ஜெ
வெண்முரசின் அத்தியாயங்கள் சில சமயம் கொந்தளிப்பாக இருக்கின்றன. சிலசமயம் அப்படியே அடங்கி மெதுவாகச் செல்கின்றன. மெதுவாகச் செல்லும்போது கிடைக்கும் ஆழத்தின் சித்திரமே வேறு. கிருஷ்ணனை தேவபாகனாக காட்டும் இடம் உதாரணம். பாரதவர்ஷமெனும் யாகப்பசுவை பங்கிடப்போகும் தேவபாகன் அவன். அதை ஏன் செய்கிறான் என்றால் ஒற்றுமையாக இருப்பதற்காக. அந்தக்கதையின் நுட்பம் நினைக்க நினைக்க பெருகிக்கொண்டே போனது
அந்த விருந்தை பலமுறை படித்தேன். நூற்றுக்கணக்கான தகவல்கள். சமையல்குறிப்பையும் சேர்த்து சொல்லியிருக்கும் உணவுவகைகள். அதை உண்பதற்கான முறைமைகள். ஒரு பிரம்மாண்டமான பெருவாழ்க்கையை கண்களாலும் எண்ணத்தாலும் காணமுடிந்தது.
இந்திரப்பிரஸ்தம் பற்றிய வர்ணனையும் அற்புதமானது. அதை ஒரு குன்றின் மேல் அமைந்த நகரமாக எண்ணவே முடியவில்லை. ஆனால் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் நதிக்கரையில் குன்றைத்தேடித்தான் கட்டுவார்கள்.
இத்தனை தகவல்களும் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை கற்பனையைத்தான் வளர்க்கின்றன. அதுதான் வெண்முரசு அனுபவம்
ஸ்ரீதர்