Saturday, March 28, 2015

நாடகத்தில் உண்மை

 
 
 
 
அன்புள்ள திரு.ஜெ வணக்கம். 

பறத்தல் படித்தேன், இது பித்தனின் பத்துநாள் அக்கினி செடியில் இருந்து ஒரு புது துளிர் வந்ததுபோல் உள்ளது, துளிர் என்பதாலேயே மென்மையாக ஆனால் உயிர் துடிப்பின் அதிர்வை உணரமுடிகின்றது, தகிக்கின்றது. என்னால் அந்த உயரத்தில் நின்று உங்களைப் பார்க்கமுடியவில்லை, நகர்ந்து வெண்முரசு பகடைத்தளத்தில் நின்று சகுனியை, கண்ணனைப்பார்க்கின்றேன். 

ஒரு மென்மையான விளையாட்டுப்போன்ற பெரும் உக்ரம் நிறைந்த போர்க்களம், அகம் மட்டுமே விளையாடும் வீரவிளையாட்டு அதைப்படித்து அசந்தபோது நினைவில் வந்தது இந்த திருக்குறள். 

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

,இந்ந திருக்குறளில் சொல்லெல்லாம் பொருளாகி, பொருளே வாழ்வாகி, வாழ்வென்றும் சொல்லென்றும் இல்லாத ஒரு தருணத்தில் இந்த திருக்குறள் வைக்கப்படுத் தளம் பெருகி செல்லும் வகை வண்டு சிலிர்த்தேன். சகுனியும் கண்ணனும் பகடையாடும் அன்று இந்த திருக்குறள் சகுனியின் கண்கள் வழியாக கண்ணன் ஆவதைக்கண்டு சிலிர்த்தேன். கண்ணன் ஆண்தான் ஆனால் அவன்தான் அப்பன் சிவனின் பாகமான அன்னைசக்தி. அந்த சக்தி என்னும் பெண்மையின் மூலத்தை அவன் வேறுவேறு வண்ணத்தில் வடிவத்தில் அனைவரிடமும் காட்டுகின்றான். சகுனியிடம்கூட அவன் பகடையாடும்போது அந்த பெண்மையின் மூலத்தை ஐம்புலன்களை அறியும் வகையில் துளிர்க்கவைப்பதாகவே படுகின்றது எனக்கு. வெண்முரசின் நாதத்தில் மிதந்துபோகும் அந்த இசையின் துடிப்பு தழுவிச்செல்கின்றது. 

சகுனி வெல்வதற்காக விளையாடுகின்றான், மாறாக கண்ணன் நான் யார் என்பதை நீ அறி என்று காட்டுவதற்காக விளையாடுகின்றான். அன்று வில்போட்டியில் தனது ஆண்மையை உலகுக்கு, இன்று பகடையில் தனது பெண்மையை சகுனிக்கு. கண்ணன் வெல்வதற்காக விளையாடவில்லை மாறாக தன்னை காட்டுவதற்காக விளையாடுகின்றான் இல்லை..இல்லை தன்னை அறியுங்கள் என்று ஒரு வாய்ப்பை அளிக்கின்றான். 

சகுனியும் ஏதோ ஒரு புள்ளியில் அவனை காதலிக்கத்தான் வேண்டும் அது அவன் நடத்தும் நாடகமா? அல்லது நாடகத்தின் உண்மையா?

நன்றி
அன்புடன் 
ராமராஜன் மாணிக்கவேல்.