சபரி மலை சென்று ஐயப்ப சுவாமியை வழிபடுவதில் ஒரு முக்கியமான ஒரு நிகழ்வு வீட்டிலிருந்து சுத்தமான நெய்யை தேங்காய் கொப்பறையில் அடைத்து எடுத்து சென்று சுவாமி திருவுருவுக்கு அபிஷேகம் செய்தல். அனைத்து பக்தர்கள் கொண்டு வரும் நெய்யும் தவற விடாமல் அபிஷேகம் செய்யப்படும். பதினெட்டு படி ஏறுதல், விரதமிருந்து தலைப்பாரமாக மிகவும் பக்தியுடன் கொண்டுவந்த நெய்யை ஐயப்பன் திருமேனிக்கு அபிஷேகம் செய்தல் என இந்த இரு நிகழ்வுகள் இல்லாமல் அந்த விரதம் நிறைவு பெறுவதில்லை. அபிஷேக நெய்யில் ஒரு பகுதியை திரும்ப பக்தர்களுக்கு கொடுக்கப்படும். அதை ஒரு சிறிய புதிய பாத்திரத்தில் வீட்டிற்கு ஐயப்பன் பிரசாதமாக கொண்டுவருவார்கள். ஐயப்பன் திரு மேனியில் வழிந்த அந்த நெய்யை வீட்டிலுள்ளவர்கள் மிகப் புனிதமானதாக கருதுவார்கள். பெரும்பாலோனோருக்கு அந்த நெய்யை கொண்டு வந்த புதிய பாத்திரத்தை அதற்கு பிறகு வேறு சமையல் வேலைகளுக்கோ அல்லது வேறு பொருட்களை போட்டு வைப்பதற்கோ என பயன்படுத்த மனம் ஒப்பாது. அது தனித்து வைக்கப்பட்டு விடும். பயன்படுத்தாதால் அப்பாத்திரம் தூசடைந்து ஒரு மூலையில் பயனற்று இருக்கும். எப்போதாவது அந்தப் பாத்திரத்தை பார்க்கும்போது அது அபிஷேக நெய் வந்த பாத்திரம் என்ற நினைவைத் தரும். மற்ற பாத்திரங்கள் எல்லாம் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுவருகையில் இதன் நிலை எனக்கு மனதில் வருத்தத்தை தருவதுண்டு. அபிஷேக நெய்யை தாங்கியதாலேயே அப்பாத்திரம் அந்த நிலையை அடைந்திருக்கிறது அல்லவா?
மாலினி, அர்ச்சுனன் என்ற அபிஷேக நெய் சுமந்த பாத்திரமாக தன்னை கருதிக்கொள்கிறாள். அதனால் தன்னை காட்டினுள் ஒதுக்கி வைத்துக்கொள்கிறாள். //ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். அப்படி செய்தால் எல்லா நாளும் ஒன்றே ஆகிவிடும். எவராவது ஒருநாள் மட்டும் வாழ விரும்புவார்களா?// என்று கஜயனிடம் சொல்லும்போது திடீரென்று இன்று உணர்கிறாள், பார்த்தன் தன்னை விட்டு பிரிந்த பின்னர் இதுவரை வெறும் ஒருநாள் வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறாள் என. அல்லது இதுவரை அவள் வாழவே இல்லையோ? பார்த்தன் முடிந்துபோன கனவு. அவன் இனி அவள் மகனாக முடியாது. அவன் அப்போதும் அவள் மகனாக இருக்கவில்லை. அவனின் பணிப்பெண்ணாக மட்டுமே அவள் இருந்திருக்கிறாள் அவள் ஒரு தாலாட்டைக்கூட அவனுக்காக பாடியதில்லை. ஆம் அவள் அரிய மணியை பாதுகாப்பாக வைத்திருந்த வெறும் நகைப்பெட்டி மட்டுமே. அவன் வளர்ந்து அவளை நீங்கியபொழுது அவள் வாழ்வுக்கென் எப்பொருளும் இல்லாது போகிறது.
கதை கேட்கும் குழந்தையை கவனித்திருக்கிறீர்களா? அப்போது அது பாலருந்தும் குழந்தைபோல் இருக்கும். உலகின் அனைத்து பொருட்களிலும் ஆர்வமிழந்து இதற்காக மட்டுமே தன் வாழ்க்கை என்பதுபோல் அனுபவித்து கொண்டிருப்பது அன்னையிடம் பாலருந்தும் சமயத்திலும், கதை கேட்கும் சமயத்திலும்தான். இன்றுவரை மாலினியின் தாய்மை அவளுள் உறங்கியிருந்தது. இந்தக் காட்டில் அவள் சொல்லும் கதையை ஊன்றி கேட்கும் சுஜயன், பாலை உறிஞ்சிக் குடிக்கும் குழந்தையாய் அவளுக்கு தோன்றி அவளுள் மறைந்திருந்த அவளின் தாய்மையை மலர வைக்கின்றான்
தண்டபாணி துரைவேல்