Tuesday, March 17, 2015

சாத்யகியின் அணுக்கத்தொண்டு


    சாத்யகி தன்னைக் கண்ணனின் அணுக்கத்தொண்டனாக ஒப்புக்கொடுக்க விழைவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நம் அறிவு அறிந்துகொள்வதற்கு முன்  நம் ஆன்மா அறிந்துகொள்ளும் நமக்கு இனி என்றுமே வழிகாட்டியாக யார் இருக்கப்போகிறார்கள் என்பதை. அவர் தான் இனி என் உறவு , என் தோழமை,  என் குரு, என் தெய்வம் எல்லாம். அவரிடம் கேட்பதற்கு ஒன்றுமில்லை அவர் காலடியை பின்பற்றி நடப்பது ஒன்றே என் ஒரே நோக்கம். 

எனக்கான வீடுபேறு அவரை அணுகி இருப்பதிலேயே கிடைத்துவிடும் என்பதால் எனக்கு தனியாக எந்த ஆத்ம சாதனையும் தேவையில்லை. அவர் என்னை திரும்பிக்கூட பார்க்கவேண்டியதில்லை. அவர் அருள்பார்வை என்மீது விழவேண்டும் என்பதில்லை. என்னை அவர் எந்தவிதத்திலும் பொருட்படுத்த தேவையில்லை. என் தேவையெல்லாம்  என் விழிகள் செல்லும் தூரத்திற்குள் அவர் இருக்குமளவுக்கு, அவர்  குரலோசைகள் என் காதில் விழும் அளவுக்கு நான் அவரருகில் இருக்க வேண்டும் என்பதுமட்டுமே.   அவர் தேவைகளை அவரறிவதற்கு முன் அவருக்கு உறுத்தாமல் செய்துவிடும் அளவிற்கான ஆற்றல் மட்டும் எனக்கிருக்கவேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்வேன், 


என் இந்த வாழ்வில் நான் அப்படி அணுக்கத்தொண்டனாய்இருக்க விழைந்த ஒருவர் அண்ணல் காந்தி, மற்றொருவர் பகவான் இரமணர். ஆனால் அவர்கள் காலத்தில் என் வாழ்வு நிகழவில்லை.  இப்போது ஒருவர் என் மனதில் அதைப்போன்ற ஒருவராக உருவாகி வருகிறார்.  காலம் என்னை அவரிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என விழைகிறேன்.

 Thandapani Duraivel