Thursday, March 26, 2015

மகாபாரதத்தின் கதாநாயகன் – “தருமன்”



மேலோட்டமாக பார்த்தால் இந்த மாபெரும் காப்பியத்தின் கதாநாயகனாக சட்டென்று “அர்ஜுனன்” பெயர்தான் ஞாபகம் வரும். சிலர் “கர்ணன்” பெயர் சொல்லக்கூடும். சிலர் “கண்ணன்” பெயர் சொல்லக்கூடும்.

இந்த காப்பியத்தின் உட்கருத்தை புரிந்தவனுக்கோ கண்டிப்பாக தெரிந்து இருக்கும் இது அறத்தின் கதை. தர்மத்தின் கதை.தர்மமே வெல்லும் என்று உலகுக்கு சூள் உரைத்த கதை.  இது எங்கள் தர்மனின் கதை.

இந்த காப்பியத்தில்  உள்ள கதாபாத்திரம் எல்லாம் இவனை நோக்கியே குவிந்து இருக்கும். திட்டியோ, புகழந்தோ,பகடி செய்தோ, பொறாமை பட்டோ, இவனை பற்றியே பேசி கொண்டிருப்பார்கள். ஆம். உலகின் எல்லா உணர்வுகளுக்கும்    பிரம்மம்  இது தான். வீரம் (அர்ஜுனன்), ஆற்றல் (பீமன்), கொடை (கர்ணன்),இறை (கண்ணன்), பகை (துரியன்), சினம் (திரௌபதி), மதி (விதுரர்), தியாகம் (பீஷ்மர்),கௌரவம் (குந்தி),  இவை எல்லாம் இவனை  (அறம்) நோக்கியே சுற்றி கொண்டிருக்கும்.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல

அறத்துடன் வருவதே இன்பம்; பிற வழிகளில் வருவன துன்பமே, என்று தெரிந்தவன் இவன்.அறமுதல்வன். அகத்தில் அறத்தைய் முழூவதுமாக நிறைத்திருப்பவன். மண்ணில் வந்த அறசெல்வன்.

ஆனால் “வண்ணக்கடலில்” ஆரம்பித்து “பிரயாகை” முழுவதுமே இவன் பகடி செய்ய பட்டே கொண்டு இருப்பான். பீமன் இவனை பற்றி பேசும் பொழுது எல்லாம் பகடியாகவே பேசுகிறான். அர்ஜுனன் இவனை பார்த்து பல நேரம் பகடியாகவே சிரிக்கிறான். துரியன் இவணை பகடியாகவே பொறாமை படுகிறான். இவனை பார்த்து குந்தி சிரிக்கிறாள், திரௌபதி சிரிக்கிறாள். ஏன்? குரங்கு கூட இவனை பார்த்து பகடி செய்கிறது.

ஏன்? ஏன் இத்தனை இளக்காரம்? ஏன் இத்தனை சிரிப்பு? ஏன் இத் தனை கேலி? அறவான் இவர்கள் கண்ணிற்கு கோழை ஆகவே தெரிகிறான்.

நான் காந்தி வழியாக ஜெமோ விற்கு வந்து பிறகு வெண்முரசில் நுழைந்தவன். இவனை பற்றி நினைக்கும் பொழுது எல்லாம் எனக்கு காந்தியே ஞாபகத்திருக்கு வருகிறார்.

அவருக்கும் எத்தனை கேலிகள், எத்தனை சிரிப்புகள். பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை பார்த்து சிரித்தது. திலகரும், சுபாஷ் சந்திரா போஷும் அவரை பார்த்து கோழை என்றுதான் சிரித்தார்கள். (ஷாத்ர குணம் கொண்டவர்களுக்கு எல்லாம் அவரும் சரி தர்மனும் சரி கோழை ஆகவே தெரிவார்கள்). கொள்கையில் தான் வலது இடது, ஆனால் இவரை பார்த்து சிரிக்கும் பொழுது அவர்கள் ஒன்றாக ஆகி விடுகிறார்கள். தலித் ஆர்வலர்களும், இஸ்லாமிய, கிறிஸ்துவ நண்பர்களும் , இந்து வெறியர்களும்,  இவரை  பார்த்து இன்றும் மாய்ந்து மாய்ந்து சிரித்து  கொண்டே இருக்கிறார்கள். அறிவு உலக கனவான்கள் அவரை பற்றி எழுதி எழுதியே சிரிக்கிறார்கள்.  இன்று உள்ள இளைஞர்கள் எல்லாம் முற்போக்கு யென்றால் இவரை பார்த்து சிரிப்பது தான் என்று நினைக்கிறார்கள். ரூபாய் நோட்டில் காந்தியை பார்க்கும் பொழுது எனக்கு தோன்றுகிறது அவரும்  அவரை பார்த்து சிரித்து கொண்டே இருக்கிறார்.

அறம் அவ்வளவு கேலியான பொருளா என்று மனம் வருந்தியது. ஆனால் “பிரியாகை” யின் முடிவில் பகுதி 89 வில் தர்மனின் கடிதத் தை படித்து திருதராஷ்ட்ரர் அழும் பொழுது மனம் புல்லரித்து போகிறது.கண்களில் அறம் கண்ணீராய் சிந்தியது.

மூடா, மூடா, நீயும் நானும் யார்? வெறும் மனிதர்கள். இக்குடியில் பிறந்தமையால் மட்டுமே சொல்லிலும் நினைவிலும் வாழப்போகும் பதர்கள்… அவனோ காலங்களைக் கடந்து காலடி எடுத்துவைத்து நடந்துசெல்லும் பேரறத்தான்”...

விதுரா, நீ அறியமாட்டாயா என்ன? இவன் குலமுறைமை அறிந்த யயாதி. நீதியறிந்த புரு. அவர்கள் ஒரு பெரும் தொடர். இப்பேரறத்தார் நடந்துசெல்லும் பாதையை செப்பனிடும்பொருட்டே அறிவற்ற நாங்கள் பெரியபாதங்களுடன் வேழவடிவம் கொண்டிருக்கிறோம்…”..

ஐந்தாம் வகுப்பில் ஒன்றுமே புரியாமல்  காந்தியின் படத்தை பார்க்கும் பொழுது எல்லாம் வந்த  கண்ணீர்,  பத்தாம் வகுப்பில் அவரின் சுய சரிதை படிக்கும் பொழுது வந்த  கண்ணீர், பின்பு அவரை பற்றி நினைக்கும் பொழுது எல்லாம் வந்த அதே கண்ணீர் அப்பொழுது மழையாய் பெய்தது.

காந்தியும், தர்மனும், எப்பொழுதும்  சிரிக்க பட்டே, பகடி செய்ய பட்டே கொண்டே  இருப்பார்கள். ஏன் என்றால் மனிதர்கள் அவர்கள் இயலாமாயை சிரிப்பை வைத்தே மறைக்க தெரிந்தவர்கள்.