அன்புள்ள ஜெ,
மீண்டும் போர். நான் சரித்திர நாவல்களின் ரசிகன். அதாவது தமிழில் சரித்திர நாவல்கள் என்று விளங்கவைக்கப்பட்டுள்ள சாண்டில்யன், கல்கி நாவல்களின் ரசிகன். அந்த நாவல்களை வாசிக்கும் போது போர் என்பது ஓர் தலைவனின் சாகசமாகவே காட்டப்பட்டிருக்கும். அதைத் தவறு என்று சொல்லவில்லை. உதாரணமாக ராஜ திலகத்தில் வரும் போர்க்கள காட்சிகள். கடல் புறாவையும் சேர்த்துக் கொள்ளலாம். அதில் வரும் வியூக விவரணங்கள். பெரும்பாலும் பருந்துப் பார்வை மட்டுமே. கல்கி இந்த அளவு தகவல்கள் கூடத் தருவதில்லை. இத்தனைக்கும் சிவகாமியின் சபதம் ஓர் பெரும்போரை நாவலின் மையமாகக் கொண்டது. (பொன்னியின் செல்வனில் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதால் அதை விட்டுவிடலாம்.)(இது எனது மனப்பதிவு மட்டுமே. மற்றபடி யாரின் மனதையும் புண்படுத்த அல்ல - கருத்துரிமைக்கான பொறுப்பு துறப்பு). இதனால் என்ன விளைவு என்றால் போர் என்பதையே ஓர் நாவலில் நாம் தேடத் துவங்கி விடுகிறோம். ஏனென்றால் அது ஓர் சாகசம் மட்டுமே. அதில் யார் வெற்றி பெற வேண்டும் என்பது நமக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருக்கும். அதற்கேற்ப நல்லவன், கெட்டவன், கதாநாயகன், வில்லன் என்ற இருமைகளும் நிறுவப்பட்டிருக்கும். (ஒரே விதிவிலக்கு ராஜ திலகம். அதில் இரண்டாம் புலிகேசி தோற்பது வாசகர்களுக்கு மகிழ்ச்சியைத் தராது.) போர் என்பதன் உக்கிரம் வாசகரை வந்து அடைவதே இல்லை. இறப்பு நிகழ்கிறது என்பது வில்லனின் அடியாள் கதாநாயகன் கையால் அடி வாங்குவதைப் போன்றது. அவன் வலிகளும், உடல் உடைவுகளும் நம்மை வந்தடைவதே இல்லை.
வெண்முரசிலும் போர் என்பது ஓர் தலைவனால் தான் நடத்தப் படுகிறது. இங்கும் போரில் சாகசங்கள் நிகழ்த்தப் படுகின்றன. ஆனால் போர் என்பது அவை மட்டும் அல்ல. இந்த இடத்தில் தான் வெண்முரசு வேறுபடுகிறது. வெண்முரசு போரை அதில் பங்குபெறும் வீரர்களால் ஆனதாக காட்டுகிறது. பிரயாகை துவங்கி போர் வரத்துவங்கி விட்டது. துருபதனுடனான முதல் போர் அதன் தகவல்களாலும், விவரணைகளாலும் உற்சாகமூட்டியது என்றே சொல்லலாம். அப்போரிலும் சாதாரண மக்களின் துயரங்கள், குறிப்பாக எரிபரந்தெடுத்தலின் போது அவர்களின் வேதனைகள் லேசாக நெஞ்சைப் பதம் பார்த்தன. போர் என்பது தரும் அச்சத்தையும், அருவருப்பையும், கழிவிரக்கத்தையும், மானுடத்தின் மீதான, வாழ்வின் மீதான நம்பிக்கையின்மையையும் முகத்தில் அறைந்தாற்போல் உணர்த்தியது அஸ்வத்தாமனின் பகன் மீதான கொலைவெறியாட்டம். அதன் விவரணைகள். இப்போதும் கூட உடலில் ஓர் நடுக்கம் ஓடாமல் அதைப் படிக்க முடியாது. ஓர் அத்தியாயத்தின் பாதியிலேயே போதும் ஜெ என்று என்னை ஓலமிட (மனதுக்குள் தான்) வைத்தது அவ்வத்தியாயம் தான். அதில் வரும் உயரும் உடலும் வெந்து கருகும் ஓசைகளும், வாசனைகளும் இப்போது கூட நடுக்கத்தைத் தருகிறது. போர் என்பதன் அனைத்துப் பரிமாணங்களையும் காட்டுவது தானே சரியான இலக்கியமாக இருக்க முடியும்.
போரில் மனிதனுக்கினையாக பங்கு பெறும் இன்னொரு உயிர் குதிரை. குதிரையைப் பழக்குதல் என்பது வேறு, ஓர் குதிரையைப் போர்க்குதிரையாக பழக்குதல் என்பது வேறு. தன் நிழலைப் பார்த்து கூட மிரளக் கூடிய ஓர் விலங்கை எரிந்து கொண்டிருக்கும் ஓர் கோட்டையை நோக்கி ஓட வைக்கப் பழக்குவது என்பது மானுடம் கண்டடைந்த ஓர் உச்ச பட்ச அறிவே. இத்தனைக்கும் புரவி ஓர் சைவ உண்ணி. நகுலன் சொன்ன கொலையின்பத்தை, ஓர் உயிரை எடுப்பதில் உள்ள இன்பத்தை குதிரை, யானை மற்றும் எருதைப் போல அறிந்த மிருகம் வேறொன்று இல்லை என்ற கூற்று இன்று முற்றிலும் வேறாக பொருள் கொள்கிறது. அவ்வின்பம் பற்றிய எண்ணம் இல்லாத ஒன்றால் போரில் பங்கெடுக்கவே இயலாதே. இன்றைய அத்தியாயத்தில் போரில் புரவிகளின் செயல்திறனையும் பதிவு செய்திருக்கிறார் ஜெ.
அஸ்தினபுரியின் வீரர்கள் அலை அலையாக முன்னேறுகின்றனர். முன்னால் புரவியில் செல்லும்வில்லவன் ஒருவனை ஓர் அம்பு தாக்க அவன் கீழே விழுகிறான். பின்னால் வரும் பூரிசிரவசின் புரவி அவனைத் தாண்டிச் செல்கிறது. தன் முன் உள்ள தடையைத் தாண்டுவது எந்த மிருகமும் செய்வது தான். ஆனால் அதன் பிறகு ஜெ சொல்லும் ஓர் தகவல் தான் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. தன் மீதிருந்த வீரன் கீழே விழுந்த உடன் அந்த புரவி என்ன செய்திருக்கும்? மேலே இருந்து இயக்குபவன் ஒழிந்த பின்னர் அப்புரவி கட்டற்ற ஒன்று அல்லவா! ஜெ சொல்கிறார், "வில்லவனின் புரவி போர்க்கலை பயிற்றுவிக்கப்பட்டதாகையால் பின்னால் வந்த குதிரைகளை மோதாமல் முன்னால் ஓடியபடியே விலகிச்சென்று வளைந்து பின்னோக்கி திரும்பியோடியது." இது புரவி மேலிருந்த வில்லவன் கீழே விழுந்த நிகழ்வு. வில்லவன் உயிரோடிருக்க புரவி மீது அம்பு பட்டால் என்ன ஆகியிருக்கும்? அதையும் இன்றைய அத்தியாயத்தில் காணலாம். அவ்வாறு அம்பு பட்ட குதிரை கழுத்தை அம்பு தைத்த விலாவினை நோக்கித் திருப்பி முன்பக்கமாக கீழே விழுந்து புரள்கிறது. இந்த நிகழ்வில் குதிரையின் மொத்த எடையும் குதிரையின் கால்களிலும், உடலிலும் மட்டுமே நிகழும். மேலிருக்கும் வீரன் முன்னோக்கி அதன் கழுத்துப் பகுதிக்குச் சென்று விடுவதால் குதிரை கீழே விழுவதால் அவனுக்கு காயம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் வெகுவாகக் குறையும். மேலும் அவன் எளிதாகக் குதித்து ஓடவும் இயலும். மேலும் "போர்ப்புரவிகள் வெறிகொண்டிருந்தன. அனலையும் அம்புகளையும் அவை அப்போது அஞ்சவில்லை. முன்னால் செல்வதற்காக அவற்றை தூண்டவே வேண்டியிருக்கவில்லை" என்று எழுதுகிறார் ஜெ. புரவிகளைப் போருக்குப் பழக்குதல் என்பதில் எவ்வளவு நுணுக்கங்கள். எத்தனைப் போர்களைக் கண்டிருந்தால் இத்தனை கூரிய ஞானம் வாய்த்திருக்கும். அபாரம் ஜெ. இத்தகைய சிறு தகவல்களே போர் என்ற ஒன்றை முழுமையாக நம் கண் முன் நிகழ்த்துகின்றன.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.