாபாத்திரங்க்ளும் பால்நிறம் தீநிறம் என மனசுக்குள் எண்ணியிருந்தனர்

அவர்கள் எனக்குக் கடிதங்கள் எழுதினர். நான் உண்மையைச் சொன்னபோது அவர்களுக்கு திகைப்பு. அந்த திகைப்பு அல்லது வருத்தம்தான் எனக்கு ஆச்சரியம் அளித்தது. ஏனென்றால் வெண்ணிறமே உயர்வு, அழகு என இவர்கள் உள்ளூர நம்புகிறார்கள்

இங்குள்ள உபன்னியாசகர்கள் பலர் நிறத்திரிபை வேண்டுமென்றே செய்வதை அதன்பின் கண்டேன். கிருஷ்ணனே கருப்பன் அல்ல. கிருஷ் எ்ன்றால் விரிவடைவது. ஆகவே அந்தப்பொருளில்தான் அவன் கிருஷ்ணன் என ஒருவர் வாதிட்டு பேசியதைக் கேட்டேன். குறைந்தது ஐந்நூறு இடங்களில் மூலமகபாரதம் கிருஷ்ணனை கரியவன் எனச் சொல்வதை அவர் கருத்தில் கொள்ளவில்லை

அர்ஜுனன் கருமையானவன்.அர்ஜுனன் கருமையானவன், ஆகவே பாண்டு அவனுக்கே கிருஷ்ணன் என்றுதான் முதலில் பெயரிட்டான் என வியாசர் சொல்கிறார். அந்த மூலவரி திரிபாக இருக்கலாம் என்று ஒருவர் சொல்லி அர்ஜுனம் என்றால் வெண்மை என பலவகையில் சொல்பிரிவு செய்து ‘நிரூபிக்க’ முனைவதை கண்டேன். அர்ஜுனம் என்றால் அம்புக்குரிய புல் என்றே மகாபாரதம் சொல்வது அவருக்கு ஒரு பொருட்டல்ல

இந்த மனக்குறுகல் நம் சமூகத்தில்  உள்ள ஒரு வரலாற்றுரீீதியான நோய் என்றுதான் சொல்லவேண்டும். அதற்குள் இனவாதம் சாதியவாதம் என பல உறங்கியிருக்கின்றன. நாம் வெண்ணிறம் மீதான இந்த மயக்கத்தை இலக்கியங்களால் பேச்சுக்களால் வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.

மகாபாரதத்தில் எவர் எந்தெந்த நிறம் என்பது வியாசராலேயே தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கரிய நிறமுடையவர்களுக்கு கிருஷ்ணன் கிருஷ்ணை [கருப்பன் கருப்பி ] என்று பெயரிடும் வழக்கமும் இருந்திருக்கிறது

கிருஷ்ணன் கருப்பு நிறம். . பாஞ்சாலி கறுப்பி. ஆகவே அவளுக்கு கிருஷ்ணை என்றுதான் பெயர். அவளுடைய நிறம் பற்றி நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. கர்ணன் கருமையானவன்

பாண்டவர்களிலேயே அழகானவன் நகுலன் என்று வியாசர் சொல்கிறார். அவன் கருமையானவன் என்கிறார். அவனுடைய இரட்டையான சகதேவன் வெண்ணிறமானவன். அவன் அழகன் என்று சொல்லப்படவில்லை

அதாவது கருமைதான் அழகான நிறம் என்ற எண்ணம் மகாபாரத காலகட்டத்தில் இருந்திருக்கிறது. வியாசனுக்கே அந்த எண்ணம்தான். ஏனென்றால் அவனும் கரியவன். ஆகவே கிருஷ்ணன் என அழைக்கப்பட்டவன். அடுத்த தலைமுறையில் துரியோதனனின் மகள் கருப்பி. அவள் பெயரும் கிருஷ்ணைதான்

சங்க இலக்கிய நாயகியர் மாமை நிறத்தவர். அதாவது பளிச்சிடும் மென்கருமை. வெண்ணிறமாக சொல்லப்படும் பெண்ணழகு சிலப்பதிகாரத்தில்தான் வருகிறது. அதன்பின் சிவப்பே அழகு

இந்தமாற்றம் மகாபாரத காலகட்டத்திற்குப்பின்னர் மெல்ல வட இந்திய இலக்கியங்களிலும் காணப்படுகிறது

ஏன்? அக்கால எகிப்தை எடுத்துக்கொண்டால் அது கரியவர்களாகிய காப்டிக் மக்களின் நாடு. கிளியோபாட்ரா பேரழகி, அவள் கரியவள்

ஆனால் இன்றைய எகிப்து வெண்ணிறமான அராபியர்கள் மட்டுமே வாழும் நாடு. கறுப்புநிற காப்டிக் மக்கள் மிகமிகச் சிறுபான்மையினர்

இந்தமாற்றமே இங்கும் நிகழ்ந்தது. மகாபாரதக் காலகட்டத்திலேயே பெரும்பான்மையினர் வெண்ணிறமாவர்கள். பூர்வநிறமான கருமை மேல் ஒரு மயக்கம் எஞ்சியிருக்கிறது, அவ்வளவுதான்

ஆனால் மகாபாரதமே மாபெரும் இனக்கலப்பின் கதை. காந்தாரத்துக்கு அப்பாலுள்ள யவனவம்சம் முதல் காமரூபத்தின் மங்கோலியர் வரை திருமணம்மூலம் கலந்தபடியே இருக்கிறார்கள்.

அதன்பின் இந்தியாமேல் தொடர்ந்து பல இனங்களின் படையெடுப்பு நிகழ்ந்ததை நாம் அறிவோம். உதாரணமாக ஹூணர்கள் வெள்ளையர்கள். அதேபோல பல இனக்கலப்புகள் வழியாக நிறம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்திருக்கலாம்

இந்தியாவுக்கு படையெடுத்துவந்த அனைவருமே வெள்ளை நிறமானவர்கள். ஹூணர்கள் தொடங்கி மங்கோலியர் வரை. படையெடுத்துவருவதென்பது பல லட்சம் ஆண்கள் மட்டுமே. அதாவது பீப்பாய் பீப்பாயாக விந்து. அவை இங்கே உருவாக்கிய நிறமாற்றத்தையே நாம் காண்கிறோம். 

வட இந்தியாவில் படையெடுப்புகள் நேரடியாக நிகழ்ந்தன. தென்னகத்தில் வணிகக் கலப்புதான் தொடக்கத்தில் பின்னர்தான் படையெடுப்பு. 

வட இந்தியாவில் நேரடியாகப் பயணம்செய்தான் ஒன்று தெரியும், வட இந்தியர்கள் வெள்ளை நிறமானவர்கள் என்பது பொய். அங்குள்ள உயர்குடியினர் பெரும்பாலும் வெள்ளைநிறமானவர்கள். நடுச்சாதியினர் மங்கோலியக் கலப்பு மேலோங்கியவர்கள். அல்லது சித்தியன் இனத்தவர்- செம்மண் நிறம் கூரிய முகம். சிறிய உடல்.

 ஆனால்  வட இந்தியாவில் பெரும்பாலும் கறுப்புதான். பிகார் மத்தியப்பிரதேசம் குஜராத் ராஜஸ்தானில் மாநிறத்தவரும் கருப்பர்களும் அதிகம்

தனிப்பட்ட முறையில் எனக்கு கருமைநிறமே அழகு எனத் தோன்றுகிறது. நானும் ஒரு குட்டி வியாசன் என்பதனால் ))))

ஜெ