Thursday, October 1, 2015

உலகு சமைத்தல்


   இயற்கையோடு இணைந்து வாழ்தல் ஒரு வாழ்வு முறை.  விலங்குகள் தன் இயல்பை மாற்றிக்கொள்ள முடியாதவை. ஆனால் மனிதர்களுக்கு தன் புத்தியினால் மற்றும் அவன் கைகள், கை விரல்கள் அடைந்திருக்கும் நுட்பமான வளர்ச்சியினால் தன்னை தகவமைத்துக்கொள்ள முடியும். ஆனால் அவன் அப்போது இரண்டு விதங்களில் செயல்படுகிறான். ஒன்று இயற்கையின் வழி அதன் சூழலோடு இணைந்து வாழ்தல். மற்றொன்று இயற்கைச்சூழலை தன் வசதிக்கேற்ப வளைத்து மாற்றியமைத்து வாழ்தல். அப்போது அங்கிருக்கும் மற்ற விலங்ககினங்கள் அவனுக்கு அடிமைகளாகின்றன அல்லது அவற்றை எதிரிகளாக கருதி அழித்து ஒழிக்கின்றான். 

   நகர மற்றும் கிராம மக்கள் எல்லாம் இந்த இரண்டாவது வகையிலேயே தன் சமூகத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.  நகர மக்கள் சுத்தமாக மற்ற விலங்கினங்களை அழித்துவிடுகின்றனர். கிராம மக்கள் ஒரு சில விலங்குகளை மட்டும் தன் அடிமைகளாக வைத்துக்கொண்டு  மற்றவற்றை அழித்துவிடுகின்றனர். ஆனால் காட்டில் வசிக்கும் மனிதர்கள் இயற்கையோடு இசைந்து வாழ்கிறார்கள். விலங்குகளோடு ஒத்துவாழ்வது அங்கு நடக்கிறது.
    
 
விலங்கினங்களுக்கு சம உரிமை கொடுத்து நடத்தும் மனிதர்கள் அதற்கான தகவமைப்பை  எற்றுக்கொள்கிறனர். அதற்காக அவ்விலங்குகள் மனிதர்களைப்போன்று அறிவைப் பெறவேண்டும் என்பதில்லை. உதாரணத்திற்கு life of pi என்ற படத்தில் ஒரு புலி தன் இயல்புடனே இருக்கையிலும் ஒரு சிறுவன் அதனுடன் ஒரு சிறிய படகில் இணைந்து வாழ்வான்.    பாம்புகள் பெருகிப் பரவி இருக்கும் ஒரு சூழலில் ஒரு மனித சமுதாயம் இணைந்து வாழுமென்றால் அது எப்படி இருக்கும். அந்த உலகை தத்ரூபமாக சித்தரிக்கிறார் ஜெயமோகன். அவர் அக்கால நகரங்கள் பலவற்றை மறு நிர்மானம் செய்திருக்கிறார். இப்போது ஒரு உலகையே புதிதாக சமைக்கிறார். 
 
 
இப்படித்தான் பனிமனிதர்கள் நாவலில் ஒரு உன்னத உலகத்தை உருவாக்கியிருப்பார்.  ஏற்கெனவே வெண்முரசில்  இடும்பர்களின் மரக்குடில் உலகம். இப்போது நாகங்களோடு இணைந்து வாழும்  நாகர்களின் உலகத்தை சமைத்திருக்கிறார். அந்த உலக குடில்கள், நாகங்களைப்போல் அவர்கள் பேச்சு பார்வை இருப்பது, நாகங்களும் அவர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து, ஒருவரை ஒருவர் பகைத்துக்கொள்ளாமல் இருப்பது. அவர்கள் குடில்கள்,  வழிபாடு எல்லாம் நாகங்களை சார்திருக்கின்றன. ஒரு வேற்று மனிதரை ஏற்றுக்கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் சடங்கு,  நாகங்கள் அந்த நபரை ஏற்றுக்கொள்கிறதா என சோதிப்பதாக இருப்பது, மிகப் பொருத்தம். முட்டையிலிருந்து வெளிவரும் சிறு பாம்புகள் பார்த்தனை இயல்பாக ஏற்றுக் கொள்வதன் மூலம் அவன் அவர்களில் ஒருவனென கருதப்படுவது தர்க்கரீதியிலும் மிகப் பொருத்தமானது அல்லவா?

     மிக அருமை.  எண்ண எண்ண அவ்வுலகம் கண் முன்னே விரிந்தபடி இருக்கிறது. நானறியாத ஓர் உலகம் இப்போது ஓர் உண்மையாக என் கண் முன்னே எழுகிறது.  கால்களின் நடுவே நாகங்கள் நெளிந்து ஒடும் உணர்வை நான் அடைகிறேன். ஆனால் அதனால் அச்சமில்லை, அவற்றின் மேல் அசூயை இல்லை.  அவற்றின் குழவிகளை கையிலெடுத்து கொஞ்சவேண்டும் என்பது போல மனம் நிறைந்திருக்கிறது.