ஒரு உணர்வு, ஞானம், அல்லது அறநெறி இயற்கையானதா அல்லது மனிதர்கள் உருவாக்கிக்கொண்டதா என்பதை அறிய அது மனித சமுதாயத்தின் பாதிப்புகள் அற்ற கானகத்தில் இருக்கிறதா என்பதைப் பார்த்து நாம் முடிவு செய்துகொள்ளலாம்.
கானகத்தில் தாய்ப்பாசம், கோபம், காமம், துக்கம், சோம்பல்,
இருக்கிறது. அகங்காரம் மமகாரம் கூட விலங்குகளுக்கு இருக்கின்றன. ஆனால் அன்பு என்ற ஒன்று இருக்கிறதா என சிந்தித்துப் பார்க்கிறேன்.
ஒரு உயிரின் மீது அன்பு என்பது அந்த உயிரை எவ்வித தன்னலமும் இல்லாமல் நேசித்தல், அதற்கு நேரும் இடுக்கண்களை போக்க முயற்சித்தல் அது நலமாக வாழ எண்ணுதல் என்று வரையறுத்துக்கொள்ளலாம். கானகத்தில் ஒரு விலங்கு இன்னொரு விலங்கிடம் அன்பு செலுத்துவது இயல்பாக நடக்கும் ஒன்றாக இல்லை என்றே கருதுகிறேன்.
ஒரு விலங்கு தன் குட்டிகள் மேல் காட்டும் தாய்ப்பாசம் இத்தகைய அன்பு என்ற வரையறையில் வராது.
ஏனென்றால் அதில் தன் குட்டி என்ற மமகாரம் உள்ளது. விலங்கினத்தில் வஞ்சம் இல்லாததைப்போன்று அன்பும் இருப்பதில்லை.
ஆனால் மனித இனத்தில் இருக்கும் அன்பு என்பது ஒருவர் தன் மனதிற்குள் பயின்றுவருவது. அது மனித சமூகம் ஏற்படுத்திக்கொண்ட அறம்.
சக மனிதனிடம் அன்பாக இருக்க நம்மை நெறிநூல்கள், மதங்கள், தத்துவங்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
சக மனிதரிடம் அன்பின்றி நடக்கும் ஒருவரை சமூகம் கீழானவராகக் கருதுகிறது.
மேலும் நாம் அன்பை மனிதர்களிடம் மட்டுமல்லாமல் நம்மச் சார்ந்திருக்கும் விலங்குகளிடமும் காட்டவேண்டும் என்று கூறப்படுகிறது. தாவரங்களிடமும் அன்பு காட்டவேண்டும் என்று வள்ளலார் கூறுகிறார். இப்படியே வளர்ந்துகொண்டே சென்று நதிகளின் மேல் அன்பு மலைகளின் மேல் அன்பு என விரிந்து கொண்டே செல்கிறது.
அதன் காரணமாக இயற்கைச்சூழலை மற்றவர் கெடுப்பதை தடுக்கும் மனிதர்களைல் காண்கிறோம். இப்படி அந்த அன்புணர்வு என்பது தம்மைச் சார்ந்தவர்களிடமட்டுமல்லாமல் என அனைத்து மனிதர்களுக்கு அனைத்து உயிர்க்குலங்களுக்கும் என விரிந்து
பிரபஞ்சம் முழுமையும் என ஆகும்போது அவருடைய அன்புணர்வு என்பது எப்படி இருக்கும்?
அதை இப்படிச் சிந்திப்போம். ஒருவர் மான்களிடம் அன்பு பாராட்டுபவர் என வைத்துக்கொள்வோம். அவர் ஏதாவது ஒரு மானுக்கு இன்னல் நேர்ந்தால் அதை தடுத்து அவற்றைக் காக்க முனைவார்.
ஒரு மான் குட்டியை ஒரு ஓநாய் ஒன்று பிடிக்க வருகிறதென்றால் அவர் உடனே அந்த ஓநாயை விரட்டி விட முயல்வார்.
அந்த ஓநாயை காயப்படுத்த அல்லது கொல்லக்கூடச் செய்வார். இது அவருக்கு மானினத்தின்மேல் இருக்கும் அன்பைக் காட்டுகிறது. இன்னொருவர் மான்கள்மேலும் ஒநாய்கள்மேலும் அன்பு செய்பவராக இருந்தால் அப்போது என்னச் செய்வார். மான் குட்டியைக் கொல்லவரும் ஓநாயை அவர் தடுப்பாரா?
ஓநாய்க்கு உயிர்வாழ்வதற்கான உணவைப் பெற முடியாமல் தடுப்பது எப்படி ஒரு அன்பான செயல் என்று ஆகும்? அதே அநேரத்தில் மான் குட்டியை காப்பாற்றாமல் விடுவதும் அன்பற்ற செயல் என ஆகும்.
விலங்கு குலம் முழுதும் நேசிக்கும் ஒருவன் எந்த ஒரு விலங்குக்கும் தனிப்பட்ட அன்பை செலுத்த முடியாது.
அன்புகொண்டு ஒருவன் விலங்குலகத்தில் எவ்வித மாற்றம் செய்தாலும் அது விலங்கின சூழலிணைப்பை பெரிய அளவில் பாதிப்பதாக ஆகிவிடலாம்.
ஆக விலங்கினம் முழுமையும் நேசிப்பவன் மான்குட்டிகளுடன் மட்டுமான தன் அன்பை இழந்துவிடுவான். பலகீனமான விலங்குகள் ஊனமுற்ற விலங்குகளை காப்பாற்றுவது போன்றவைகூட அதன் இனத்தை சந்ததியை பாதிப்பதாகப் போய்விடலாம்.
மனிதன் இப்போது சுற்றுச் சூழலுக்குச் செய்யக்கூடியதெல்லாம் மனித சமூகம் சுற்றுச்சூழலை பாதிப்பதை தடுப்பது மற்றும் ஏற்கெனவே மனிதனால் இழைக்கப்பட்டபாதிப்புகளை சரிசெய்வது மட்டும்தான். அவன் தனிப்பட்ட முறையில் விலங்குகளுக்கு உதவுதல்,
அவற்றுக்கு கானகத்தில் மருத்துவ உதவிகள் செய்தல், உணவு கிடைக்க உதவி செய்தல், என அனைத்தும் சூழலை கெடுத்து அவற்றுக்கு மேலும் இன்னல் தருபவையாகத்தான் மாறும்.
விலங்குகள் முழுமைக்கும் உண்மையான அன்புகொண்டவர் ஒரு தனிப்பட்ட விலங்கின் மீது அன்பற்றவர் என ஆகிறார்.
அவர் கண் முன்னால் ஒரு விலங்கு மற்றொரு விலங்கால் வேட்டையாடப்படலாம். உணவுதேட திறனிழந்த ஒரு விலங்கு அவர் கண் முன் பசியில் வாடி இறக்கலாம்.
அவர் அப்போது ஒன்றும் செய்யாமல் ஒரு பார்வையாளராகவே இருப்பார்.
அவர்கொண்ட அன்பின் முழுமையில் அவர் தனிப்பட்ட விலங்குகளின் மீது அன்பற்றவர் என ஆகிறார். இதே அன்பை பிரபஞ்சம் முழுமைக்கும் என பெருக்கிக்கொண்ட ஒருவன் எதன்மீதும் அன்பற்றவன் என ஆகிறான். பூமியே அழிந்துபோனாலும் அது பிரபஞ்சத்தின் எப்போதும் நடக்கும்
இயல்பான நிகழ்வுகளில் ஒன்று என்றே கருதுவான்.
அப்படி இருப்பவனை நம் எவர் மீதும் அன்பற்றவன் என்று அல்லவா கூறமுடியும்.
பீஷ்மர் தன்னை அன்பில்லாதவன் என்று கூறிக்கொள்வதை இவ்வாறே நான் புரிந்துகொள்ள முயல்கிறேன்.
பீஷ்மர் தன்னிலை விளக்கமாக இவ்வாறு கூறுகிறார்.
மீண்டும் நஞ்செழ நகைத்து “ஆனால் அது என் ஆணவத்தால் அல்ல. நீ சொன்னபின்னர் என் உளம்நோக்கி நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். மெய்யாகவே அது ஆணவத்தால் அல்ல. அன்பின்மையால்தான்” என்றார். அசலை அவர் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தாள். மீண்டும் புன்னகைத்து பீஷ்மர் சொன்னார் “ஆம், முற்றிலும் அன்பற்றவனாக இருக்கிறேன். இங்குள்ள இளமைந்தர்மேல், என் குடியினர்மேல், இந்நகர் மக்கள்மேல், இப்புவியிலுள்ள மானுடத்தின்மேல் அன்பென்றும் கனிவென்றும் ஒருதுளிகூட என்னில் எஞ்சவில்லை.” அவர் வஞ்சமென விரிந்த புன்னகையுடன் தாடியை நீவினார். .
வயதானவர் அன்பு குறைந்தவர்களாக தென்படுகிறார்கள்.
அவர்கள் மற்றவர்களுக்காக கவலைப்படுவது,
மற்றவர் நலனை நினைப்பது குறைந்துகொண்டே வருகிறது.
இறப்பு நடந்த குடும்பத்தில் முதலில் அத்துயரத்தில் இருந்து வெளிவருபவர்கள் அவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
மற்றவர்களின் இன்ப துன்பங்கள் விருப்பு வெறுப்புகள் அவர்கள் கவனம் கொள்வதில்லை.
இப்படி இருக்கும் அவர்களை சுயநலமிகள் என நம்மை எண்ண வைக்கிறது. அவர்களிடமிருந்த அன்பு வற்றிவிட்டதாக நினைக்கிறோம்.
ஆனால் அதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்கள் வாழ்ந்திருக்கும் இத்தனை ஆண்டுகால வாழ்வில் அடைந்த அனுபவத்தால் விளைந்திருக்கும் ஆழ்ந்த அறிவு அது.
மனித வாழ்வின் அர்த்தமின்மையை அவர்கள் உணரத்தொடங்கியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு இன்ப துன்பங்களுக்கிடையேயான வேறுபாடு குறைந்து விடுகிறது. நாம் சிறுவர்களாக இருக்கையில் விளையாட்டில் ஏற்பட்ட வெற்றிகள் அதிக மகிழ்ச்சியையும் தோல்விகள் மிகுந்த துக்கத்தையும் தந்தன. சற்று வயது முதிர்ந்தபின்னர் இப்போதைய சிறுவர்கள் விளையாடும் அதே விளையாட்டு அர்த்தமற்று இருக்கிறது. அதன் வெற்றி தோல்விகளை நாம் பொருட்படுத்துவதில்லை. அதைப்போன்றே நாம் விளையாடும் பொருளியல் மற்றும் உறவு சார்ந்த விளையாட்டுக்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு அர்த்தமற்று போகின்றன.
அதைப்போன்றுதான் நம்மை பாதிக்கும் அளவுக்கு வாழ்வின் இன்ப துன்பங்கள் பிறப்பு இறப்புகள் அவர்களை பாதிக்காமல் போவதை நாம் புரிந்துகொள்ளலாம்.
அப்போது தன் இருப்பு ஒன்றே அவர்களுக்கு பொருட்படுத்தவேண்டியதாக இருக்கிறது.
நாம் எதுவும் ஆற்ற இயலாதவிஷயம் மற்றும் தன்னால் எவ்விதத்திலும் அனுபவிக்க இயாத விஷயம் நம்மைப் பொருத்தவரை
பொருளிழந்துபோகிறது. ஆகவே ஒரு முதியவர் வாழ்க்கையில் உயிர்வாழ்வதைத் தவிர்த்து மற்றவை பொருளிழந்து போய்விடுகின்றன.
அவர்கள் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடிய ஒரே வேலை உயிர்வாழ்தல் மட்டுமேயென இருக்கிறது. தன்னால் பிறர்க்கு உதவி செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதாக உணர்கிறார்கள். ஒரு ஊருக்கு சுற்றுலா சென்று அனைத்தையும் பார்த்துவிட்டு ஊர் திரும்ப இரயிலடியில் காத்திருக்கும் பயணிகள் போல அவர்கள் இருக்கிறார்கள்.
பீஷ்மர் சத்தியவதியின் வயதொத்தவர். அதன் பிறகு விசித்த்ர வீரியன், திருதராஷ்டிரன், துரியோதனன், அவன் பிள்ளைகள் என ஐந்து தலைமுறைகளை கண்டு வருபவர்.
எத்தனை போர்கள் எத்தனை பிறப்புகள் எத்தனை இறப்புகள் எத்தனை அரசுகளின் எழுச்சிகள் வீழ்ச்சிகள் போன்றவற்றைப் பார்த்திருப்பார்.
இன்னமும் அவர் எப்படி இதில் சலிக்காமல் இதன் நிகழ்வுகளில் விலகல் அடையாமல் இருக்கமுடியும்?
அவர் தன் நோக்கப்படி தன்னுடைய வாழ்வை வாழ்ந்தவரில்லை. பிறர் அவர்மேல் சுமத்திய வாழ்வைத்தான் இதுவரை வாழ்ந்து வந்திருக்கிறார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
ஆகவே அவர் அனைத்து பந்தங்களிலிருந்தும் அவர் விடுபட்டுவிட்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை.
“என் உடலைப்பற்றி அன்றி நான் எதைப்பற்றியும் இன்று எண்ணவில்லை. நெறியென்றும் கடனென்றும் பற்று என்றும் என்னை ஆண்ட அனைத்திலிருந்தும் விடுபட்டுவிட்டேன்.”
“ஒருவேளை, அன்பிலிருந்து விடுதலை கொள்வதுதான் முதுமையோ? அதுதான் முழுமையோ?” என்று அவர் சொன்னார். “யோகியர் தவம் செய்து அடைந்த விடுதலையை விரும்பியும் வெறுத்தும் இங்கு வாழ்ந்து வாழ்ந்து உழன்றுச் சலித்து நான் அடைந்துவிட்டேன் போலும்.” வில் என உடல் துள்ள எழுந்து “இதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கில்லை, மகளே. மைந்தர் அனைவரும் களத்தில் இறந்து குவிந்து கிடந்தால்கூட ஒருதுளி விழிநீர் என்னில் எழுமென்று எனக்குத் தோன்றவில்லை. இது என் களமே அல்ல” என்றபின் திரும்பி ஓடையினூடாக நடந்து சென்றார்.
தண்டபாணி துரைவேல்