‘நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை’.
எந்தச் சாய்வும் இல்லாமல், நிலையாக (கொட்பின்றி), இயலும் வகையில் எல்லாம்(ஒல்லும்வாய்) நட்பின் உறுதுணையாவதே நட்பின் அரியணையாகும் என்கிறார் வள்ளுவர். அப்படி ஒரு ‘நட்பின் வீற்றிருக்கை’யாக துரியனைக் காட்டியது இன்றைய வெய்யோனின் அத்தியாயம்.
தான் மட்டுமல்ல, தன் பரம்பரையே கர்ணனின் முன் தோற்றதாக அறிவித்து, தன் நாட்டையே அவனுக்குக் கொடுத்து, கர்ணனை ஷத்ரியனாக்கியவன் அவன். எனவே தான் பீஷ்மர் அனைத்து வகை நெறிகளின் படியும் கர்ணன் அரசாளலாம் என்கிறார். ஆனால் அவன் மணம் மீண்டும் ஒரு நெறி சார் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. முதலில் கர்ணனைச் சாடியவன், அவன் பிறப்பு காரணமாக அவனுக்கு ஒரு இழிவு நேர்வதைக் கண்டதும் உடனடியாக அவன் பக்கம் நிற்கிறான். மீண்டும் பாருங்கள், நண்பனுக்காக தான் ஒரு காட்டுமிராண்டியாகக் கூட மாற இயலும் என்றும், தன் உள்ளத்தின் சொல் ஒன்றே தனக்குப் போதும் என்றும் உரைக்கிறான். கர்ணனே யோசிக்கும் போதும், சிறிதும் தயங்காமல் கர்ணனின் விருப்பம் சத்யசேனையை மணப்பதென்றால் அவளே பட்டத்தரசியாகத் தொடரவும், அவளின் வழி மைந்தனே அரசாளவும் அவன் ஒப்புகிறான். மீண்டும் கர்ணனுக்காக அவன் மொத்த அவையையும் எதிர்க்கத் துணிகிறான். பிதாமகரின் சொற்களையும் புறக்கணிக்கிறான். உண்மையில் கர்ணனின் முடிவல்ல, துரியனின் நிலைப்பாடே அவைக்கு பெரிய சிக்கலைத் தருகிறது. சத்யசேனை அரசியாக முடியாது என்ற பிதாமகரின் சொல் அவையில் நின்றாக வேண்டும். இந்த நிலையில் தான் விதுரர் பேசுகிறார். கர்ணனை விழி நோக்கி அவன் கருத்தை அறிய வேண்டும் என்று அவைக்கு உரைக்கிறார். ஆனால் கண்களால் கர்ணனிடம் மன்றாடுகிறார். அதை உணர்ந்தே கர்ணன் பிதாமகரின் சொல்லை ஏற்கிறான். அப்போதும் துரியன் நண்பன் நலம் நாடுகிறான். மிகத் தெளிவாக கர்ணன் தன் துணைவியின் மகன் அரசாள வேண்டியதில்லை என்று சொல்லும் போதும், துரியன் அவன் சார்பாக நிலையை உணர்ந்து தான் பேசுகிறாயா என்று நண்பனின் நலம் நாடுகிறான்.
மேல் பார்வைக்கு அவன் விளைவுகளை உள்வாங்காமல் பேசுவதாகத் தோன்றலாம். ஒரு அரசனாக தன்னிச்சையாக, உணர்வெழுச்சியில் முடிவெடுப்பதாக எண்ணலாம். அப்படிப்பட்டவனை எப்படி அரசனாக ஏற்கிறார்கள் அஸ்தினபுரியினர்? ஆனால் அவனைச் செலுத்துவது அவன் பெருந்தன்மை. முன்பு பிரயாகையில் பீஷ்மர் திருதாவைப் பற்றி, “அவன் ஒரு வனவிலங்கு போல. அவற்றின் உணர்ச்சிகள் சொற்களால் ஆனவை அல்ல. ஆகவே அவை சொற்களையும் அறியாது. ஆனால் விலங்குகள் மறக்கக்கூடியவை. அவன் அகமோ அழிவற்ற அன்பு நிறைந்தது.”, என்ற சொற்களையே துரியனுக்கும் அளிக்கலாம். இன்றும் அவன் அகத்தால் தான் பேசுகிறான். அவன் அகம் உணரும் நீதி என்றுமே நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையே அவன் அரசனாகத் தொடர அனுமதிக்கிறது. அவன் கூட்டிக் கழித்து, லாப நஷ்டங்களைக் கருத்தில் கொண்டு முடிவெடுப்பவன் அல்ல, அவன் அகம் ஊறும் அன்பே முடிவுகளைத் தேர்ந்தெடுக்கிறது என்பதே குடிகளுக்கும், அவனால் ஆளப்படும் அரசர்களுக்கும் அவன் பால் மாறா விசுவாசத்தை அளிக்கிறது. எத்துயரையும் அவனுக்காகத் தாங்கும் துணிவையும் தருகிறது. அனைத்து வகையிலும் துரியன் ‘சிறியன சிந்தியாதான்’.
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்