Sunday, October 25, 2015

மகிழ்வும் சோர்வும்:



காண்டீபம் 39 ன் ஆச்சரியம் துச்சாதனன். என்றுமே அண்ணனுக்கு அடங்கிய தம்பியாக குரல் ஒலிக்காதவனாக வரும் அவன் இன்று அரசு சூழ்தலைப் பேசுகிறான். மிகச் சரியாக களத்தைக் கணிக்கிறான். பீமனை மூத்தவர் என்று அழைத்த போது ஒரு புன்னகை, விம்முதலின் புன்னகை வந்து சென்றது. 

பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் திருமணத்திற்கு பின் நாம் அவர்களை இப்போது தான் சந்திக்கிறோம். எப்படி இருக்கிறார்கள்!! தருமன் தன் எண்ணங்களின் எடையால் தளர்ந்திருக்கிறான். சகோதரர்கள் ஐவரும் ஒன்றாக இல்லை. இப்போது தான் அவர்களின் நகரமும், வாழ்வும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு வித அழுத்தத்தில் இருப்பது போன்றே இருக்கிறார்கள். மாறாக கௌரவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். மகிழ்ச்சியுடனும், உவகையுடனும் இருக்கிறார்கள். 

பாண்டவர்களைத் திருமணம் செய்தவர்கள் அனைவருமே ஒரு வித கட்டாயத்தின் பேரிலேயே - கட்டாயம் என்பது சுயமாக இட்டுக் கொண்டதாகவும் இருக்கிறது, பாஞ்சாலியைப் போல் - திருமணம் செய்து கொண்டனர். அப்பெண்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் குரோதம் கொண்டிருக்கின்றனர். குரோதம் இருக்குமிடம் செயலூக்கமும் கொண்டதாக இருக்கும். புதிய எல்லைகளை அடைந்து அதைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும். சமநிலைக்கு மனம் செய்யும் மாயம் அது. அங்கே இந்திரபிரஸ்தம் அவ்வாறு தான் இருக்கிறது.

அஸ்தினபுரி அதற்கு நேர் மாறாக இருக்கிறது. அங்கே குதூகலம் உள்ளது. பானுமதி, துரியன் காதல் எந்த காவியக் காதலுக்கும் சளைத்ததல்ல. இனிமையான ஆச்சரியம் அசலை தான். வாயாடியாக, துடுக்குத்தனம் மிக்கவளாக வரும் அவள் துச்சாதனனை முழுமையாக்குகிறாள். அந்த மாற்றம் இன்று அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. மகிழ்வும், குதூகலமும் ஒரு வகையில் செயலூக்கத்தைக் குறைத்து விடும். செயலூக்கம் குறைந்த இடம் மெதுவாக மட்கத் துவங்கும். அதைத் தான் கதன் அஸ்தினபுரி அரண்மனையில் காண்கிறான். அனைத்தும் பழையதாக, கதைகளில் கேட்டதற்கு நேர் மாறாக ஒரு வயதான பேரரசரைப் போல இருந்தது என்கிறான். இது மைய அரண்மனையின் விவரிப்பு. ஒரு வகையில் இதை நாம் துரியனுக்கும் பொருத்திப் பார்க்கலாம். இனிய வாழ்வில் தோய்ந்து இருக்கிறான். அவன் அரசு திறமையானவர்கள் கையில். வாழ்வு பானுமதியின் கையில். அடுத்தவரிடம் தன்னை முழுமையாக ஒப்புவித்து தான் ஒன்றும் சுமக்காமல் வாழ்வது என்பதும் ஒரு வரம் தான்!!! துரியன் அனுபவிக்கிறான்!!! 

இவையனைத்துக்கும் உச்சம் இன்றைய இறுதி வரிகள். எளியவர்கள் பெருஞ்செயல் புரிய என்றுமே விழைகிறார்கள். ஆனால் பெருஞ்செயலின் வாயிற்புறத்தில் நிற்கையில் முற்றிலும் தனியராக உணர்ந்து மருகுகிறார்கள். 'Comfort Zone' என்று ஒன்றைச் சொல்வர். அதை நீங்கிச் செல்லும் எவரும் உணரும் தனிமை தான் அது. அதைத் தாண்டுபவர்களால் மட்டுமே செயலாற்ற இயலும். சகோதரர்கள் நூற்றி ஐவரிலும் அர்ஜுனன் மட்டுமே அதைத் தாண்டுவதைத் தன்னறமாகக் கொண்டுள்ளான்!!

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்