பிரயாகை என்ற இந்நாவல் வெண்முரசு நாவல்வரிசையில் முதற்கனல்,மழைப்பாடல்,வண்ணக்கடல்,நீலம் ஆகியவற்றுக்குப்பின் ஐந்தாவது. ஒரு தனிநாவலாக இது திரௌபதியின் பிறப்பின் பின்னணியையும் அவளுடைய ஆளுமையின் முழுமையையும் சொல்லி முடிகிறது. அதன் ஒழுக்கில் வாழ்க்கையை ஆட்டுவிக்கும் நுண்ணுணர்வுகளை வஞ்சங்களை விழைவுகளை விரித்துரைத்துச் செல்கிறது.
மகாபாரதம் காட்டும் தரிசனங்களில் முக்கியமானது வாழ்க்கையின் நிகழ்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று தொட்டுத்தொட்டுச் சென்று ஒட்டுமொத்தமாக ஒரு முழுமையை உருவாக்கும் விந்தை. தனித்தனியாக நோக்கினால் அவையனைத்தும் தற்செயல்கள் எனத் தோன்றலாம். தொகுத்து நோக்குகையில் பெரும் கோலம் ஒன்று தெளிந்துவரும். இந்நாவல் அளிக்கும் பார்வை அதுதான்
நுண்ணியவற்றில் இருந்து பேருருவங்கள் எழுகின்றன. வஞ்சம் வஞ்சங்களாக விளைகிறது. விழைவு விழைவின் பெருக்காகிறது.ஒன்று பிறிதொன்றை என இங்குள்ளவை அனைத்தும் செயலூக்கம் கொண்டு வாழ்க்கையை சமைப்பதை எழுதவே இந்நூலில் முயன்றிருக்கிறேன்
இந்நூலின் ஓவியங்களை அமைத்த நண்பர் சண்முகவேல் அவர்களுக்கும் உதவிய ஏ.வி.மணிகண்டன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இந்நூலை ஒவ்வொருநாளும் பிழைதிருத்தி உதவிய ஸ்ரீனிவாசன் சுதா தம்பதியினருக்கும். இணையதளத்தை நடத்தும் ராமச்சந்திர ஷர்மாவுக்கும் நன்றி.
நூலின் பிரதியைச் செம்மையாக்க உதவிய ஹரன் பிரசன்னாவிற்கும் கிழக்குபதிப்பகத்திற்கும் நன்றி.
இந்நூலை இருபதாண்டுகளுக்கும் மேலாக என் நலம்நாடும் மூத்த நண்பராகவும் வழிகாட்டியாகவும் திகழும் அ.முத்துலிங்கம் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெயமோகன்