Friday, March 6, 2015

ஒரு தத்துவப்புள்ளி



ஜெ,

வண்ணக்கடலை இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். வண்ணக்கடலை சரியாகப்புரிந்துகொண்டால் இந்திய ஞானமரபுக்கும் புராணமரபுக்கும் இடையே உள்ள ஒரு சரடு பிடிக்கிடைக்கும் என்று நினைக்கிறேன். இரண்டு முறை பல பகுதிகளை வாசித்தேன்

அந்தக்காலகட்டம் நாம் இன்றைக்கும் நம்பிக்கையாகவும் மதமாகவும் தத்துவமாகவும் எல்லாம் ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய பல சிந்தனைகள் தோன்றி ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டிருந்த காலம். நாம்  தனிநபர்களின் மோதலை மோதலை மட்டும் மகாபாரதத்தில் பார்க்கவில்லை அரசாங்கங்களின் மோதலை பார்க்கிறோம். அது நிலங்களின் மோதலும் தான் என்று மழைப்பாடலில் வாசிக்கமுடிந்தது. அது தத்துவசிந்தனைகளின் மோதலும்தான் என்று வண்ணக்கடல் காட்டியது

அந்த மோதலை முக்கியமாக அசுர தேவ மோதலில் காணமுடிகிறது. வண்ணக்கடலில் முக்கியமான இடமே ஹிரண்யனுக்கும் அவன் மகன் பிரஹலாதனுக்கும் நடக்கும் தத்துவ உரையாடல்தான். அந்த புள்ளியில் இருந்து இந்து சிந்தனை வரலாற்றையே மீண்டும் எழுதிவிடமுடியும்

சாதாரணமான பக்திக்கதையாக குறுக்கப்பட்டு விட்ட ஒன்று அது. அதில் இத்தனை முக்கியமான முரண்பாடு உள்ளது. ஹிரண்யன் சொல்வது பௌதிகவாதம். [materialism] பிரஹ்லாதன் எல்லா பொருட்களின் உள்ளேயும் சாரம் [idea] உள்ளது என்று வாதிடுகிறார். தூணிலும் துரும்பிலும் பிரம்மம் உண்டு என்பது அதுதான்.

அது இரண்டு சிந்தனைமுறைகள் நடுவே ஒரு பெரிய சந்திப்பாகவும் முரன்பாடாகவும் வண்ணக்கடலில் வந்துள்ளது. அதை வேறு எவராவது எழுதியிருக்கிறீரகளா என்று பார்த்தேன். இல்லை. வண்ணக்கடலை நாம் வாசிக்க இன்னும் நீண்டநாள் ஆகுமென தோன்றியது

செல்வன்