Monday, October 26, 2015

குளிர்ந்தவனும் கொதிப்பவளும்.பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே-என்னும் கணியன் பூங்குன்றனார் வரிகளை சொல்வது என்பது மிகஎளிது. இந்த வரிகளை வெறும் வரிகளாக சொல்லிச்செல்பவனை அகங்காரம் பிடிப்பதுபோல் வேறு ஒருவரை அகங்காரம் பிடிக்காது. அகங்காரம் இருக்கும்வரை இந்தவரிகளை தனக்கான வரிகளாகக்கொள்ளமுடியாது. அகங்காரம் அழிந்தவனுக்கானது இந்த வரிகள்.

பெரியோர் சிறியோர் இடையில்தான் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒரு பறவையின் இருசிறகுப்போன்றவர்கள் கண்ணனும் அர்ஜுனனும், கண்ணனோடு அர்ஜுனன் எப்படி இருப்பனோ அப்படியே கதனோடும் இருக்கிறான். உடல், உள்ளம், சிந்தனை என்று அனைத்திலும் பயிற்சியை கொண்டு அதனதனிலிருந்து உள்ளத்தை பிரித்துவைத்திருக்கும் அர்ஜுனன், பிரபாரசத்தீர்த்தத்திற்கு கதனை அழைத்துச்செல்கிறேன் என்பதும், அங்கு செல்லும் வணிகளில் ஒருவனாகவே தன்னை ஆக்கிக்கொள்வதிலிருந்தும் தான் ஒரு மீமானிடம் இல்லை என்பதை நிறுவிச்செல்கிறான். அங்காரம் இன்மையின் வடிவமாக ஒழுகிச்செல்கிறான்.  நான் ஒரு எளிய யாதவன் என்ற கதனின் அகத்திற்குள் நுழைந்த அர்ஜுனன் கதன் தனிமையை அகற்றுவதை நினைத்துப்பார்க்கையில் வந்து கணியன் பூங்கன்றன் சிரிக்கிறார்.

காட்டில் கன்றுகள் மேய்க்கும் கதன் போன்ற எளியவர்கள், தனிமைப்படுத்தப்படும்போது அவர்கள் அஞ்சி அஞ்சி மீண்டும் காட்டின் ஆழத்திற்கே கன்றுகளுடன் செல்வார்கள். அந்த சிற்றுயிரையும் எங்கும் நிறைந்த நீலன் வரலாற்றில் கால்பதிக்க வைத்துவிடுகிறான். தான் எதுவும் அல்ல என்ற தனிமையில் தவித்து துயிலும்போது அவனுக்கும் ஒரு படகுவந்து வழிக்காட்டி கரை சேர்க்க உதவுகிறது. பிரபாசதீர்த்தத்தில் பாவம் போக்க வழி செய்கிறது.

பிரபாசத்தீர்த்தத்தில் அர்ஜுனன் பாவம்போக்கும் நீராடலை இத்தனை கூர்மையாக ஆழமாக விளக்குவீர்கள் என்று நினைக்கவில்லை. பிரபாசத்தீர்த்தம் குளிரும் சுடும் என்று இரண்டாகக்காட்டி, அர்ஜுனனுக்கு தலையில் குளிர்ந்தது, தோளில் சுட்டது என்பதைப்படித்து உறைந்துப்போனேன்.

தருமனை கதன் சந்திக்கும்போது, பாரதவர்ஷத்தின் சக்கரவர்த்திப்போல அல்ல எளிய குடும்பத்தலைவன்போல் இருந்தான் என்று சொன்ன இடத்தில் சென்று நின்று இன்று அவனைப்பார்க்கிறேன். மனம் விம்புகிறது ஜெ. அர்ஜுனன் ஒராண்டு தீர்த்தப்பிரயாணம் செய்யவேண்டும், அந்த ஓராண்டு, அர்ஜுனனுக்கு உரியது, திரௌபதி தருமனுக்கு என்றாகும்போது இதழில் புன்னகைக்காட்டும் தருமனை இன்று நினைக்கையில் எண்ணங்களின் எடை ஏறி உள்ளம் கனக்கிறது. புருவின் உடலோடு அசுருபிந்துமதியுடன் வாழும் யயாதியின் உள்ளம் புருவின் உள்ளமாக மாறிவிட முடியுமா? மகனின் உடலோடு தந்தையின் உள்ளத்தோடு வாழும் கொடுமை எத்தனை பெரும் கொடுமை. அர்ஜுனன் இந்திரபிரதஸ்தத்தைவிட்டு கிளம்பிய நாள்முதல் தருமன் ஒரு யயாதி அல்லவா? பிரபாசதீர்த்தத்தின் நீர் அர்ஜுனன் தலையில் குளிரென விழுந்தது என்றபோது அது எனக்கு நீராக தெரியவில்லை. தருமனே தந்தையாகி,நீராகி அவன் தலையில் வழிந்ததுபோல் உள்ளது.

முடிந்தது பாவம் என்று பெரும்மூச்சோடு திரும்பும்போது பிரபாசதீர்த்தத்தின் கொதிநீர் அலை  அவன்தோள்களில் அறைந்தது என்றபோது முன்னமே மூர்ச்சை ஆகி விழுந்த வாசகனை தண்ணீர்தெளித்து எழுப்பி தெளியவைத்து அடித்தது மயங்கவைத்தபோல் உள்ளது. உண்மையில் பிரபாசத்தில் அர்ஜுனன் கழுவவேண்டிய பாவம் அன்று திரௌபதியை கொதிக்க வைத்த பாவத்தை அல்லவா?. திரௌபதி அகத்தை கொதிக்க வைத்த பாவத்தை கழுவவது என்ற அறம் செயல்படும்போதே, அண்ணன் தந்தையாகிவிடும் அற்புதமும் நிகழ்கின்றது வாழ்வில். இந்த வாழ்க்கை கிளைக்காத இடம்தான் என்ன? நாட்டைவிட்டு வெளியேறும் தம்பியின் முகில் புன்னகைவைத்த கண்ணகள். அவன் தலையில் தந்தையின் கண்ணீராய் வழிவது எப்படி?   எண்ணங்கள், எண்ணங்களில் இருந்து உணர்வுகள். உணர்வின் நீராழத்தில் மானிட உயிர்கள். நீந்துகின்றன, துள்ளுகின்றன, மறைகின்றன. மீண்டும் மீண்டும் வெளிவந்து அலையாகி வான் பூமியை கண்டுக்கொள்கின்றன. எத்தனை விரிந்து வாழ்க்கை.

தண்ணீரும் வெந்நீரும் பார்வைக்கு ஒன்றுபோல்தான் உள்ளது. தண்ணீருக்குள் வாழும் அனைத்து ஜீவனும் உயிரோடு இருக்கிறது. வெந்நீரில் உள்ள நுண்ணுயிர்கூட செத்துவிடுகிறது. பாவம் பார்வைக்கு தண்ணீரா வெந்நீரா என்பது தெரியவில்லை. சுடும்போதுதான் வெந்நீரின் கொதிநிலை அறியமுடிகிறது. பாவத்தின் தாக்கமும் சுடும்போதுதான் அறியமுடிகிறது. கொதிநீர் அலை அறையும்போது அர்ஜுனன் பக்கத்தில் உள்ளவன் அலறிவிழுகிறான், அர்ஜுனன் அசையாமல் நிற்கிறான். அர்ஜுனன் திரௌபதியை எத்தனை ஆழமாக புரிந்து ஏற்றுக்கொள்கிறான்.

தருமன் எளிய குடும்பத்தலைவன் போல் நிற்பது எளிய சொற்றொடர் என்றாலும் எத்தனை பெரிய ஆழம் மிகுந்தது. இந்த பிரபாச தீர்த்தத்தில் மூழ்கிய பின்பே மூத்தவர் முகத்தை ஏறிட்டு நோக்கமுடியும் என்று அர்ஜுனன் சொல்வது எத்தனை அர்த்தம் நிறைந்தது. பெண்பிழைக்காக அர்ஜுனன் நீராட சென்றாலும், இது தந்தைபிழை என்பதும் எத்தனை பொருந்தும்.

//“நானும் நீராடியாகவேண்டும்என்றான். அர்ஜுனன் ஒன்றும் சொல்லாதது கண்டுஇது தந்தைப்பிழைஎன்றான். அர்ஜுனன்அதில்லாத மானுடர் எவர்?” என்றான்//-காண்டீபம்-40.

கோக்க மறந்த முத்து -1

பெரிதாகிய புவனத்தைப்படைக்கும் பிரமன் அதைவிட பெரியது இல்லை என்று இறுமாந்து புன்னகைக்க அன்னை வாணி தன்கை விழிமணிமாலையின் ஒரு மணியில் இருந்தே இப்புவியை எழுமுறை சுற்றிவைத்துவிடும் புனைவெனும் ஒளியாடை நெய்கிறாள் என்பது எத்தனை பெரிய உண்மை. ருத்ராட்சமாலையை விழிமணிமாலை என்றது எண்ணி எண்ணி இன்புற வைக்கிறது.   
//இப்புடவி சமைத்த பிரம்மன் தன் துணைவியை நோக்கி புன்னகைத்து இதைவிட பெரிதொன்றை உன்னால் ஆக்கமுடியுமா என்றார். முடியும் என்று அவள் தன் கையிலிருந்த விழிமணிமாலையின் ஒரு மணியை எடுத்து புனைவெனும் ஒளியாடையை உருவாக்கி புடவியை அதில் ஏழுமுறை சுற்றி அவன் முன் வைத்தாள் என்று கதைகள் சொல்கின்றன. அதன் பின் தன் படைப்பை தான் அறிவதற்கு பிரம்மன் வெண்கலைச் செல்வியின் ஏடுகளை நாடுகிறான் என்கிறார்கள்//-காண்டீபம்-37

கோக்க மறந்த முத்து -2

அவர்போல இருக்கிறார் அவர்போல இருக்கிறார் என்று எண்ணவைத்த தருமன் அவர்போல நடக்கிறான். அவர்போல உட்காருகிறான்.
 கால்களை நீட்டி நீட்டி வைத்து கைகளை குறைவாக வீசி நடந்தார். அவர் தன் அரியணையில் அமர்ந்ததும்கூட தளர்வுகொண்டவர்களுக்குரிய எடை தாழ்த்தி இளைப்பாறும் பாவனைகள் கொண்டதாக இருந்தது. அவரது உடலின் தளர்வல்ல அது, உள்ளத்தின் தளர்வும் அல்ல. எண்ணங்களின் எடை அது என உணர்ந்தேன்.-காண்டீபம்-39

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.