Friday, January 1, 2016

மகனின் கொடை-வெய்யோன்-9



அன்புள்ள திரு.ஜெ வணக்கம். 

மகன் தந்தையை ராஜாவாக்க வேண்டிய தில்லை, அரண்மனைக் கட்டித்தர வேண்டிதில்லை, பொன்பொருளால் அபிஷேகம் செய்யவேண்டியதில்லை. கால்பிடித்துவிட்டு உடல்பேணி  பணிவிடை செய்யவேண்டியதில்லை. ஒரே ஒரு சொல்லை அவன்தந்தால் போதும். “இவனைப்பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தானோ” என்ற சொல்லை மட்டும் தந்தால்போதும்.  

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்லெனும் சொல்    
  
அந்த ஒரு சொல்லைத்தருவது எளிதான காரியமா? மண்ணில் விண்ணில் பிறந்த ஆணெல்லாம் தெரிந்தாலும் தெரியாமல் போனாலும் தந்தைக்கு மகனே. தந்தையும் ஒரு தந்தைக்கு மகனே. மகனாக பிறந்வர்கள் அனைவரும் அந்த சொல்லைத்தந்தைக்கு வழங்கியவர்கள் என்று சொல்லமுடியாத தூரத்தில் அந்த சொல் உள்ளது.

அந்த வழங்கமுடிய வளம்பொருந்தியச்சொல்லை இன்று கர்ணன் தந்தைக்கு வழங்குகின்றான், தந்தைக்கு என்பதைவிட தந்தைகளுக்கு வழங்குகின்றான். கர்ணன் தந்தையின் மகன் அல்ல தந்தைகளின் மகன். உயிரின் தந்தை, உடலின் தந்தை, உணர்வின் தந்தை   என்ற தந்தைகளின் குழுமத்திற்கு வழங்குகின்றான். ஒருவருக்கும் பாக்கி வைக்கவில்லை. இவர் நல்லவர் அவர் கெட்டவர் என்று வரிசை அறிந்து வழங்கவில்லை. வரிசை அறிந்து வழங்க அங்கு அவன் அங்கமன்னாக இல்லை. மகனாக மட்டும் இருக்கிறான்.

அஸ்தினபுரி அரசவையில் சூதன்மகளை மணக்கப்போகின்றேன் என்று துரியோதன்போன்ற பேரரசனின் நண்பனாய் வலக்கரமாக வீரத்தால் நின்று இருக்கும் கர்ணன் தந்தைக்காக சூதன்மகளை மணக்கிறேன் என்று சொல்ல எழுந்போது முகம் அறியா அந்த உயிர்த்தந்தைக்கு அந்த சொல்லை வழங்கிவிட்டான். நண்பன் பதறியப்போதும், சினந்தபோதும் அந்த தீர்மானத்தில் நிலைத்தபோது உடல்தந்தை அதிரதனுக்கு அந்தச்சொல்லை வழங்குகின்றான். நண்பனுக்காக விலங்குமாவேன் என்று சொல்லும் துரியோதனைத்தாண்டி பீஷ்மரின் சொல்லை விதுரரின் விழி மன்றாட்டைக்காண்டு ஏற்று சத்தியசேனையை பட்டமகிஷியாக்கமாட்டேன், முறமையை மாற்றமாட்டேன் என்ற  இடத்தில் உணர்வுத்தந்தைக்கும் அந்தச்சொல்லை வழங்குகின்றான்.

மகனாகவோ மகளாகவோ பிறப்பது என்பது உயிரின் விளையாடலில் ஒரு எளிய நிகழ்வுதான் ஆனால் மகனாகவோ மகளாகவோ நிலைப்பது என்பது எளிய நிகழ்வல்ல.  மகன் தன்னை மகனாக தக்க வைத்துக்கொள்ளுதல் என்பது தவம். உடம்பு, உணர்வு,  சொல். செயல், காலம் அல்லது விதி ஏதோ ஒன்று தந்தையையும் மகனையும் தந்தை மகன் என்று எண்ணமுடியாத உணர்வு கணத்தில் நிறுத்தக்கூடியது. தந்தையும் மகனும் திட்டமிட்டோ அறிந்தோ இது நடப்பதில்லை. தந்தை மகன் வாழ்வியல் நுட்பத்தில் இதுவும் இயல்பே என்ற நிலையில் அது நடந்துவிடுகிறது. ஆனால் தசரதராமன், கர்ணன், யயாதியின் மைந்தன் புரு, சந்தனுவின் மைந்தன் பீஷ்மர் போன்றவர்கள் இதில் மைந்தன் என்று மட்டுமே நின்று உச்சம் தொடுகிறார்கள்.

ஒரே திசையை நோக்கி ஒரே லட்சியத்தை தாங்கி நடக்கும் மனிதர்கள் ஒரே விதமான இன்னலைப்பெறுவதில்லை. தந்தையின் மைந்தன்கள் ஆகிய ராமன், பீஷ்மன், புரு, கர்ணன் போன்றவர்கள் தந்தையின் மைந்தனென்று பெயர்பெற, இவன் தந்தை இவனைப்பெற என்ன தவம் செய்தானோ என்ற சொல்லைத்தந்தைக்குதர அவர்கள் அடைந்த துன்பம் வேறுவேறு.

கர்ணன் மட்டும் கைவிடப்பட்ட நிலையிலும் தந்தையின் மைந்தனென்ற பெயரைப்பெற உச்சம்தொட ஆழமான கொடும் நரகத்தில் விழுவதைப்பார்க்கும்போதுதான் அவனின் ஆணவத்தின் வல்லமைத்தெரிகிறது.

தாண்டவேண்டிய எல்லையைத்தாண்டிய கணமே அடுத்த எல்லையை கர்ணனுக்கு வைத்து சோதிக்கும் படைப்பாளன் கொடியவன்தான். படைத்தவனும் கர்ணனின் ஆணவமும் யுத்தம் செய்யத்தொடங்கிவிட்டப்பின்பு கர்ணன் என்ன செய்ய?
             
ஆணவம் தீயக்குணம் என்று நினைத்தேன். நற்குணம்கூட ஆணவம்தான். ஹரிச்சந்திரனின் வாய்மை, தமயந்தியின் காதல், காந்தியின் உண்ணாவிரதம். கர்ணனின் கொடைக்கூட ஆணவம்தான். ஆணவத்தால்தான் தந்தைகளுக்கு சொல்லை கொடைக்கொடுக்கிறான். இந்த புரிதல் வெய்யோன்-9ன் கொடை. நன்றி ஜெ.

இந்திரப்பிரதஸ்தத்திற்கும் இந்த செய்தியைச்சொல்லச்சொன்ன விதுரர். தந்தைதான். தந்தை மனம் அறியும் தாயின் மனம். 


ராமராஜன் மாணிக்கவேல்