Sunday, March 22, 2015

காத்திருக்கும் கிருஷ்ணன்



அன்புள்ள ஜெ,

இறுதியாக சந்தித்தே விட்டார்கள், கிருஷ்ணனும் திரௌபதியும். இன்று வரையிலும் வெண்முரசின் இரு மிகப் பெரும் ஆளுமைகளும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே எடை போட்டுக் கொண்டிருந்தனர். வெண்முரசு திரௌபதியை முன்னிறுத்தி தான் நகரப் போகிறதா என்ன? கிருஷ்ணனும் அவள் கையில் ஓர் பகடை தானா?

கிருஷ்ணனுக்கு பாஞ்சாலத்தின் உச்ச பட்ச மரியாதையை அளித்து அவனிடம் அடைக்கலம் ஆவது போல் அவனை வென்றது திரௌபதியின் ராஜதந்திரம். எல்லாத்திற்கும் மேல் அவனை வென்றதற்கான உண்டாட்டுக்கு அவனையே அழைத்துச் சென்றது என்ன சொல்ல....!!! அந்த இரண்டு முறைமை சார்ந்த நிகழ்வுகளிலும் பாண்டவர்களின் நிலையை அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சேர்த்தே புரிய வைத்து விட்டாள். வாசகர்கள் கவனித்திருக்கக் கூடும், அவ்வத்தியாயங்களில் பாண்டவர்கள் எங்குமே தென்படவில்லை. 

இத்தனைக்கும் காம்பில்யத்தைத் தங்கள் உயிரைப் பணயம் வைத்துக் காத்திருக்கிறார்கள். ஆனால் சாதாரண அரசு முறை விருந்தினர்களுக்கு அளிக்கப்படும் கவனமே அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லாமல் எங்கோ தொலை தூரத்தில் இருக்கும் ஓர் ராச்சியத்தின் அரசனுக்கு பாஞ்சாலத்தின் அதிக பட்ச மரியாதை அளிக்கப்படுகிறது. நிலமற்றவர்கள் படைவீரர்களுக்குச் சமானம் என்பதே அச்செய்தியின் சாராம்சம். அரசியல் பற்றி பேசாமலேயே அரசியல் ஆட்டம். அபாரம் ஜெ.

வேறு வழியே இல்லாமல் கிருஷ்ணன் அஸ்தினபுரிக்கு தூதாகச் செல்ல முடிவெடுக்கிறான். முதல் முறையாக கிருஷ்ணனுக்கு ஒருத்தி பணி கொடுக்கிறாள். இன்றும் முதன்முறையாக கிருஷ்ணன் ஒருத்தி முன்னால் அவளை ஆழம் பார்க்கிறான். திரௌபதியை அவன் எதிர்கொள்ளும் அந்த முதல் காட்சியைப் பாருங்கள். மிக அலட்சியமாக, இருந்த இடத்தில் இருந்து எழாமல், அவளை நோக்கித் திரும்பி, "அஸ்தினபுரியின் சிற்றரசிக்கு வணக்கம்"  என்கிறான். அவளை அவ்வார்த்தைகள், அச்செயல் எரிய வைக்கும் என்று எதிர்பார்த்தானோ என்னவோ? 

அவளது பலவீனம் என்ன என்று தேடிக்கொண்டே இருக்கிறான். அடுத்து கர்ணனைப் பற்றிப் பேச்செடுக்கிறான். அதையும் அநாயாசமாகத் தாண்டிச் செல்கிறாள் திரௌபதி. அவன் வாழ வேண்டும் என்பவள் தான் சக்கரவர்த்தினியாக போரில் அவன் மடிந்தாக வேண்டும் என்று தெளிவாகவே சொல்கிறாள். அவள் துரியோதனனை ஏன் மணக்கவில்லை என்பதற்கு சொல்லும் காரணம் கிருஷ்ணனையே அசரடிக்கிறது. ஒரு புள்ளியில் கிருஷ்ணன் அவளிடம் இருந்து தன் பார்வையை விலக்கிக் கொள்கிறான்... என்ன நினைத்திருப்பான்?!

கிருஷ்ணனிடம் சரிக்குச் சமமாக நின்று பேசிய ஒரே அரசு சூழ்தல் விற்பன்னர் இவள் தான் போலும். இறுதியில் கிருஷ்ணனே அவளை அரசி என்று அழைக்கத் துவங்கிவிட்டான். அவளின் ஒரே பலவீனம் அவளின் கனவு மட்டுமே. அதை உணர்ந்தவாறே கிளம்புகிறான் அவன். அதை அவளுக்கு புரிய வைக்க அவன் காத்திருக்கிறான்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்