Thursday, March 12, 2015

நச்சுமுள் மேல் நடக்கும் வேழம்.



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

சுடவைக்கும் பாலில் நீர் இருக்கும்வரை பால் பொங்கிக்கொண்டே இருக்கும், பொங்கும் பாலை நீர் ஊற்றி அணைப்பதுதான் அதிசயம். வெண்முகில் நகரம்-நச்சுமுள் என்ற இந்த அத்தியாயம் ஒரு பெண்ணால் மூண்ட கோபத்தை ஒரு பெண்ணால் அணைக்க நினைத்தது அழகு.

ஒரு பெண்ணால் காமம் எழுகின்றது. அந்த காமம் எழும் நேரத்தில் அன்னையோ தங்கையோ எதிப்படும் தருணத்தில் அடங்குவது என்பது கொதிக்கும்பால் அடங்குவதேபோல் அர்த்தம் உள்ளது.

துரியோதனன் மற்றும் கர்ணன் இருவரும் கொம்பு உரசும் யானைபோல் இருக்கிறார்கள். அவர்கள் கொம்பாக இங்கு இருப்பது அவர்களின் காமம். அதுதான் அவர்களை யானை என்று காட்டி போருக்கு எழசெய்கின்றது. இதை பூரிசிரவஸ் உணர்கின்றான். இது காமத்தால் ஆனது என்பதை அறியமுடியாமல் பூரிசிரவஸ் தவிக்கின்றான்.

பூரிசிரவஸ்போன்று கணிகர் தவிக்கவில்லை, எதையும் அதன் ஆழத்தில் சென்று உணரும் கணிகர் இதைக்காமப்போர் என்கின்றார். அதனால் விளையும் பெரும்கேடு தனது அழிவிற்கே காரணமாகும் என்று விளக்குகின்றார் அதை சர்ப்பதம்சம் என்னும் முள்ளின் மூலம் யானை அழியும் விதைத்தைச் சொல்லி விளக்குகின்றார்.


சர்ப்பதம்சம் என்று ஒரு முள் இருக்கிறதுமிகமிகச்சிறியது.பூமுள்போலஅது யானையின் கால்களில் குத்தினால்கண்டுபிடிக்கவோ அகற்றவோ முடியாதுஆனால் யானையின்கால்கள் மெல்லமெல்ல புண்ணாகி சீழ்கட்டும்யானை மரத்தில்சாய்ந்து நின்று காடதிர சின்னம் விளித்து வலியில் கூவிக்கூவிஇறக்கும்” என்றார் கணிகர்.

எதை அறிந்தாலும் யார் சொன்னாலும் கேட்காத துரியோதன் முன்னோக்கிமட்டுமே சென்று கொண்டு இருக்கிறான். எப்போதும் முதலில் திசை தெரியாமல் தூங்கியபடியே காலடிவைக்கும் கர்ணன் காலடிவைத்ததும் அந்த திசையில் பயணம் சரியா? என்று பாதியில் விழித்துக்கொள்வான். திரௌபதி என்னும் பெண்மீது கொண்ட காமத்தால் படை நடத்தசென்றவன் துச்சளையின் வருகையால் விழித்துக்கொள்கின்றான். அன்னை சகோதரி என்று எந்த உணர்வும் இல்லாமல் செல்லும் துரியோதனும், எந்த உறவுகளும் இல்லாதபோதும் அந்த உறவுகளின் நலம் உணரும் கர்ணனும் ஒரு திசையின் இருபுள்ளிகள். அன்று குண்டாசியின் நிலைக்கு வருந்தி அவன் பாதம் தொட்ட கர்ணன் இன்று தன்நிலைக்குவருந்தி துச்சளையின் பாதம் அகத்தில் தொடுகின்றான்.

தனக்குள் இருப்பது நச்சுமுள் என்பதை அறிந்து படை நடத்துவதை நிருத்தி கொண்ட கர்ணனும், தனக்குள் இருப்பது நச்சு முள்என்பதை அறியாமல் வாழும் துரியோதனும் அழிவின் திசைநோக்கி போவது காலத்தின் விதி.

நான் விழைவது தருமனின் அறத்தையும், பார்த்தனின் பற்றின்மையையும் என்று சொல்லும் கர்ணனை இந்த நச்சுமுள்ளில் நிருத்தியது எது?

இது தீமை என்’று தெரிந்துகொள்பவன் திருந்திவிடுவதில்லை. இது தீமை என்று தெரிந்துக்கொண்டு அதை விட்டு வெகுதூரம் சென்றுவிடுபவன் திருந்திவிடுகின்றான். கர்ணன் இது நச்சுமுள் என்று தெரிந்தும் அதன்மீதே நடக்கின்றான். அவன் அவிழ்த்து்க்கொண்டு செல்லமுடியாமல் நட்பென்னும் சங்கிலியால் கட்டப்பட்டு உள்ளான். கர்ணன் நச்சுமுள்மேல் நடக்கும் துதிக்கையில் புண்பட்ட வேழம் என்பதுதான் எத்தனை பெரும் சிந்தனையை உருவாக்குகின்றது. 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.