அன்புள்ள ஜெ,
உங்களின் கற்பனை வீச்சின் உச்சபட்ச சாத்தியம் என்று நான் கருதுவது மகாபாரத தொன்மங்களை வெண்முரசில் நீங்கள் கையாளும் விதம். அநேகமாக அனைத்து தொன்மங்களையும் சாத்தியத்தின் அருகில் கொண்டு வந்துவிட்டீர்கள். ஒவ்வொரு தொன்மத்துக்கும் அதன் பாத்திரத்திற்குமான தொடர்பினையும் மிகச் சிறப்பாக வெளிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறீர்கள். அதன் உச்சம் என்பது கிருஷ்ணன்.
நீங்களே ஓர் கடிதத்தில் சொல்லியது போன்று பாரதம் கண்ட மிகப் பெரிய மாயப்புதிரானவன் கிருஷ்ணன். ஒரு மனிதனே தொன்மமாக ஆனவன். அவனை எவ்வாறு கையாளப் போகிறீர்கள் என்று வெகுநாட்கள் எண்ணிக் கொண்டிருந்தேன். பிரயாகை தொட்டே அவன் வரத்துவங்கிவிட்டாலும் வெண்முகில்நகரத்தில் தான் அவன் பேருரு கொள்கிறான்.
அவனை மொத்தமாகக் காட்டியது இன்றைய சூரர் மற்றும் வசுதையுடனான அவனது உரையாடல். முற்றிலும் சாத்தியமான,சாமானிய தளத்தில் அவர்கள் உரையாடிக் கொள்கிறார்கள். அதே உரையாடலுக்கு விசேஷ தளத்தில் முற்றிலும் வேறு அர்த்தம் வருகிறது. சூரன் கிருஷ்ணன் மனிதர்களிடம் விளையாடுகிறான் என்பதை நம்புவதாகச் சொல்கிறான். அதற்கு கிருஷ்ணன், "என்னை அறியத்தொடங்கிவிட்டீர்… என்னிடம் வந்து சேர்வீர்" என்கிறான். ஒருவகையில் பார்த்தால் தன் பெயரை அறிந்த தலைவன் ஊருக்குப் போய் அவனுக்காக சேவை செய்து அவனுக்காகவே வாழ்வதை சூரன் செய்வான் என்ற அர்த்தம் வருகிறது, சாமானியத்தில். அதுவே விசேஷத்தில் தம்மை ஆட்டுவிக்கும் தெய்வங்களை அறிபவன் விடுதலையடைகிறான், அத்தெய்வத்திடமே சென்று சேர்கிறான் என்று வருகிறது. இனி கிருஷ்ணனின் ஒவ்வொரு சொல்லையும் இரு தளத்திலும் கண்டாக வேண்டும் என்று நினைக்கிறேன். துவாரகையில் சாத்யகியிடம் அவன் சொன்ன, "இங்கு பல்லாயிரக்கணக்கானவர்களாக பணி செய்பவன் நானே. ஆனால் அவன் என்னை வந்து அடைவதே இல்லை" என்ற சொல் இன்று பல அர்த்தம் கொள்கிறது.
அவன் தன்னைப் பற்றி தனக்கு ஆணவம் சிறிதும் இல்லை என்றுவிட்டு, "எனக்கென எந்தத் தன்னியல்பும் இல்லை. அந்த முற்றத்தில் வந்திறங்கிய நான் அல்ல இப்போது உம்முடன் பேசுவது. உள்ளே அரசியிடம் பேசப்போகிறவன் இன்னும் பிறக்கவில்லை" எனச் சொல்லுமிடத்தில் தான் யார் என்பதை நமக்கெல்லாம் சொல்கிறான். ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ற ஒருவனைப் பிறப்பித்துக் கொண்டே செல்வது என்பது செயலிலிருந்து தன்னைப் பிரிக்கும் அபாரமான உத்தி அல்லவா! சிறு பொழுதே வாழும் ஒருவனின் அகங்காரம் எத்தன்மையதாயிருக்கும்? அது எப்படி புண்படும்? அதனால் தான் சீர்தூக்கிப் பார்த்து கருணையற்ற அறத்தை அவனால் நிலைநாட்ட முடிகிறது. அதனால் தான் பதினாயிரம் மனைவியர் இருந்தாலும் அவனால் பிரம்மச்சாரியாக இருக்க முடிகிறது. அதை உணர்வதால் தான் பதினாயிரத்தவரும் பூசலின்றி இருக்க முடிகிறது.
இங்கே வசுதையிடம் அவன் பேசுமிடம் மற்றுமோர் நுட்பமான இடம். வசுதையின் கனவு வழியாக அவளை அறிகிறான் கிருஷ்ணன். அவள் அவனை 'கண்ணா' என்று அழைக்கிறாள். ஆம், அவளும் இந்த மாயவனுக்கு அடிமை தான். ஆனால் அவள் பிரேமையைத் தேர்கிறாள். அங்கே எனக்கு ராதை தான் ஒரு கணம் தோன்றி மறைந்தாள்.
கிருஷ்ணனை இருவகையில் அறிகிறார்கள். ஒன்று பிரேமை மூலம். வசுதை உட்பட எண்ணிறந்தவர்கள் அவ்வழியில் வருகிறார்கள், வரப் போகிறார்கள். மற்றொன்று தாசனாதல் மூலம். தொழும்பர் குறி ஏற்றுக் கொண்ட சாத்யகி போன்று. இன்று பேசிச் சென்ற சூரனைப் போன்று. அந்த சங்கு சக்கர தொழும்பர் குறியைத் தானே இன்றும் தீவிர வைணவர்கள் அணிந்து கொள்கிறார்கள். ஏன் நீங்கள் பெருமாளைத் தவிர மற்றவர்களை வழிபட மறுக்கிறீர்கள் எனக் கேட்ட போது கண்ணீருடன் அதுவே தன் கடமை என்றும், கற்பு என்றும் கூறிய என் நண்பனை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அவனின் அந்த தழுதழுப்பு அன்று எனக்கு ஒரு வகையில் ஆச்சரியமாகவும், மற்றோர் வகையில் அதிர்ச்சியாகவும் இருந்தது. இப்போது சாத்யகியைப் பார்க்கும் போது அது புரிகிறது.
மிகச் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறான் மாயவன். யாருக்கு என்ன தேவையோ அதை அளிக்கிறான். வசுதை துவங்கி குந்தி வரை. அனைத்தும் அறிந்தவன்.
மகராஜன் அருணாச்சலம்.