ஒரு ஆண் மற்றவர் முன் இரந்து நிற்பது என்பது அவன் வாழ்வில் அடையும் அதிகபட்ச அவமானமாகக் கருதுகிறான். தன் தந்தையிடம் கூட பணஉதவி பெற கேட்க கூசி நிற்பவன் அவன். அவனைச் சுற்றி இருக்கும் சமூகமும் அவன் பிறர் முன் தாழ்ந்து நிற்பதை அவமானம் என்று கற்பித்து வைத்திருக்கிறது. தன் மானத்தைக் காத்துக்கொள்ள என உயிர் துறப்பவர்களை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் ஒருவன் தன் பிள்ளைகள் பொருட்டு எத்தகைய அவமானத்தையும் எதிர்கொள்ள தயங்குவதில்லை என்பதை நாம் சமூகத்தில் பொதுவாகக் கண்டுவருகிறோம். முதலில் சற்று தயங்குவான், இருந்தாலும் அவன் தந்தைமை அவன் அகங்காரத்தை வீழ்த்தி மற்றவரின் காலடியில் வீழ்த்திவிடுவதைப் பார்க்கலாம. தம் வாழ்வின் உயரிய இலக்குகளை கைவிட்டுவிட்டு வெறும் ஏவலர்களாக மற்றவர்களுக்கு பணிபுரிவதை ஏற்றுக்கொள்கிறான். பெரும்பாலும் தம் மக்களின் எதிர்கால வாழ்வின் பொருட்டே அறத்தை மீறி பொருள் சேர்கிறான். அவனை இடுக்கண்களில் காப்பதற்காக எவ்வித நெறிமீறல்கள்ச் செய்யவும் தயங்குவதில்லை. மற்ற மனிதர்களிடம் இரு கை கூப்பி தன் தலைதாழ்த்தி இரந்து நிற்கிறான்.
திருதராஷ்டிரர் ஒரு மாமத யானையென நிமிர்ந்து நிற்பவர். எவரிடமும் அவர்
தனக்கென ஒரு நலனைப் பெறுவதற்கென தாழ்ந்து நின்றதில்லை. ஆனால் தன் பிள்ளைகள் செய்த வரணாவத சூழ்ச்சியை அறியாதவராகத் தன் கண்களைக் கட்டிக்கொண்டபிறகு தன்னுடைய பெருந்தந்தை என்ற தன்னறத்தில் வீழ்ச்சியடைந்தார். தருமனுக்கு அஸ்தினாபுரத்தை கொடுக்கமல் இந்திரப்பிரஸ்தம் என்ற வேறு இடத்தை பகிர்ந்தளிக்கையில் சமூக அறத்தில் தாழ்வடைந்தார். தருமனை சூதுக்கு அழைக்க ஒப்புதல் அளித்தலிலும், திரௌபதியின் அவமதிப்பை சரியான முறையில் கண்டிக்காமல் விட்டதிலும் அரச நெறிக்கு குறை செய்தார். வனவாசம் மீண்டு வந்த பாண்டவருக்கு நாட்டை திருப்பியளிக்கத் தவறியதில் தான் செய்த சொல்லுறுதி தவறி நின்றார். இதை எதையும் அவர் பேராசையின் பொருட்டோ அல்லது தன் அகங்காரத்தை நிறைவு செய்வதற்காகவோ, அல்லது ஏதேனும் ஒரு வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்வதற்கென்றோ அவர் செய்யவில்லை. தன் பிள்ளை துரியோதனன் விழைவை மறுக்க இயலாத தன் தந்தைமையினால்தான் அவர் இவற்றையெல்லாம் செய்கிறார். தன் மகனின் நலன்பொருட்டே தன் அறவுணர்வுக்கு மாறாக அவர் நடந்துகொள்கிறார். மற்றபடி இச்செயல்கள் எது ஒன்றும் அவர் விருப்பத்துக்கு மாறானதே.
தான் செய்யத் தவறியதை ஒப்புக்கொண்டு அவர் சொல்லும் சொல்:
“நான் செய்திருக்கவேண்டியது ஒன்றே. எப்போது என் மைந்தன் சூழ்வோர் சொல்கேட்டு பாண்டவரை வாரணவதத்தில் மாளிகையுடன் எரிக்க முயன்றானோ அன்றே அவனை காட்டுக்கு அனுப்பியிருக்கவேண்டும். மண்ணை யுதிஷ்டிரனுக்கு அளித்திருக்கவேண்டும். அறம்மீறி மண்ணை அடைந்தவன் அம்மண்ணில் எந்த அறத்தையும் பேண முடியாது. அதை அறிந்தும் அவனை நான் பொறுத்துக்கொண்டேன். அவன் மீதான பற்றினால் அனைத்தையும் அறிய மறுத்தேன். அங்கிருந்து தொடங்குகிறது இப்போர்.”
இப்போது அவர் என்ன செய்திருக்கவேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். அது ஒன்றும் செயற்கறிய பெருஞ்செயல் அல்ல. தான் கொடுத்த சொல்லுறுதியைக் காப்பாற்றுதல் என்ற எளிய அறம்தான்.
திருதராஷ்டிரர் “ஆற்றக்கூடியது ஒன்றே, பாதி நிலத்தையும் இந்திரப்பிரஸ்தத்தையும் பாண்டவருக்கு அளிக்கும்படி நான் என் மைந்தனுக்கு ஆணையிடவேண்டும்.ஆனால் அது தன்னால் முடியாது என்று அவர் தவிர்த்துவிடுவதும் அதற்காக தேவையான கடுமையான முயற்சியை எடுக்க இயலாமல் போவதற்கு காரணமாக இருப்பதும் அவருள் பெருகி நிற்கும் தந்தைமை அல்லவா? அதனால்தான் அவர் தன் மகனிடம் ஆகாததை பான்டவ்ர்களிடம் மன்றாடவேண்டும் என நினைக்கிறார். அவர் இப்படிச் செய்யலாம ஆனால் செய்யமாட்டேன் எனக்கூறுவதே அவர் அப்படிச் செய்வதற்கு மனதளவில் தயாராகிவிட்டார் என்பதைக் காட்டுகிறது.
“ஆம், யுதிஷ்டிரன் என் மென்சொல்லை தட்டமாட்டான். பீமனிடம் நான் ஆணையிடமுடியும்” என்றார் திருதராஷ்டிரர். “ஆனால் என்ன சொல்வது? நிலத்தை முற்றிலும் கைவிடுக என்றா? மனைவியரையும் மைந்தரையும் தவிர்த்துவிட்டு மீண்டும் கானேகுக என்றா?” அசலை “அதை சொல்லவேண்டியதில்லை. எந்நிலையிலும் போரை அவர்கள் தவிர்க்கவேண்டுமென்று நீங்கள் சொல்லலாம்” என்றாள். திருதராஷ்டிரர் உரக்க “அதன் பொருள் அதுவே, வேறொன்றுமில்லை” என்றார்.
ஆக அவர் என்ன செய்யப்போகிறார் என்பது அவருக்கு தெளிவாக இருக்கிறது. ஆனால் அதை அவர் பெருந்தந்தை என இருக்கும் அவரின் தன்னறம் தடுக்கிறது. அதே நேரத்தில் அவர் தன் மகன்பொருட்டு தன்னறத்தைக் கைவிடுதல் அவருக்கு இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் அவன் மகன்பொருட்டு இதை அவர் செய்திருக்கிறார். இப்போது மீண்டும் அவர் தன்னறத்தில் இருந்து கீழிறங்க அவருள் இருக்கும் தத்தைமையைத் தூண்டுகிறாள் அசலை. அவர் அவ்வாறு கீழிறங்கத் தடையாயிருக்கும் அவரின் எஞ்சிய அகங்காரத்தையும் உடைத்துவிடும்படி அசலை கேட்டுக்கொள்கிறாள்.
“அதை நான் செய்யப்போவதில்லை. தந்தை எனும் நிலையில் நான் இன்று இல்லை. என் பிழைகளுடனும் பழிகளுடனும் இங்கே இருந்துகொண்டிருக்கிறேன். தனியனாக, தோற்கடிக்கப்பட்டவனாக” என்றார் திருதராஷ்டிரர். “என்னை விட்டுவிடு… இத்தனிமையில் நான் மட்கிச்சாகவேண்டும். இதுவே தெய்வங்கள் எனக்கு அளித்த இறுதி.” அசலை மேலும் அருகில் வந்தாள். “நீங்கள் அஞ்சுவது அறத்தை அல்ல” என்றாள். “கீழிறங்குவதை. எதையும் கொடுக்காமல் எந்த நெறியையும் பேணாமல் மைந்தர் உயிருக்காக மன்றாடும் முதிய தந்தை மட்டுமென அவர்கள் முன் சென்று நின்றிருக்க நாணுகிறீர்கள்.”
அப்படி அவர் செய்தால் அதன் விளைவென்ன என்பதை திருதராஷ்டிரர் அறிந்திருக்கிறார். அது அவர் அடையப்போகும் உச்சபட்ச வீழ்ச்சியாக இருக்கும். அவரின் இந்தப் பிறப்பில் அடையக்கூடிய அதிகபட்ச தாழ்வை அவர் அடைவார். இனிவரும் காலம் முழுதும் அழியாது நிலைக்கப்போகும் ஒரு தாழ்வென அது இருக்கும். தன் தாள் பணிந்து நின்றவர்களிடம் அவர்களின் தாள் பணிந்து இரந்து நிற்க நேர்வது ஆயிரம் முறை இறப்பதற்குச் சமம்.
“ஆம், அவ்வாறுதான்! ஆம்!” என்று திருதராஷ்டிரர் விழி சரித்து தலைதூக்கி கூவினார். விழிக்குமிழிகள் உருள பெரிய வெண்பற்கள் தெரிய அவர் முகம் சீற்றம்கொண்ட கானுறைத்தெய்வம் போலிருந்தது. “மெய்தான், நான் நாணுகிறேன். இழிமகனாக அவர்கள் முன் நின்றிருக்க என்னால் இயலாது. நீ சொல்வதுபோல் என்னிடமிருந்து ஒரு சொல் எழுந்தால் என்னை அவர்கள் வெறுப்பார்கள். என் சொல்லுக்கு கட்டுப்பட்டு விலகினால் மேலும் வெறுப்பார்கள். அவர்களின் தலைமுறை நினைவுகள்தோறும் இழிமகனாகவே நின்றிருப்பேன். ஐயமென்ன அதில்?”
திருதராஷ்டிரர் “இல்லை, என் குடியே அழிந்தாலும் நான் அவ்விழிவை சூடமாட்டேன். அது என் இளையோன் பாண்டுவின் முன் இழிமகனாக நின்றிருப்பதற்கு நிகர். என் இளையோனை மைந்தனுக்கிணையாகப் பேணியவன் நான். தந்தையெனச் செருக்கி மட்டுமே அவன் முன் நின்றிருக்கிறேன். அவன் முன் சிறுமைகொள்ள என்னால் இயலாது” என்றார்.
ஆம் பீஷ்மரின் மகனாக, மாணவனாக அவர் இதுநாள் வரை இருந்த இருப்பு, பேரறம் ஒன்றை தன்னறமாக கொண்டிருந்த அவர் அகம், பாண்டுவின் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற பாசம், பாண்டவர்களையும் தம் பிள்ளைகள் எனக் கொண்டிருந்த அவர் பேருள்ளம், இந்நிலைக்கு அவர் இறங்குவதற்கு இறுதித் தடையாக இருக்கிறது. அசலை தம் பிள்ளைகளின் உயிர் காக்க அந்தத் தடையை உடைத்துவிடச் சொல்கிறாள். திருதராஷ்டிரரின் பேராளுமையை பலிகொடுத்து தன் பிள்ளைகளின் உயிர்காக்க முற்படுகிறாள். அவரைப் பிரகதியின் இசையினால் இளகவைக்கிறாள். அவருள் இருந்த அத்தனை தடைகளையும் தகர்த்துக்கொண்டு அவர் தந்தைமை அகம் நிறைத்து எழுந்து அவர் செய்ய வெண்டியதை அது மட்டுமே தீர்மாணிக்கிறது.
கைகளைத் தூக்கி வானை நோக்கி ஏதோ சொல்ல விழைபவர்போல சில கணங்கள் இருந்தபின் பெருமூச்சுடன் “நான் ஒப்புகிறேன்… நான் சொல்லவேண்டியதென்ன என்று சொல்லுங்கள்” என்றார். அசலை “சஞ்சயன் செல்லட்டும்” என்றாள். “ஆம், அவன் என் விழியும் நாவும்” என்றார் திருதராஷ்டிரர். “நான் சொல்லவேண்டியதென்ன என்பதையும் அவனிடம் நீயே சொல்க! எதுவானாலும் அவன் சொல்வான்.”
“சஞ்சயா பீமனிடம் சொல், என் மைந்தரை கொல்லலாகாதென்று. என் மைந்தர் களம்பட்டுக் கிடப்பதைக் காணும் தீப்பேறை எனக்கு அளிக்கலாகாதென்று” என்றபடி என் கைகளைப் பற்றி உலுக்கினார். அவர் நெஞ்சில் விழிநீர் சொட்டி வழிந்தது. “நான் அவர்களிடம் மன்றாடினேன் என்று சொல். குலமூத்தான் என்றோ பெருந்தந்தை என்றோ அல்ல, எளிய முதியவன் என்று நின்று இரந்தேன் என்று சொல். இப்புவியில் நான் விழைவது என் மைந்தரின் உயிர் மட்டுமே” என்றார்.
தன் பாவனைகளையெல்லாம் விடுத்து வெறும் தந்தையென ஆகி அவர் இவ்வாறு கூறுகிறார். திருதராஷ்டிரை அனைத்து அறங்களையும் துறந்து வெறும் தந்தைமையுடன் ஒரு சிறிய உயிர் என குறுகி நிற்பது வெண்முரசில் இதுவரை வந்தவற்றுள் மிகவும் அவலத்துக்குரிய நிகழ்வாக இருக்கிறது.
“அவர்கள் பலிபீடம் நோக்கி முண்டியடிக்கும் வெள்ளாடுகள். அவர்களை காத்திருக்கிறது பலிகொண்டு ஒளிபெறும் கத்தி. அவர்கள் பேதைகள். பழிசூழ்ந்த வீணர்கள். ஆயினும் என் மைந்தர். அர்ஜுனனிடம் சொல், அவர்களைக் கொன்றால் அவன் காண்டீபம் நாணும் என்று.” மெல்ல அவர் குரலில் வஞ்சம் ஏறியது. “எவராயினும் என் மைந்தரைக் கொன்றவர்களை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அவர்கள்மேல் என் தீச்சொல் என்றுமிருக்கும். விண்ணிலிருந்து அவர்கள் அளிக்கும் நீர்க்கொடையை மறுப்பேன். இருளுலகில் நான் படும் துயர் அனைத்தும் அவர்களின் கொடிவழிகள்மேல் பெய்ய வைப்பேன்… என் பழி ஒருபோதும் அழியாது. வஞ்சப் பெருந்தெய்வமென அவர்களின் வீட்டுமுற்றங்களில் நின்றிருப்பேன். சென்று சொல் அவர்களிடம்” என்றார்.
தன் மைந்தர் செய்த வஞ்சனைகளையெல்லாம் பொருட்படுத்தாது சமூக நெறிகளுக்கு மாறாக அவர் பாண்டவர்களுக்கு தீச்சொல்லிடுவேன் என்று கூறுகிறார். தந்தைமை என்பது ஆதிகுணம். விலங்காயிருக்கும்போதே தாய்மையுணர்வுக்கு இணையாக இருந்துவரும் குணம். அது முழுதாக வெளிப்படுகையில் மனிதர்கள் கற்பித்துக்கொண்ட அறங்கள் மற்றும் சமூக நெறிகளை அது பொருட்படுத்துவதில்லை என்பதை திருதராஷ்டிரர் என்ற பேராளுமை கொண்டவர் காணும் இந்த அறவீழ்ச்சியில் நாம் அறிந்துகொள்ளச்செய்கிறது வெண்முரசு.
தண்டபாணி துரைவேல்