Friday, January 8, 2016

சுயநலம் என்னும் குருட்டுத்தன்மை: (வெய்யோன் - 14)




   விழித்திறன் குன்றியவர்களை குருடர் என அழைக்க எனக்கு மனம் வலிக்கும். அது ஒர் இழித்துரைக்கும் சொல் போல ஆகிவிட்டது என்பது ஒரு காரணம். அவர்களின் அக்குறையை குறிப்பிட நேர்ந்தால் வேறு சொல்லில்தான் கூறுவேன்.    பார்வை இழந்தவர்களுக்கு குறைபாடிருப்பது என்பது உண்மைதான். என்றாலும். அவர்கள் தன் பார்வையின்மையின் இழப்பை மற்ற புலன்களின் திறன்களை மேம்படுத்தி ஈடுகட்டிக்கொள்கிறார்கள். நூறு சதவீதம் இல்லையென்றாலும்  கணிசமான அளவு அவர்கள் அதன்மூலம் பார்வையுள்ளவரின் திறனுக்கு அருகில் வருகிறார்கள். கைகளிலும் செவிகளிலும் அவர்கள் கொஞ்சம் விழிகளின் திறனைப் பெறுகிறார்கள்.  அதன் மூலம் அவர்கள் உலகை உணர்கிறார்கள்.
     

ஒருமுறை மாமல்லபுரம் கடற்கரைக்கொயிலுக்கு சென்றிருந்தபோது  அங்கு பார்வையற்ற ஒரு சுற்றுலா குழுவினரைப் பார்த்தேன்.  சிலைகளை, பாறை சுவர்களை கைகளால் தடவி அவர்கள் அறிந்துகொள்வதை அவர்களின் முக மலர்ச்சி காட்டியது. அவர்களில் ஒருவர் 'அடுத்தது நாம் என்ன பார்க்கப்போகிறோம் மாஸ்டர்'  என ஒருவரை வினவினார். அப்போது சட்டென்று எனக்கு உரைத்தது அவர்களை இனி பார்வையற்றவர்கள் என்று எப்படி சொல்ல முடியும். அவர்கள் மனதினில் இந்த உலகைப்பற்றிய, அதில் வாழும் மனிதர்கள் முதல் பெரும்பாலான விலங்குகள் வரை அனைத்துக்குமான  சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.  அதைக்கொண்டு அவர்கள் ஒப்பிட்டு அனைத்தையும் புரிந்துகொள்கிறார்கள்.
   ஆனால் குருட்டுத்தன்மை என்ற சொல்லை வேறு பொருள்களில் பயன்படுத்துவது மிகப் பொருத்தமாக இருக்கிறது. நான் குருடர் எனக் கூறப்போவது ஒன்றை பார்ப்பதற்கு மனமின்றி இருப்பவர்களைதான். எடுத்துக்காட்டிற்கு  எனக்கு நவீன ஓவியத்தைப் பார்த்து புரிந்துகொள்ளும் முயற்சியோ பொறுமையோ ஆர்வமோ இல்லை.  அதனால் நவீன ஓவியங்களைப் பொருத்தவரை  நான் குருடன்தானே. அதைப்போல் மேற்கத்திய இசையைப்பொறுத்தவரை,  வணிகவியல் பாடத்தினைப் பொருத்தவரை என்னை நான் குருடன் என்று சொல்லிக்கொள்வேன்.
  
 
 அப்படியென்றால் சமூகவாழ்வினைப் பொருத்தவரை குருடர் என்று எவரை சொல்லலாம்?   சமூகத்தைக் காணாதவன். அதாவது அவனைத்தவிர மற்றவர்கள் மேல் எவ்வித அக்கறையோ, கரிசனமோ, பொறுப்போ அற்றவன். எல்லாவற்றிலும் எனக்கென்ன கிடைக்கும் என இருப்பவன்.  சமூகத்திற்கு என்று எதையும் கொடுக்க விழையாதவன். மற்றவரின் இன்பம் துன்பம் இவற்றால் பாதிக்கப்படாதவன். மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காமல் ஜடப் பொருட்களைப்போல் பயன்படுத்திக்கொள்பவன். இவன் சமூகக் குருடன். அவனைப்பொருத்தவரை இந்தச் சமூகம் இருண்டு கிடக்கிறது.  அவன் அங்கு தன் அகங்காரத்துடன் தனித்திருக்கிறான். அவன் கைகளுக்கு எட்டும் எல்லாவற்றையும் எனது எனது என்று தனதாக்கிக்கொள்கிறான். அத்தகைய சமூகக் குருடனைத்தான்  வெண்முரசு  தீர்க்கதமஸ்மூலம் உருவகப்படுத்துகிறது என நான் கருதுகிறேன்.
 
தண்டபாணி துரைவேல்