Monday, October 5, 2015

அசையும் உடலும் அசையா அகமும்


அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

ஒவ்வொரு நாளும் எங்களை அசர அடிப்பதே உள்ளகள் வேலை என்பது எங்களுக்கு தெரியும் ஆனால் முதல் நடத்தில் அசரடிப்பது முற்றும் புதுமை. பெரும் கற்பனை ஆனால் அறிவின் யுத்தம். நன்றி ஜெ.

வண்ணத்தையும் வடிவத்தையும் மாற்றாமல் அசைவுகள் மூலமாகவே எதிரியின் விழிகளில் நமக்கான சித்திரத்தை எழுதிச்செல்கின்றோம் என்பதை அர்ஜுனன் ஃபால்குணையாகும் வழியாக காட்டிச்செல்லும்போது நமக்குள் உள்ள அர்த்தநாரிஸ்வரரை கண்டுக்கொள்ள வைத்தீர்கள். எல்லோருமே ஒவ்வொரு கணமும் இப்படித்தான் இருக்கிறோம். ஆனால் அப்படி இருக்கிறோம் என்பதை அறியாமல் இருக்கிறோம். மிக கூர்மையாக அந்த காட்சியை, மாதொருபாகன் சித்திரத்தை நீங்கள் வரையும்போது ஒட்டுமொத்த மானிடக்கூட்டத்தின் இருமைகள் தகர்ந்து விழுந்து மொத்தமும் மாதொருபாகன் என்ற நினைவெழுந்தது.   

மாபெரும் பாரதவர்ஷத்தின் பெரும்வீரன், பேரழகிகளின் பெரும்காதலன், குன்றவீரத்தின் ஆண்மகன் தன்னை பெண்ணாக்கிக்கொண்டு வாழ்கிறான். அவன் ஃபால்குணை என்னும் அர்ஜுனன். பெண்ணென்று ஒருநாளும் அறியமுடியா உலகத்தில் ஒருத்தி ஆண் என்று வாழ்கிறாள். அவள் மணிபூரநாட்டின் இளவரசன் சித்ராங்கதன். இப்படி ஒரு பெரும் தொலைதூரப்புள்ளிகளை இழுத்து முடிச்சிப்போடுவீர்கள் என்று சிறிதும் நினைக்கவில்லை.

உலூபியுடன் நடந்த கலவியில் தன்னை பெண் என்று உணர்ந்தபோது, முழுமையில் விழுந்து ஆனந்தத்தில் நிறையும் கனநேர இன்பத்தை வாழ்க்கையில் முழுவதும் மீட்டிப்பார்க்க, முழு தாய்மையில் தன்னை கனியவைத்துக்கொள்ள அர்ஜுனன் பெண்வேடம் பூண்டு உள்ளான். இதன் எதிர் திசையில் பெண்மை என்பனை கனவிலும் காணமுடியாத தனிமையில்,  காலம், கடமை, குலம்  சித்ராங்கதனுக்கு ஆண்வேடம் தந்து உள்ளது.

ஃபால்குணையின் தவிப்பறியும் இடத்தில் சித்ராங்கதன் தனது தவிப்பை அள்ளிக்கொட்டிச்செல்கிறான். பாம்பின்கால் பாம்பறியும் என்பார்கள். அது சரியோ தவறோ யார் அறிவார். ஆனால் பாம்புகள்தான் பாம்பையே அறியும் என்று இன்று உணர்கின்றேன். பெண்வேடம் இட்டு நாடு நாடாய் அலையும் அர்ஜுனனின் தவிப்பும், ஆண்வேடம் இட்டு நாட்டைவிட்டு வெளியேற முடியாத சித்ராங்கதன் தவிப்பும் வேறுவேறா?. இந்த இரு அகத்தின் மையத்தில் நின்று இரும்பெரும் பாத்திரங்களை படைக்கும் உங்களை எப்படிப்பாராட்டுவது என்று தெரியவில்லை. கற்பனைக்கு அப்பால் உள்ள ஞானம் இது. 

சித்ராங்கதனின் மெல்லுடலும், பொன்மஞ்சள் கண்களும், சிவந்தசிறு உதடும், மீசை இல்லாதமேல் உதடும். கன்னங்களின் மாதுளைப்பருக்களும் அவனைப்பெண் என்று அர்ஜுனன் அறிய வழிசெய்கிறது. யாரையும் கொன்றுவிடும் சித்ராங்கதன், ஃபால்குணையை ஆண் என்று அறியும் தருணத்தில் அவன்  ஏன் இப்படி? என்று தவித்து கொலையை தவிர்க்கிறான். தனது அகத்திற்கு மிக அருகில் அர்ஜுனனை வைத்துப்பார்ப்பதால்தான் இது நடந்து இருக்கும். காலம் எதிர் எதிர் புள்ளிகளை சேர்த்து வட்டத்தை உருவாக்குகிறதா?  கடவுள் வட்டத்தின் மையத்தில் முளைத்தெழ இந்த வட்டத்தை உருவாக்குகிறாரா?

ஃபால்குணை பெண்வேடம் இட்டபோது இப்படி ஒரு எதிர்புள்ளியிடம் சென்று நிற்பேன் என்று நினைத்து இருக்கமாட்டாள். சித்ராங்கதன் ஆண்வேடம் போட்டபோது இப்படி ஒரு எதிர் புள்ளி தன்னிடம் வந்து நிற்கும் என்று எதிர்ப்பார்த்து இருக்கமாட்டான். காரணம் இல்லாமல் காரியம் இல்லையோ?

ஒவ்வொரு புள்ளியும் தவித்து தவித்து துடித்துக்கொண்டே இருக்கிறது. அதன் எதிர்ப்புள்ளியிடம் சென்று சேரும்போது அவைகளின் தவிப்பு நின்று விடுகின்றது. இரண்டு புள்ளிகளும் இணைந்து ஒரே புள்ளியாகி அசைவின்மையில் நிற்கிறது. அந்த அசைவின்மை நோக்கிதான் வாழ்க்கையி்ன் பயணமோ?

சித்ராங்கதன் அவளை நோக்கி மெல்ல புன்னகைத்து “அத்தவிப்பின் பொருள் என்ன என்று தெரிகிறது” என்றபடி அவளை அணுகிநோக்கி “ ஏனென்றால் நீ முற்றிலும் பெண்ணுமல்ல என்றான்ஃபால்குனை விழிதூக்கி அவனை நோக்கினாள். “உன் உடல் அசைவுகளில் மொழியில் விழியில் பெண்மை நிறைந்துள்ளது. ஆனால் நீ பெண் மட்டுமல்லஅதை நான் அறிவேன்” என்றான்.-காண்டீபம்-20. இந்த இடத்தை சித்ராங்கதன் சொல்லும்போது அவன் ஃபால்குணையின் தவிப்பையா சொல்கிறாள்? தனது தவிப்பை சொல்கிறாள். இந்த வார்த்தைகளை எத்தனையோ பேரிடம் ஃபால்குணைக்கேட்டாலும், இன்று இந்த இடத்தில் சித்ராங்கதன் சொல்லும்போது எத்தனை அர்த்தம் நிறைந்ததாக இருக்கிறது. இந்த உண்மையை ஃபால்குணையிடம் சொல்லியவர்கள் முழுவதும் ஆண்மக்கள் அல்லது முழுவதும் பெண்மக்கள். ஃபால்குணை ஆணா பெண்ணா என்று முழுதும் அறியாதவர்க்ள அவர்க்ள. ஆனால் சித்ராங்கதன் ஆணாகி இருக்கும் பெண். அவன் சொல்லும்போது உண்மை தன் மாசில்லாப்பீடத்தில் இருந்து சொல்கிறது. சித்ராங்கதன் சொல்லும் உண்மை அர்ஜுனன் அறிந்ததுதான் என்றாலும் அதை அதை இன்னொரு உணர்ந்தவர், அதே மனநிலையில் இருப்பவர் சொல்லும்போது எத்தனை அர்த்தம் நிறைந்ததாகிவிடுகிறது. குருவை கண்டடையும் தருணமும், காதலியை கண்டடையும் தருணமும் இப்படித்தான் முளைக்கிறது என்று நினைக்கிறேன்.

உருமாறும் கலை என்பது வண்ணங்களோ வடிவங்களோ மாறுவதல்ல, அசைவுகள் மாறுவதே என்பதை அர்ஜுனன், சித்ராங்கதன் இருவரும் அறிந்து அதை அழகாக நடித்தாலும் அவர்களின் அகத்தின் அசைவை ஆண் என்றோ பெண் என்றோ மாற்றமுடியுமா?
சித்ராங்கதன் ஆண் அசைவுகளுக்குள் உள்ள பெண் அகம் கருணையில் ஃபால்குணனை சிறைவைக்கிறது. ஃபால்குணையின் பெண்அசைவுகளுக்குள் உள்ள ஆண் அகம் வீரத்தில் சித்ராங்கதனை காக்க எழுகிறது.உடம்புக்குதான் வடிவமும் வண்ணமும் அசைவும் அகத்திற்கு அல்ல. 

இரண்டு எதிரெதிர்ப்புள்ளிகள் அசைவது தவிப்பது எல்லாம்  ஒரு புள்ளியாகி அசையாமையை உணரத்தான். அதை காதல் என்கிறோம், அதை வாழ்க்கை என்கிறோம். முக்தி என்கிறோம். எத்தனை எத்தனை வடிவங்களில் வண்ணங்களில் வாழ்க்கை, எல்லாம் வட்டம். ஃபால்குணை, சித்ராங்கதனை வைத்து வரையும் வட்டம் முற்றும் புதியது ஜெ.  

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.