Tuesday, March 24, 2015

கண்ணன் ஒரு அந்தாதி




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

அபிராமிப்பட்டர் 'அம்மா! அபிராமி! நான் வணங்குவதற்கு உன்னையன்றி வேறு ஒரு தெய்வம் இங்கு இல்லை என்று கூறுவதற்கு எல்லாக்காரணங்களையும் கூறுகின்றார்.

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவாமுகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே-அபிராமி அந்தாதி.

அவர்கூறும் எல்லாக்காரணங்களையும் எண்ணிப்பார்த்தால்… என்ன ஒரு அற்புதமான முரண். பிறவா இறவா இறைவனாகிய ஆதி கிழவனுக்கும் மூத்தவள். மூப்பென்பதே இல்லாத இளையவனுக்கும் இளையவள். அவன் விடம் குடித்தும் சாகாதவன், இவன் மூப்பே வராததால் சாகாதவன். அந்த இரண்டுபேரையும் அவர்கள் எல்லையைத்தாண்டி வெல்கின்றாள் அன்னை. 

முரணில் மூழ்கடிக்கும் இந்த வாழ்க்கையில் சிக்கி தவிக்கும் இந்த மானிட வாழ்வில் முரணில் முளைத்திருக்கும் அருட்பெரும் ஜோதியை கண்டுகொண்டவன் தெய்வத்தை கண்டுகொண்டவன் ஆகின்றான்.

மனிதனாக பிறந்துவிட்ட இளையயாதவன் கிருஷ்ணன். மனிதனாக இருக்கக்கூடாது என்பதற்காகவே முரண்களில் பூத்துப்பூத்து மலர்கின்றான். எது மானிடர்களின் வாழ்வியல் எல்லையோ அந்த எல்லையை தாண்டுகின்றான். பெரியதில் பெரியதாய், சிறியதில் சிறியதாய். பெரியவர்களிடம் எல்லா பெருமைகளோடும் செல்கின்றான், எளியவர்களிடம் எல்லா எளிமையோடும் செல்கின்றான். இதன் மூலமே நான் தெய்வம்..நான் தெய்வம்..நான்தெய்வம்.. கண்ணுள்ளவர்களே கண்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிச்செல்கின்றான்.

எல்லாவற்றையும் துறந்தவன்தான் தனக்கே தனக்கு உரித்தான முக்தியை அடைகின்றான். எதையுமே துறக்காதவன் கடைசியில் தன்னையே எமனுக்கு தந்துவிடுகின்றான். அந்த இளையயாதவன் துறந்தவன் என்றோ, துறக்காதவன் என்றோ யாரும் அறுதியிட்டு சொல்லமுடியாதவனாகவே செல்கின்றான். “கடைமையை செய் பலனை எதிர்ப்பார்க்காதே” என்பதுதான் இந்த உலகுக்கு அவன் சொன்ன மாபெரும் தத்துவம் ஆனால் அவன் வாழ்க்கையோ எதுபாலனோ அதுமட்டும்தான் செயலாக இருக்கிறது அதற்காக அவன் எந்த எல்லைக்கும் செல்கின்றான். ஒரு கையில் மலரும் மறுகையில் குருதிவடியும் வாளும் கொண்டு செல்கின்றான். கம்சனையும், ராதையையும் இருகூறுகளாக உடைய பெரும்ஜோதியவன். ஒருபுறம் கல்லாய் ஜொளிக்கின்றான் மறுபுறம் மலராய் ஜொளிக்கின்றான். மொத்தமாய்ப் பார்க்கையில் அவன் கிருஷ்ணன். வெண்முரசின் அற்புதமே அதுதான். 

எல்லா மனிதரும் நாணப்படுவது தனது இன்பத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்காகத்தான், மாறாக இவன் மற்றவர்கள் இன்பத்திற்காக தன்னை நாணமிலியாக ஆக்கிக்கொள்கின்றான். மற்றவர் பசிக்காக தான் யாசிக்கின்றான்.  மற்றவர்கள் பெரியவர்களாக இருப்பதற்காக தன்னை இளையவனாக ஆக்கிக்கொள்கின்றான். தான் ஊர் சுற்றி இன்பம் அடையவேண்டும் என்ற ஆசையால் இல்லாமல், ஊர் தன்னை சுற்றி இன்பம் அடையவேண்டும் என்று ரதமேறி செல்கின்றான்.

பெண்கள் இடம் பூவாக, பூக்கொய்பவனாக,பூச்சூடுபவனாக நிற்பவன் ஆண்கள் இடம் போர்களமாக, வீரமாக, விழுப்புண்ணாக, பதக்கமாக நிற்கின்றான். அருகில் இருக்கும் சாத்தகிக்கு வெகுதூரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றான். வெகுதூரத்தில் இருக்கின்ற சகுனிக்கு அருகில் நடந்துக்கொண்டு இருக்கின்றான். 

இத்தனைக்கும் பின்னால் அஸ்தினபுரி எனது அன்னைப்பூமி என்றானே அந்த இடத்தில் அவன் குந்தியின் மைந்தனாகவே ஆகிவிட்டான். அவன் அன்று ஒருநாள் தேவகி, ரோகிணி,யாசோதை அந்த வரிசையில் குந்தியை விளையாட்டாய் வைத்தான் என்று நினைத்தேன். அவன் விளையாட்டுக்கூட வாழ்க்கைதான்.      

அன்னை பாசம் அத்தனை பெரியதா? அது இறைவனையே தான் இறைவன் என்பதை மறக்கசெய்யும் சக்திப்படைத்ததா?

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.