Monday, March 30, 2015

துவாரகையின் பொருளியல்





அன்புள்ள ஜெயமோகன்,

வெண்முரசு இன்றைய பகுதியில் கிருஷ்ணனின் பொருளாதார முறைமைகள் குறித்த குறிப்பு வருகிறது. வணிகத்தில் திறமை கொண்ட ஒருவரை அவர் உப்பு பரப்பியதை வைத்தே அறிகிறான். அவரை துவாரகைக்கு ஈர்க்க முயல்கிறான். துவாரகையின் வளர்ச்சி அது மாபெரும் சந்தை என்பதை வணிகர் புரிந்துகொண்டதனாலேயே உருவாகியது. அதையே கிருஷ்ணன் வணிகருக்கும் புரியவைக்கிறான். வணிகரைக் கட்டுப்படுத்தியே பொருளீட்டி வந்த ஷத்ரிய அரசுகளின்கீழ் பணியாற்றிய அவ்வணிகருக்கு முதலில் தடுமாற்றம் ஏற்படுகிறது. பின்பு இயல்புநிலைக்குத் திரும்பும் அவர், கிருஷ்ணனிடமே தன் விளையாட்டைக் காட்ட முயல்கிறார். அனைத்தும் தெளிவடைந்தபின்னும் ஐயத்துடன் திரும்புவதாகக் காட்டிக்கொள்கிறார்.

இன்றைய பொருளியல் jargon கொண்டு சிந்திக்கும்போது ஷத்ரிய அரசுகள் சோஷலிச முறையில் இயங்குகின்றன. வணிகத்தை முடிந்தவரை "கட்டுப்படுத்த" முயல்கின்றன (planning commission போன்ற அமைப்புகள் மூலமாக). கிருஷ்ணன் புதுவிதமான முறையைக் கொண்டுவருகிறான். அது இன்றைய capitalism போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் அத்துமீறக்கூடிய கார்ப்பரேட்டுகளைக் கட்டுப்படுத்த ஒருகையில் வாளும் மறுகையில் தராசுமாக (justice system?) அவன் அரசு இயங்குகிறது. கார்ப்பரேட் மனத்தைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவர்களைப் பயன்படுத்தித் தன் நாட்டை வளப்படுத்திக்கொள்ளும் கலையில் வல்லவனாகவே கிருஷ்ணன் காட்டப்படுகிறான்.

குஜராத் மூவாயிரம் ஆண்டுகளாக இப்படித்தான் இயங்கிவருகிறதா? அதனால்தான் குஜராத் வணிகசமூகமாக ஆகியதா? இன்றைக்கும் குஜராத்தின் வளர்ச்சி உலகவணிகர் அனைவராலும் ஏற்பட்டதுதானே? சோஷலிசமுறை capitalism ஆக மாறியதே கிருஷ்ணனைப் பேரரசன் ஆக்கியது போலும்.

அன்புடன்,
த.திருமூலநாதன்.