திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்கள் பதிவுகள்,சிறுகதைகளை சமீபத்தில் படித்து வருகிறேன்.
மகபாரதத்தின் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு.வெண் முரசு அத்தியாயங்களை (தொடர்ச்சியாக இல்லாவிடினும்)தேர்வு செய்து படித்து வருகிறேன்.
கிருஷ்ணன், சகுனி இடையேயான பகடை ஆட்ட அத்தியாயம் அற்புதம்.
நான் கவனித்த மற்றொரு விஷயம் பாத்திர உருவகங்கள்.
ஊடகங்களின் பொதுவான இயல்பு நேர்மறை மற்றும் எதிர்மறை (என அவர்கள் உருவகம் செய்த)கதாபாத்திரங்களை நேர்மறை அல்லது எதிர்மறையின் உச்சத்தில் வைத்து சித்தரிப்பது. இதனை உடைக்க முயன்றவர்களும் உண்டு.(உ.ம். ஆர்.எஸ்.மனோகர் நாடகங்கள்). அதிலும் அவர்கள் கதாபாத்திரத்தின் வழக்கமான உருவகத்தின் நேர் எதிர் முனையில் அவர்களை நிறுத்துவது வழக்கம்.(இது கதை சொல்லிகளின் பொதுவான இயல்போ?)
வெண் முரசில் பல கதாபாத்திரங்கள், முக்கியமாக பலராமர் பாத்திர உருவகம் மேற் சொன்ன இயல்பை அடித்து நொறுக்கி விட்டது. இது போன்ற பாத்திரங்கள் பிற படைப்புகளில் (பெரும்பாலும்) நாசூக்கான உருவகத்திலேயே சொல்லப்பட்டுள்ளன.
நேர்மறையோ,எதிர்மறையோ உடல் மொழி,செயல்கள் வெண் முரசின் எல்லா கதாபத்திரங்களிலும் இயல்பான கலவையாக இருக்கிறது.
மஹாபாரதத்தின் மூலத்திலும் இப்படித்தானா. அல்லது இவை பெரும்பாலும் உங்கள் கற்பனையில் வடித்த உருவகங்களா?
அன்புடன்
எஸ்.ரமேஷ் கிருஷ்ணன்
அன்புள்ள ரமேஷ் கிருஷ்ணன்,
பலராமன் மகாபாரதத்தில் ஒரு மெல்லிய சித்திரம் மட்டுமே. உண்மையில் ஒரு கதாபாத்திரத்திற்குரிய எந்த அம்சமும் அதில் அவருகில்லை. அவர் பத்து அவதாரங்களில் ஒருவர். ஆனால் அவதார நொக்கம் என ஏதுமில்லை. துரியோதனனுக்கு ஆசிரியராக இருந்தார் என்பதற்குமெல் ஒன்றுமே செய்யவுமில்லை
கிருஷ்ணனின் உடன்பிறந்தான் என்ற ஒரு கதாபாத்திரம் வியாசபாரதத்தில் இருந்திருக்கலாம். கலப்பையை ஏந்திய வேறு ஏதோ இனக்குழுவுடைய தெய்வம் அதனுடன் கலந்திருக்கலாம். பின்னர் அந்த தெய்வமே முக்கியத்துவமிழந்திருக்கலாம்.
நான் உருவாக்குவது மகாபாரதம் அளிக்கும் குறிப்புகளைக்கொண்டு ஒரு விரிவான சித்திரம்
ஜெ