Wednesday, October 21, 2015

என்றும் முடியா நெடும் பயணம்


 அர்ச்சுனன் தன் பயணத்தை மீண்டும் துவக்குகிறான். ஏன் அவன் பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறான்? அவன் எதைத் தேடிக்கொண்டிருக்கிறான்?   நிறைவின்மை அவனைத்துரத்துகிறது போலும்.  அவனுக்கு இருப்பது நிறையாப் பெருமனமா? எதைக்கொண்டு அவன் மனதை நிறையவைக்க முடியும். தாயின் அன்பால் அவன் மனம் நிறைக்கப்படாமல் இருந்தது முதற்காரணமாக இருக்கலாம். திரௌபதி பகிர்ந்தளித்த அன்பு அவனுக்கு குறைவாய் தென்பட்டிருக்கலாம். ஆனாலும் உலூபியின் காதல், சித்ராங்கதையின் காதல் என எதுவுமே அவனை நிறைக்க முடியாமல் போகிறது. 

   ஆனால் நாம் மட்டும் என்ன பயணிக்காமல் ஓரிடத்திலா இருக்கிறோம்.  நாம் பல்வேறு வழியில் பயணித்துக்கொண்டு இருக்கிறோம். என்றும் முடிவடையாத  ஒரு பயணம் தான் ஒவ்வொன்றும்.  நாம் செல்வத்தை தேடி பயணிப்பதை நிறுத்தியிருக்கிறோமா?  நம் ஆசைகளை நிறைவு படுத்த என்று கிளம்பிய பயணம் முடிந்துவிட்டது என என்றாவது ஓய்ந்து அமர்ந்திருக்கிறோமா? கல்வி கற்பதான பயணம் முடிவே இல்லாதாது என அனைவரும்  அறிந்த ஒன்று. அத்துடன் ஞானத்தை நோக்கி ஒரு  சிரமமான பாதையில் முட்டி போட்டு தவழ்ந்து என ஒரு சிரமமான பயணம். ஏன் இந்தப் பிறவியே காலமென்ற முடிவற்ற பரப்பில் ஒரு பயணமாக அல்லவா இருக்கிறது. இறப்பிலாவது அப்பயணம் முடிவடைகிறதா எனத் தெரியாதவர்களாக இருக்கிறோம். வந்து சேர்ந்த இடம் சலித்துப்போக  இன்னும் போகா இடம் கவர்ந்திழுக்க என  முகத்துக்கு எதிரே கயிற்றில் கட்டி தொங்க விடப்பட்ட கேரட்டை நோக்கி காலமெல்லாம் பயணித்துக்கொண்டிருக்கும் கழுதைகளாக இருக்கிறோம் நாம்.  நம் மனம் என்ற பிரம்ம கபாலத்தில்   பிச்சை எவ்வளவு போடப்பட்டாலும்  அதை நிறைப்பதேயில்லை. அதை நிறைக்க யாசகனாக நாம், ஒயாத பெரும் பயணத்தில் உழன்றபடி இருக்கிறோம்.


   நிறைவடைந்த ஞானி ஒரிடத்தில் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருக்கிறான்.   அவன் பயணிப்பதே இல்லை. பயணம் செய்து அடையவேண்டியது எல்லாம் அவனிடத்தில் ஏற்கெனவே இருக்கிறது. அவன் காணவேண்டிய எல்லாம் அவன் கண்ணெதிரே வந்தமைகின்றன. அறியவேண்டியவை அனைத்தும் அவன் அறிந்தவனாக இருக்கிறான். அலைகளைப்போல் நாம் ஓடிக்கொண்டிருக்க அவன் அசையாப் பெருங்கடலென வீற்றிருக்கிறான். நாமெல்லாம் சுழன்று ஓடிக்கொண்டிருக்கும் பூமியில் அலைந்துகொண்டிருக்க,  தானென்ற இடம் தவிர்த்து வேறிடம் இல்லாத தனித்த பிரபஞ்சத்தின் மையமென இருக்கிறான் அவன். மேலும்  அவனே அந்தப் பிரபஞ்சமென  நிறைந்தும்  இருக்கிறான்.

தண்டபாணி துரைவேல்