Sunday, March 29, 2015

கண்ணன் இடையன் கடையன்.

 
 
கண்ணன் யாதவன் அதனால் இடையன், அவன் இளையவன் அதனால் கடையன்.

இடையன் என்பதால் எதிலும் இடைஇடையே இருக்கிறான். ராதைக்கும் கம்சனுக்கும்இடையில் இருக்கிறான். காமனுக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கிறான். உயர்ந்தவருக்கும் எளியவருக்கும் இடையில் இருக்கிறான். குந்திக்கும் திரௌபதிக்கும் இடையில் இருக்கிறான். அஸ்தினபுரிக்கும் பாஞ்சாலத்திற்கும் இடையில் இருக்கிறான். தருமனுக்கும் திருதராஷ்டிரனுக்கும் இடையில் இருக்கிறான். கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் இருக்கிறான். சகுனிக்கும் கணிகருக்கும் இடையில் இருக்கிறான். அஸ்தினபுரி குலச்சபைக்கும் அரசியலுக்கும் இடையில் இருக்கிறான். முதியவனுக்கும் குழந்தைக்கும் இடையில் இருக்கிறான். பேச்சுக்கும் பேசாமைக்கும் இடையில் இருக்கிறான். ஒவ்வொருவர் உடம்புக்கும் மனசுக்கும் இடையில் இருக்கிறான். இடையில் இருப்பதாலேயே கடைந்துக்கொண்டே இருக்கிறான் அதனால் கடையன். அவன் பலராமருக்கு இளையவன் என்பதால் கடையவன் அதனாலும் கடையன். 

இடையனாக இருப்பவன்தான் தூதுவனாக இருக்கமுடியும். கடையும் திறமை இருந்தால்தான் தூதில் வெற்றிப்பெறமுடியும்.
கண்ணனைபோல் இடையன் கடையன் இனி மண்ணில் இல்லை இதற்கு முன்னும் இல்லை. வெண்முரசு இந்த இடையனை கடையனை உடையவனாக்கி செல்வது அற்பும். ஜெ இடையனை கடையனை காட்டிக் காட்டி சித்திரவீதியில் ரதமோட்டுகின்றீர்கள். 

ஏன் இந்த இடையன் இடையில் இருந்து கடைகின்றான்? கடைதல் அவனுக்கு பிடித்தது. மேருமலையை மத்தாக்கி அந்த மத்தை தாங்கும் கூர்மமாகி முன்னமே பாற்கடலை கடைந்தவன் அவன். கடைதல் என்னும் பாரம்பரிய பண்பு அவன் குருதியில் இருக்கிறது. அவன் எந்த வேஷம்போட்டாலும் அவன் டி.என்.ஏவில் கடைதல் மரபணு உள்ளது. ஏன் இந்த மரபு அணு அவன் குருதியைவிட்டு விலகுவது இல்லை? அவனுக்கு தெரிகின்றது. என்னதான் பார்க்கடலை படுக்கை அறையாக பயன்படுத்தினாலும் அதில் துளியேனும் ஆலகாலம் இருக்கும் என்பது. அவன் இந்த தூதுக்கு வருவதற்கு முன்னமே “துளி விடம் இல்லாமல் பாற்கடல் நிறைவடைவது இல்லை“ என்று சொல்லிவிட்டுதான் வந்தான்.
கடைவதன்நோக்கம் அமுதம்பெறுவது மட்டும் இல்லை. ஆலகாலத்தை நீக்குவதும்தான் அல்லது பாற்கடலுக்குள் விடம்இருக்கு என்று காட்டுவதற்கும்தான். பாற்கடல் கடையப்படும்வரை அதற்குள் விடம் இருக்கு என்பது யாருக்கும் தெரியாது? தேவரும் அசுரரும் நினைத்தது அதற்குள் அமுதம் இருக்கு என்பதை மட்டும்தான். கடைந்தபிறகே பாற்கடலுக்குள் விடமும் இருக்கு என்று தெரியவந்தது. இந்த கடைதல் மூலமுமே சகுனியின், துரியோதனின்,கர்ணனின், திருதராஷ்டிரனின் மறுமுனையாகிய விடத்தை பிரித்து வைத்துவிடுகின்றான். குறிப்பாக பாஞ்சாலி என்ற சொல் எழும்போதெல்லாம் கர்ணன் பதரும் பதற்றத்தில் இருந்து தெறிப்பது அவனுக்குள் உள்ள ஆலகாலம். 
 
கண்ணன் இந்த தூதுக்கு வந்தது பாண்டவர்களுக்கு நாடுகிடைக்கவேண்டும் என்பதற்காக மட்டும் என்றால் அவன் ஏன் இத்தனை விளையாடவேண்டும்? இங்குதான் கண்ணன் தனது கடையும் தொழிலை தொடங்குகின்றான். பேசுவதன் மூலம் வாழும் பேசும் கணிகரை பேசாமல் செய்துவிட்டான் அது சாத்யகியின் கண்களை கொண்டு கணிகரை கடைந்தது. பாதிவிழிமூடி பாதிவிழி திறந்து யோகத்தில் இருக்கும் கர்ணன் அதிகமாக எதுவும் பேசுவது இல்லை ஆனால் இன்று அவனை பேசவைத்துவிட்டான் இதன் மூலம் அவன் நாக்குக்கு அடிபணிந்து அதன்மூலம் விடம் கக்கவேண்டும் என்று செய்துவிட்டான். “யாகாவராயினும் நா காக்க” கர்ணா அறிவாயா?. உன் நாக்கை இந்த கண்ணன் அவிழ்த்துவிட்டுவிட்டான் இனி அது ஓயாது.  கர்ணனை கடைந்தது கண்ணனின் கண்கள். சகுனியின் இடம் என்ன என்பதை குலக்குழுக்களின் மூலம் அறியவைத்துவிட்டான். சகுனியை மட்டும் அல்ல சகுனிக்கு வக்காலத்து வாங்கும் துரியோதனனும் வெளியேற வேண்டும் என்று குலக்குழு மக்களை சொல்லவைத்துவிட்டான். சகுனியையும், துரியோதனனையும் சூழ்நிலையால் கடைகின்றான்.

உலகின் பெரும் தந்தை என்று போற்றப்படும் திருதராஷ்டிரன் குழந்தைகளால் காய்த்து தொங்கும் ஒருபெரும் பலாமரம், அதனிடம் இருந்து வடிவது எல்லாம் தந்தைமை என்னும் தேன்சாறு என்று நம்பவைத்தவன் இடம் நீ்ங்காமல் இருப்பது புத்தரபாசம் என்னும் தீராபிசின் என்பதை தருமனின் வார்த்தை மூலம் கடைகின்றான்.

//இது அவன் நாடென்றால் வந்து என்னிடம் அவை நின்று அல்லவா சொல்லவேண்டும்?” கிருஷ்ணன்இதையே நானும் சொன்னேன். ஆனால் அவர் இங்கு வர விரும்பவில்லை. தங்கள் முன் நின்று சொல்லும் விழி தனக்கில்லை என நினைக்கிறார். ஏனென்றால் தாங்கள் அவரிடம் அரசு ஏற்கவே ஆணையிடுவீர்கள் என்றார். அதை மறுக்க அவரால் முடியாது. ஆனால் தங்கள் உள்ளம் அதை சொல்லவில்லை என அவர் உள்ளம் அறியும். காரணம் எந்தத் தந்தையும் ஆழத்தில் வெறும் தந்தையே. தன் மைந்தனின் நலனை அன்றி பிறிதை அவர் விழையமாட்டார்என்றான்//

கண்ணன் தனது தூது மூலம் நிறுவ வந்தது பாண்டவர்கள் பங்கு என்னும் நாடு ஒரு பாற்கடல், அந்த பாற்கடலுக்குள் தேங்கி இருக்கும் ஆலகாலவிடம் எது என்பதை காட்டுவதற்காக அவன் கடைந்த கடையல்தான் இந்த தூது.

மத்து இருந்த இடத்தில் இருந்து சத்தம் இல்லாமல் சுற்றுகின்றது மோர்பானை எத்தனை ஆர்ப்பாட்டாய் சத்தம்போட்டு தனக்குள்ளேயே மோதிக்கொள்கின்றது.  இந்த கண்ணன் நிறைய பேசுவான் என்று நினைத்தேன் ஆனால் அவன் அதிகம் பேசவில்லை, கண்ணன் இங்கு அதிகம் பேசாதது அற்புதம் ஜெ.  

அவன் அமுதம் குடித்த அமரர்களை கும்பிடவைக்கிறான் ஆனால் ஆலகாலம் குடித்த திருநீலகண்டன் தியாகேசனை கும்பிடுகின்றான். அவன் கடவுளைக்காட்டுவதற்காகத்தான் அமுதம் எடுக்கும் சாக்கில் ஆலகாலத்தை காட்டுகின்றானோ?
 
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.