நெருங்கிய உறவினரின் திருமணத்தில் நான் ஓடி ஓடி வேலை செய்வதாக தோன்றும். சமையல் அறைக்கு விடுவிடுவென்று வேகமாக செல்வேன். சற்றுநேரம் அங்கு நின்று பார்த்தபின் எனக்கு அங்கு எந்த வேலையும் இல்லை என்று தெரியும். அங்கிருந்து வரவேற்பு முகப்பிற்கு சென்று பார்வையிடுவேன். அங்கே சென்ற பின்தான் நான் அங்கு வந்திருக்க தேவையில்லை எனத்தோன்றும். உடனே மணவறை சென்று அனைத்தும் ஒழுங்காக இருக்கிறதா என சரிபார்ப்பேன். ஆனால் முன்னரே பலமுறை அதை சரிபார்த்துவிட்டது நினைவுக்குவரும். அதனால் மீண்டும் சமையலறை செல்வேன். திருமணம் முடியும்போது மிகவும் களைத்திருப்பேன்.
கணித ஆய்வரங்ககள் நடத்தும் போதும் இதைபோல் அல்லாமல் உண்மையிலேயே எல்லா வேலைகளையும் நானே செய்யவேண்டியிருக்கும். அதில் சிக்கல் அதிகம் இருக்கும் வேலை அறிஞர்கள் வருவதற்கும் செல்வதற்கும் வாகனங்கள் ஏற்பாடு செய்வதும் உணவு கொணர்ந்து தருபவரை நேரத்திற்கு வரவைப்பதும்தான். யாரையும் நம்பி ஒப்படைக்கமுடியாது. எதையோ தவறவிட்டுவிட்டோம் என்ற எண்ணம் இருந்தவண்ணம் இருக்கும். சிலசமயம் மூளை ஸ்தம்பித்து நின்றுவிடும். சாப்பாடு இறங்காது. உணவு இடைவேளையில் வகைவகையான் உண்வுகள் இருந்தாலும் ரசம் சாதம் சாப்பிடுவேன். அப்படி சாப்பிடும்போது ஒருமுறை ரசம்சாதத்துடன் வடை என நினைத்து குலோப்ஜாமூனை சாப்பிட்டுக்கொண்டிருந்ததை அறிந்து திகைத்துவிட்டேன். அந்த நேரத்தில் அந்த காம்பினேஷனும் சுவையாகத்தான் இருந்தது.
தண்டபாணி துரைவேல்