Monday, March 16, 2015

சௌவீரரும் சௌராஷ்டிரரும்


[சூரியர் கோயில் மாதோப்பூர்]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

                 வணக்கம். நான் உங்களின் வாசகன். இது தங்களுக்கு நான் எழுதும் முதல் மின்னஞ்சல். என் நண்பர் ஒருவரின் மூலம் தங்களின் வலைதளம் பற்றிய அறிமுகம் கிடைத்தது. நான் முதலில் படித்தது காந்தி பற்றிய தங்கள் கருத்துக்கள். அதற்கு பின் நான் தங்களின் வலைதளத்தின் தீவிர வாசகன் ஆகி விட்டேன். எனக்கு மதங்களை பற்றியும், சுய ஆராய்ச்சி பற்றியும், நம் வரலாறை பற்றியும் தெரிந்து கொள்வதில் பெரும் ஆர்வம். தங்களின் கருத்துக்கள் மதத்தை பற்றியும், நம் வரலாறு பற்றியும், என்னை பற்றியும் எனக்கு நல்ல புரிதலை தந்துள்ளது. 

இதற்கு முன் நான் நிறைய ஒஷோ நூல்களை படித்துள்ளேன். தங்களின் கருத்துக்கள் அவர் கருத்துக்களைப் போன்றே நடு நிலைமையாகவும், தர்க்க ரீதியாகவும், ஆழ்ந்த புரிதலுடனும், மனோதத்துவ முறையில் அனுகுவதாகவும் உள்ளது. சுதர்மம் பற்றியும் ஆன்மீகம் பற்றியும் தங்கள் கட்டுரைகள் என்னை பற்றி நான் புரிந்து கொள்ள உதவுகிறது. காந்தி பற்றியும், பெரியார் பற்றியும், நாராயண குரு பற்றியும் தாங்களின் கட்டுரைகள் தமிழக வரலாறு பற்றிய நல்ல புரிதலை தந்தது. மேலை தத்துவ ஆசிரியரிலிருந்து நம் உள்ளூர் தத்துவ ஆசிரியர் வரை தாங்கள் விமர்சித்து எழுதிய காசிரங்கா யானை பற்றிய கட்டுரைகள் மிகவும் பிரமாதம். நினைத்து நினைத்து சிரித்தேன்.


              நான் தினமும் வெண்முரசு நாவலை தவறாது படித்து வருகிறேன்.  நான் இதற்கு முன் ராஜாஜி எழுதிய மகாபாரதம் மற்றும் சில மகாபாரதங்களை படித்துள்ளென். தங்களின் கருத்துக்கள் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மனோதத்துவ ரீதியாகவும் தத்துவ ரீதியாகவும் சிறப்பாக விள‌க்குகிறது. மகாபாரதம் பற்றி ஒரு புது பரிணாமத்தை தருகிறது. கர்மயோகியாக தாங்கள் புரியும் இப்பணி மேலும் தொடர்ந்து எங்களைப் போன்றவர்களுக்கு வழி காட்ட வேண்டும். 


        தங்களிடம் ஒரு கேள்வி. உங்கள் கட்டுரைகளில் சௌரம் மதத்தை பற்றி படித்தேன். சௌரம் வைணவத்துடன் இணைந்ததாக குறிப்பிட்டு இருந்தீர்கள். நான் சவுராஷ்டிர ஜாதியை சேர்ந்தவன். எங்கள் குடும்பத்தில் சிவனை பொதுவாக வழிபடும் முறை உள்ளது. ஆனால் எங்கள் சமுதாயத்தில் பெருமாள் வழிபாடு நடைபெறுகிறது ஏனெனில் எங்கள் முன்னேர்கள் ஆந்திராவிலிருந்து வந்ததாக சொல்கிறார்கள். அது போக கருப்பன் மற்றும் மதுரைவீரன் போன்ற கிராம தேவதை வழிபாடு உள்ளது. ஆனால் எவரிடமும் சூரிய வழிபாடு முறை இல்லை. யாரிடமும் வழிபாட்டு முறை பற்றிய புரிதல் இல்லை. வெறும் சடங்குகள் மட்டுமே உள்ளது அதற்க்கும் யாரிடமும் எந்த விளக்கமும் இல்லை. தாங்கள் சவுராஷ்டிர மதத்தின்  வழிபாட்டு முறை பற்றி விளக்கினால், அதைப்புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.


      வெண்முரசு நூலில் தாங்கள் சௌவீரம் என ஒரு ஊர்  குறிப்பிட்டுள்ளது. சௌவீரம் என்பது அக்காலத்தில் சவுராஷ்டிரர்கள் (அதாவது சூரிய வழிபாடு செய்தவர்கள்) வாழ்ந்த நிலத்தை குறிப்பிடுகிறதா? பொதுவாக எங்கள் இன மக்களை பல்குவார் என சொல்கிறார்கள். பல்குவார் என்பது மார்வார் போல் ஒரு இடத்தின் பெயராக இருக்குமா? ஒரே குழப்பமாக உள்ளது. தாங்கள் இதைப்பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள‌
அருண்



அன்புள்ள அருண்

மகாபாரதத்தில் உள்ள  சுவீரர்கள் ஆண்ட சௌவீர நாடு இமையமலையடிவாரத்திலுள்ள பலுசிஸ்தானில் அமைந்த சிறிய நாடுகளில் ஒன்றாகவே குறிப்பிடப்படுகிறது. பால்ஹிகநாடுகளில் ஒன்று

அதை பின்னர் சிந்து மன்னன் ஜெயத்ரதன் வெல்கிறான். அவனுக்குக் கப்பம் கட்டும் சிறுநாடாக அது நீடிக்கிறது.

சௌவீரர்கள் சூரியவழிபாடு கொண்டவர்களாக இருக்கலாம். மகாபாரதத்தில் அதைப்பற்றிய குறிப்புகளேதுமில்லை என்றாலும் அப்பெயர் அதைக் குறிக்கலாம்

அதன்பின்னர் சௌவீரநாடு என சொல்லப்பட்டது இன்றைய பஞ்சாப். அங்கே மூல்தான் [மூலத்தான நகரி]யில் மாபெரும் சூரியக்கோயில் இருந்தது. இறுதியாக கட்டப்பட்ட கோயில் கஜினி முகமதுவால் இடிக்கப்பட்டது. இடிபாடுகள் உள்ளன. யுனெஸ்கோவால் பேணப்படுகின்றன

அதன்பின் சௌவீரம் எனப்பட்டது இன்றைய குஜராத்தில் உள்ள நாடு. அதுதான் சௌராஷ்டிரம். இன்றும் குஜராத்தில்தான் சூரியவழிபாடு எஞ்சியிருக்கிறது. காஷ்மீரின் மார்த்தாண்ட் இந்தியாவின் மிகப்பெரிய சூரியர் கோயில். அங்கிருந்து தெற்கே வரை சௌவீரர்கள் வாழ்ந்த நாடுகளில் எல்லாம் முக்கியமான முக்கியமான பல சூரியக்கோயில்கள்  உள்ளன.குஜராத்திலும் மத்தியப்பிரதேசத்திலும் இடிந்த பேராலயங்கள் உள்ளன.

அங்கிருந்துதான் தமிழகத்திற்கு சௌராஷ்டிர மக்கள் வந்தனர். பதினைந்தாம் நூற்றாண்டு முதலே இந்தக்குடியேற்றம் ஆரம்பித்தது.

பெரும்பாலும் சரிகை, பட்டுநூல் வேலைகளுக்காக  மராட்டியர் ஆட்சிக்காலத்திலும் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் அவர்கள் கொண்டுவரப்பட்டனர். அவர்களின் நிலமான சௌராஷ்டிரம் முகலாய ஆதிக்கத்தில் இருந்தது. மதவழிபாடுகள் கடுமையான ஒடுக்குமுறைக்குள்ளாயின. ஆகவே அவர்கள் இனக்குழுக்களாகக் கிளம்பி தெற்கே வந்தனர்

சௌரம் அல்லது சூரிய்வழிபாட்டு மதம் வைணவத்தில் முழுமையாக இணைந்தது சூரியநாராயணர் வழிபாடு, சக்கரத்தாழ்வார் வழிபாடு முதலியவை சௌர மதத்தில் இருந்து வைணவத்திற்குள் குடியேறியவை. இந்தமாற்றம் பத்தாம்  நூற்றாண்டிலேயே நிகழ்ந்துவிட்டது

ஆகவே இங்கே வரும்போதே அவர்கள் வைணவர்களாக இருந்திருக்கலாம். அவர்களின் வரலாறென்பது தொடர்ச்சியான இடப்பெயர்வின் கதையாக இருக்கிறது

விரிவாக ஆராய்வதற்குரியது அது

ஜெ