அன்புள்ள ஜெயமோகன்,
நான்கைந்து ஆண்டுகள் முன்புவரை பெருவிருந்து நிகழ்வுகள் (உண்டாட்டு?) எவற்றிலும் நான் கலந்துகொண்டதில்லை. திருமண விருந்துகளில்கூட குழம்பு, ரசம், மோர் சாதம் மட்டுமே. பெங்களூர் வந்ததன் பிறகே பெருவிருந்துகளில் கலந்துகொள்ளும் நல்லூழ் வாய்த்தது! முதன்முதலாக பெரிய ஹோட்டல் ஒன்றிற்குச் சென்றபோது Starter, Appetizer, Main dish, Dessert அதன்பிறகு Icecream, Juice, Soda என்று நாற்பது பக்க நோட் அளவுக்கு உணவுப்பொருள் பட்டியல் வந்தபோது அதிர்ந்துதான் போனேன். "உண்பதற்காக வாழாதே!" என்ற சொல்வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது. இப்போது அத்தகைய விருந்துகள் பழகிவிட்டன என்பது வேறுவிஷயம்.
இன்றைய 44-ஆவது அத்தியாயத்தைப் படிக்கும்போது மீண்டும் அதேபோல் தலைசுற்றியது. எத்தனை வகையான உணவு? உப்புகோள், ஊன்கோளில் தொடங்கி, அன்னவரிசை (Main dish) மட்டும் எத்தனை வகைகள்?
1.ஏழு கூலமணிகளால் ஆன அப்பங்கள்
2.ஏழு பருப்புகளால் ஆன கூட்டுகள்
3.ஐவகைக்கீரைகள்
4.ஐந்து நீர்க்காய்களைக்கொண்டு சமைக்கப்பட்ட களிக்கூட்டுகள்
5.ஐந்து நார்க்காய்களால் சமைக்கப்பட்ட உலர்கூட்டுகள்
6.ஐவகைக் கிழங்குகள் வேகவைத்து செய்த மாவுக்கூட்டுகள்
7.மூவகை அமிலக்காய்களை மோருடன் சேர்த்தெடுத்த புளிக்கறிகள்
என்று சிந்தனைக்கு அப்பாற்பட்ட உணவுவகைகள்!
அதன்பிறகு அக்காரவரிசை (Dessert)! இன்சோறுகள், இன்னுருளைகள், இன்களிகள், இன்பழக்கூழ்கள் என நான்குவகையாக! இதுவரை நான் உண்ணநினைத்ததைவிட (உண்டதைவிட அல்ல) பத்துமடங்கு உணவை, அதுவும் ஷத்ரியமுறையில் ஓசையிடாமல் உண்பதற்கு எத்தனை பயிற்சி வேண்டுமோ? பீமசேனர்கள் உருவானதில் வியப்பேதும் இல்லை என்று நினைத்துக்கொண்டேன். உணவு பற்றிய சுவையான வாசிப்பை அளித்ததற்கு நன்றி.
அன்புடன்,
த.திருமூலநாதன்.