Sunday, October 25, 2015

ஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)



     சிறுவர்களுக்கு இசைக்கருவிகளில் அதிகம் பிடிப்பது பலவித  மேளக்கருவிகளை உள்ளடக்கிய ட்ரம்ஸ்தான். மற்ற கருவிகள் ஒரே ஓசையை எழுப்பும். ஆனால் இந்தக் கருவியில் பலவித ஓசைகளை உருவாக்கலாம். ஒரு குழந்தை பல   பொருட்களை தரையில் அடித்து ஓசை எழுப்பி  மகிழ்கிறது. ஆக ஓவ்வொரு குழந்தையும் ஒரு டிரம்மராகத்தான் பிறக்கிறது. பின்னர் தான் அவை வேறு இசைகருவிகளில் நாட்டம் கொள்கிறது.

     காலம் கூட ஒரு சிறுவனைப்போல்    நிகழ்வு என்ற கோலால்  ஒவ்வொருவர் உள்ளத்தையும் அடித்து ஓசை எழுப்புகிறது. அதில் ஒவ்வொருவரிடம் இருந்து என்னென்ன சத்தம் வருகிறது எனக் கணித்து தன் இசைக்கோர்வையை நடத்துகிறது. சுபத்திரை தன்னேற்பு ஏற்பாடு என்ற செய்தி ஒவ்வொரு உள்ளத்திலும் எவ்வித ஓசைகளை உருவாக்குகிறது என்பதை இன்றைய வெண்முரசு காட்டுகிறது.  

      முதலில் தருமனுக்கு செய்தி சொல்லப்படுகிறது. தருமன் தனக்கு வரும் ஒவ்வொரு செய்தியையும் அவன் அறத்தை சோதிக்க வரும் இன்னொரு சோதனையாகவே காணத் துவங்கிவிட்டான் என நினைக்கிறேன். அவன் குடும்பத்தின் தலைவன், மக்களின் அரசன், குந்தியின் மைந்தன், திருதராஷ்டிரரின் மகன், திரௌபதியின் கணவன்,  தன் தம்பிகளின் அண்ணன், துரியோதனன் போன்றவரின்  உறவினன், என்ற பல்வேறு திசைகளில் வீசும்  காற்றுவிசைகளுக்கிடையில் அறம் என்ற கயிற்றில் நடந்துசெல்பவனாக இருக்கிறான்.  அவனுக்கு வரும்  ஒவ்வொரு வெளிச்செய்தியும் அவன் அறத்திற்கான சோதனையாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் இருக்கிறான்.   சுபத்திரை தன்னேற்பில் தான் என்ன பங்காற்றவேண்டும் அது அறத்திற்கு மாறானதாக ஆகிவிடக் கூடாது என்ற சிந்தனையை அச்செய்தி அவனிடத்தில் எழுப்புகிறது. ஒரு அரசனாக இச்செய்தியின் சாதக பாதகங்களை அவன் உடன் சிந்திக்கிறான். தருமன் தன் கடமையிலிருந்து நழுவுபவன் அல்ல. ஆனால் தன் செயல் அறத்திலிருந்து நழுவாமல் இருக்கிறதா எனப் பார்த்துக்கொள்பவன். பீமனின் முடிவு சரியென்றாலும் கண்ணன் தன் நோக்கத்தை தெளிவுபடுத்தி இருக்கிறான். இதை தவிர்த்துவிட முடியாது. இதில் பார்த்தனை  ஈடுபடுத்துவதை விட வேறு வழியில்லை என முடிவு செய்கிறான்.

     பீமனிடம் இச்செய்தி எந்த  சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில் இச்செய்தி பீமனுக்கானது. ஆனால், பீமன் எப்போதும் அரசியல் ஆடுகளத்திற்கு  வெளியில் நிற்பவன்.  அரசியல் சூழ்ச்சிகள் அவன் தன் வாழ்வில் மிகவும் வெறுக்கும் ஒன்றாகும். அவன் பலராமன் விழைவை தனக்கு சாதகமாகக்கொண்டு இந்தச் அரசியல் சிக்கலிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறான். 

   அடுத்து விதுரரிடம் இச்செய்தி சொல்கிறது. விதுரர், அரசர் முடிவெடுப்பதில் இருக்கும்  தனக்குரிய முக்கிய பங்கை இதுவரைக்கும் இழக்காமல் காத்துவருகிறார்.   அவர் விழியின் கூர்மையினால் இச்செய்திக்கு பின்னிருக்கும் சூழல்கள் அனைத்தும் தெளிவாக கண்டுகொள்கிறார். அவர் எது நடக்க வேண்டுமோ அது சரியாக நடந்திருக்கிறதா என சரிபார்த்துக்கொள்கிறார். இனி நடக்கப்போவது என்னவாக இருக்கும் என சிந்திக்கிறார்.  அந்த சிந்தனைக்கேற்ப அவர் அரசருக்கு ஆலோசனை வழங்குவார் என நினைக்கிறேன்.

    இப்போது துரியோதனனிடம் செய்தி செல்கிறது. துரியோதனன், பாண்டவர்களுடனான எந்தப் போட்டியிலும் தோற்பவனாக காலம் வைத்திருக்கிறது. அவன் ஏதாவது அடைந்திருக்கிறான் என்றால் அது பாண்டவர்கள் விட்டுக்கொடுத்ததாக இருக்கிறது. இந்த உறுத்தல் இருந்தாலும் அவன் இப்பொது,  தான் இழந்துவிட்ட துரியோதனி என்ற தன் இன்னொரு பக்கத்தை  பானுமதி ரூபத்தில் மீண்டும் அடைந்திருக்கிறான். ஆகவே அவன் அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து விலகி இருப்பவனாக இருக்கிறான்.  ஆகவே இச் செய்தி அவனுக்கு பலராமனின் ஒரு ஆணை என்ற அளவில் இருக்கிறது.

   துச்சாதனன்,  துரியோதனனின்  நிழல் என்ற நிலையிலிருந்து வெளிவந்து துரியோதனனாகவே  சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறான்.  இங்கே துச்சாதனன்  பலராமரிடம்   அவர் திட்டத்திற்கான தடையாக கண்ணன் இருப்பான் என்பதை அறியவைக்க  ஒரு உரையாடலை கதன் முன்னிலையில் நடத்துகிறான். கதன் பலராமனின்  ஆள் என இருந்திருந்தால் அது ஒரு  சிறந்த திட்டமாக  இருந்திருக்கும். பலராமர் கண்ணனை கண்டித்து தன் கண்காணிப்பில் வைத்திருப்பார்.  ஆனால் கதன் கண்ணனின் ஆள். அதனால் துச்சாதனன் நினைத்தது நடப்பது சந்தேகம் என ஆகிவிட்டது.

  இறுதியாக பார்த்தனுக்கு அவன் என்ன செய்யவேண்டும் என்ற சமிக்ஞை வெகு அழகாக கொண்டு சேர்க்கப்படுகிறது. கண்ணனிடமிருந்து ஒரு வார்த்தை கூட அவனுக்கு நேராக வரவில்லை. கண்ணன் பாவம் அவன் ஒன்றுமே அறியாதவனாக  தொலைதூரத்தில் துவாரகையில் இருக்கிறான் என உலகத்தினர் சொல்லும்படி இருக்கிறது. ஆனால் அவன் எழுதி இசையமைத்ததற்கேற்ப கதன் என்ற கோல் அசைய சுபத்திரையின்  தன்னேற்பு என்ற இசைநிகழ்ச்சி நிகழ இருப்பது  நன்கு தெளிவாகிறது.      
 
தண்டபாணி துரைவேல்