Thursday, October 8, 2015

போர்


     இன்று இன்னொரு போர். வெண்முரசின் போர்கள் என வருங்காலத்தில் பல ஆய்வுக் கட்டுரைகள் வரும் என நினைக்கிறேன்.  ஒவ்வொரு போரும் தெளிவாக நுணுக்கங்களுடன் படம் பிடித்துக் காட்டப்படுகிறது. இன்றைய போரில் அர்ச்சுனன் மணிப்பூரக வீரர்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு திட்டமிட்டபோரை நடத்துகிறான்.  இன்றும் அவனுக்கு குறைந்த வீரர்களைக்கொண்டு எச்சரிக்கையுடன் வரும் பெரியபடையை எதிர்க்க வேண்டும் என்ற பலவீனம் உள்ளது.  எத்தகைய படை நம்முடன் இருந்தாலும் ஏதாவது ஒரு பலகீனம் இருக்கத்தான் செய்யும். ஒரு சிறந்த தளபதி, தன் பலகீனத்தை எதிரியிடமிருந்து மறைத்து, அந்த பலகீனப்பகுதியை எதிரி பயன்படுத்திக்கொள்ளாமல் தவிர்த்து அதே நேரத்தில் எதிரியின்பலகீனத்தை கண்டடைந்து தாக்கவேண்டும்.

    இங்கு குறைந்தவீரர்கள் என்பது பலகீனமான பகுதி. அதிலும் அவரகளில் பலர் காயம்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் தலைவன் சித்ராங்கதன் கோட்டையிலிருந்து வெளியேறிய நிலை. அதனால் இதுவரை போரில் ஈடுபடாத ஊர் மக்களை அழைத்துச் செல்கிறான்.  இப்போது அவர்கள் போரிட எந்த ஊக்கமும் காட்டாதவர்களாக இருக்கிறார்கள்.  அவர்கள் வேட்டையாடுபவர்கள் என்பதினால் அவர்களுக்கு அம்பெய்த மட்டும் தெரிந்திருக்கும்.   ஆகவே அவர்களை வைத்து எளிய வியூகங்களை மட்டுமே அமைக்க முடியும். எந்த நேரத்திலும்  அஞ்சி பின்வாங்கக்கூடியவர்கள்.  எனவே போர்த்திட்டத்தில் சிறு பின்னடைவு கூட முழுத்தோல்வியாக மாறிவிடும்.  மற்றொன்று இது ஒரு சிறு கோட்டை. முள் மரச் சுவர்களால் அறன் அமைக்கப்பட்டது. எதிரி கோட்டையின் அருகில் வந்தால்  நெருப்பிட்டு எளிதாக கோட்டைக்குள் வந்துவிடமுடியும். இந்த பலஹீனங்கள் எதுவும் புறக்கணிக்கத்தகவையல்ல.


   இந்தச் சூழலை ஃபால்குணையாக இருக்கும் பார்த்தன் எப்படி கையாள்கிறான் எனப் பார்க்கலாம். முதலில் புரிந்த போரின் அவன் திறமையை வெளிப்படுத்தி மக்களிடம் தன்னை நம்பத்தகுந்த போர்த்தலைவன் என ஊர் மக்களுக்கு காட்டியிருக்கிறான். அதனால் அந்த ஊர் மக்களை சீக்கிரத்தில் போருக்காக ஊக்கபடுத்த முடிகிறது. கோட்டையின் பலகீனத்தை எதிரிகள் பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கும் பொருட்டு அவன் போரை கோட்டைக்கு தொலைவில் நிகழும் வண்ணம் பார்த்துக்கொள்கிறான்.  வரும்போரை முன்னரே அறிந்து தயார் நிலையில் இருப்பது மிகப்பெரும் பலமாகி விட்டது. அதனால் போர் நடக்கவேண்டிய இடத்தை தேர்வு செய்யும் வாய்ப்பு எதிரிக்கு இல்லமல் போகிறது. எதிரியிடம் இருக்கும் ஒரே பலவீனம் அவர்கள் வந்து சேரவேண்டிய பாதையில் இருக்கும் இடர்பாடுகள். அதை சரியாக கணித்து ஒரு சில வீரகள் மட்டுமே கொண்ட சிறு படையினால் முழு வெற்றியை அவன் அந்த ஊர்மக்களுக்கு தேடித் தருகிறான்.


 எப்போதும் நாம் காணும் வெற்றியின் பிரகாசம் நம் கண்களை மங்க வைக்கிறது. இதுவரை பார்த்த பார்வைபோல் இப்போது இல்லாமல் போகிறது. அந்தப் பார்வையில் கர்வம் என்ற புரையை சேர்க்கிறது. அதனால் நம்மால் இதுவரை கண்டுவந்த கருணை, தயாளகுணம், பணிவு, மன்னிக்கும் உள்ளம், போன்றவற்றை சரியாக பார்க்கமுடியாமல் போகிறது.  போரில்  தன் பக்க ஆட்கள் இறந்தபோது நாம் அடைந்த துன்பம் எதிரிகளை கொல்லும் நிலையில் நம் நினைவுக்கு வருவதில்லை. இறந்து வீழ்ந்தவன் தலையை எட்டி உதைத்து கேவலப்படுத்துகிறோம். அவர்கள் களைகளாகவும் நாம் பயிர்களாகவும் தெரிகிறோம். ஆனால் இயற்கையின் கண்களில் ஏது   களைகள்?   தம் உயிர்களை காத்துக்கொண்டாலே போதும்,  அதற்காக தம் செல்வம்,  தம் வீட்டு பெண்கள் என எதைவேண்டுமானாலும் இழக்க தயங்கமாட்டோம் என இருந்தவர்கள், அதற்கு நேர் எதிர் நிலைக்கு சென்று எதிரியை சென்று தாக்குவோம் அவர்கள் ஊரை கொள்ளையடிப்போம் என மாற்றம்டைவது உண்மையில் ஒரு வெற்றியாகுமா? எதிரியைக் கொன்று அவனைப்போல் நாம் ஆகிறோம் என்பது மறுபடியும் இந்தப் போர் வேறு விதத்தில் வேறு எதிரியுடன் தொடரப்போகிறது என்பதை காட்டுகிறது.  பார்த்தன்  புழுக்களை காக்க அவற்றைக் கொன்றுவரும் நாகங்களைக் கொல்கிறான். ஆனால் அந்த வெற்றியின் பானம் அருந்திய  புழுக்கள்,  நாகங்கள் என உருமாறுமென்றால் அவன் செயலுக்கு உண்மையில்  என்ன பலன். அவன் நெஞ்சில் தோன்றும் கசப்பு வெற்றிக்கோப்பையின் உள்ளிருக்கும்  அந்த நஞ்சை அறிவதால் வருவதல்லவா? 

தண்டபாணிதுரைவேல்